யார் வாயைத் திறக்க வேண்டும்?

யார் வாயைத் திறக்க வேண்டும்? என்ற கதை நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகின்றது.

பச்சையூர் என்ற ஒரு பசுமையான கிராமம் இருந்தது. அதில் பச்சைமுத்து என்ற ஒரு விவசாயி இருந்தார். அவர் வீட்டைக் காக்க நாயையும், வீட்டில் இருந்த தானியங்களை எலிகளிடம் இருந்து காக்க பூனையையும் வளர்த்து வந்தார்.

ஒரு நாள் பூனை பகல் முழுவதும் மியாவ் மியாவ் என்று கத்தி கூச்சலிட்டுக் கொண்டே இருந்தது. இதனால் எலிகள் ஒளிந்து கொண்டன. அன்று இரவிலும் பூனை தொடர்ந்து கூச்சலிட்டது.

பூனையின் சத்தம் நாரசமாய் ஒலித்தது. இதனால் விவசாயி இரவில் சரியாக உறங்கவில்லை.

மறுநாள் காலையில் பச்சைமுத்து கோபத்தில் பெரிய தடியை எடுத்து வந்து “உன்னை யார் இரவில் கத்தச் சொன்னது?. இனி வாயைத் திறந்தால் தொலைத்து விடுவேன்” என்று கூறியபடி தடியால் நாலு சாத்து சாத்தினார்.

இதனைப் பார்த்துக் கொண்டிருந்த நாய் குலை நடுங்கிப் போனது. இனி நாம் வாயைத் திறக்கக் கூடாது என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டது. சிலநாட்கள் சென்றன.

ஒருநாள் இரவு திருடர்கள் பச்சைமுத்து வீட்டிற்குள் திருடுவதற்கு வந்தனர். திருடர்களைப் பார்த்தும் நாய் வாயைத் திறக்க வில்லை.

காலையில் விடிந்ததும் பச்சைமுத்து தன்னுடைய வீட்டில் திருட்டு நடந்திருப்பதை அறிந்தார். ‘இந்த நாய் திருடர்கள் வந்த போது குரைக்க வில்லை. ஏன்?’ என்று மனதிற்குள் எண்ணியவாறு நாயைக் கவனித்தார்.

அது அமைதியாக இருந்தது. கோபத்தின் உச்சியில் ஒருதடியை எடுத்து வந்தார். “நேற்று இரவு நீ வாயைப் பொத்திக்கிட்டு இருந்தாயா?. ஒரு சத்தம் போடக் கூடாதா? குறைக்காத நாயும் ஒரு நாயா?” என்று கூறியபடி தடியால் நாலு சாத்து சாத்தி வீட்டை விட்டு விரட்டினார்.

வீட்டை விரட்டப்பட்ட நாய் “சீ… சீ… என்ன மனிதர்கள் இவர்கள். வாயைத் திறந்து கத்தினாலும் அடிக்கிறார்கள். வாயை மூடிக் கொண்டு இருந்தாலும் அடிக்கிறார்கள்.” என்று வருத்தப்பட்டது.

எப்போது, யார் வாயைத் திறக்க வேண்டும்? யார் அமைதி காக்க வேண்டும்? என்று அந்த நாய்க்கு தெரியவில்லை.

இப்படித்தான் எந்த சூழ்நிலையில் யார் பேச வேண்டும்; யார் பேசக் கூடாது என்பதைத் தெரியாமல் சிலர் நடந்து கொண்டு நாயைப் போல அவதியுறுகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.