ரவா உப்புமா – சிறுகதை

நாலுபக்கமும் களிமண்ணாலான சுவர். அதற்கு மேலே தென்னங்கீற்றாலான கூரை, அடுப்பங்கரைக்கு மட்டும், இரு கீற்று மறைப்பு, இதுதான் எங்கள் வீடு.

குளியலறை வீட்டுக்கு அருகிலேயே ஓடிய அரசலாறு. டாய்லெட் – அரசலாற்றின் ஓரம் உள்ள, செடி கொடிகள் மரங்கள் நிறைந்த காட்டுக் கரை.

டாய்லெட் நேரம் ஆண்கள் காலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள். பெண்கள் மாலை 6.30 மணிக்கு மேல் 7.30-க்குள்.

மேலும் லக்னம், ராசி எல்லாம் அவரவர் இஷ்டம். ஏனெனில் இருட்டு நேரத்தில் பாம்பு, பூச்சிகள் போன்றவற்றால் பின்னால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு அவரவர்கள்தான் பொறுப்பு.

என் கிராமத்தில் இது போல் நிறைய குடும்பங்கள். அதனால் எனக்கு அவமானமா, அய்யோ நம் வீடு இப்படி இருக்கிறதே என்ற கவலையோ பெரிதாய் எதுவும் இல்லை.

பெரும் வசதியோடு இரண்டு மூன்று அறைகள், அட்டாடச்சுடு பாத்ரூம், கட்டில்கள், மெத்தைகள், டிவி, வாஷிங்மிசின், குளிர்சாதனம், கார், மோட்டார் சைக்கிள் என்று இருக்கும் வசதியான வீட்டை சினிமாவிலும், சினிமா பார்க்கப் போகும் நகரத்திலும் பார்த்து ஜொள் ஒழுக நிற்பதோடு சரி.

மற்றபடி இந்த குடிசையில் அப்பா, அம்மா, அக்கா, தங்கை, நான் என நாங்கள் ஐந்து பேரும் உண்டு, உறங்கி வாழ்ந்து கொண்டுதான் இருந்தோம்.

அழையா விருந்தாளியாக வறுமை எப்போதும் எங்களோடு இருந்ததால் எங்கள் வீட்டுக்கு உறவினர்கள் யாரும் வருவதில்லை.

ஆனால் இந்த பழனி சித்தப்பா மட்டும் மாதம் ஒருமுறை கிராமத்தை பார்க்க வேண்டும் என்று வந்து விடுவார். அப்பாவின் ஒன்று விட்ட சொந்தம்.

நல்ல நிறம், நல்ல உயரம். சினிமா நடிகர் ரகுவரன் போல் இருப்பார். எப்போதும் சென்ட் வாசனை வீசும்.

அவர் பெயர்தான் பழனி; வேலை செய்வது சென்னை. கல்யாணம் பண்ணாத கட்ட பிரம்மச்சாரி.

ப‌ழனி சித்தப்பா வந்துவிட்டால் எங்களுக்கு தீபாவளி, பொங்கல் எல்லாம் ஒன்றாக வந்தது போல்.

வரும் போதே சென்னையிலிருந்து வகை வகையான திண்பண்டங்கள், வந்த பின்பு தினமும் பேட்டா என்று களை கட்டும்.

ஆனால் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை வந்து விடும், காரணம், வந்த விருந்தாளிக்கு என்ன சாப்பாடு செய்து போடுவது என்ற பிரச்சினைதான்.

சித்தப்பா, மதியம் ஒரு வேளை மட்டும் தான் அரிசி சாப்பாடு சாப்பிடுவார். காலையிலும், மாலையிலும் டிபன் தான். எங்கள் வீட்டில் மூன்று வேளைக்கும் சோத்துப் பானை தான் பிரதானம்.

வேறு எந்த பலகாரத்திற்கும் வாய்ப்பும் இல்லை. இட்லி தோசைகூட விசேச நாட்களில் தான்.

இப்பொழுது கிடைப்பதுபோல் இட்லி மாவெல்லாம் அப்போது கடையில் கிடைக்காது.

ஸ்விக்கி, சமோட்டோ போன்ற நவ நாகரிகம் இல்லாத காலத்தில் சித்தப்பாவுக்கு டிபன் செய்வதில் ஏகப்பட்ட சிக்கல்கள். இந்த சமயங்களில் எங்களுக்கு கைக்கொடுப்பது ரவாவும் சேமியாவும் தான்.

காலையில் சேமியா உப்புமா, இரவில் ரவா உப்புமா டிபன். மதியம் சாம்பார், ரசம் வைத்து பாரம்பரிய‌ சாப்பாடு என்று விருந்தாளியைச் சமாளிப்போம்.

இப்படித்தான் ஒரு இரவில் பழனி சித்தாப்பாவுக்கு ரவா உப்புமா ஏற்படாயிற்று. அம்மா அன்றும் கோபத்தில்தான் இருந்தாள். அப்பா எண்ணெய் வாங்கமல் வந்துவிட்டார்.

இருக்கிற எண்ணெயில்தான் ரமா உப்புமா செய்ய வேண்டும். ரவையில் வேறு நிறைய புழு பூச்சிகள். பழைய ரவை போலும். அம்மா அப்பாவையும் ரவையையும் சன்னமாக‌ வறுத்துக் கொண்டிருந்தாள்.

எப்படியோ உப்புமா தயார் செய்து சித்தப்பாவுக்கு பரிமாறி முடிந்தது. எப்போதும் போல் வெளியில் கயிற்று கட்டிலில் சித்தப்பா தன் சிறிய பிலிப்ஸ் ரேடியோவை தலைமாட்டில் வைத்து படுத்து கொண்டார். நாங்கள் உள்ளே படுத்து உறங்கி விட்டோம்.

அம்மாவின் கோபம் மற்றும் பூச்சிகள் கலந்து செய்த ரவா உப்புமா சரியாக செரிக்காமல், சித்தப்பாவை இரவு முழவதும் தூங்க விடாமல் செய்துள்ளது. வயிறு ரொம்ப வலித்து, கலக்கி அவரை நிலை குலைய செய்துள்ளது.

அந்த நள்ளிரவில் காட்டுக்கரைக்கு போவது, கிராமத்தில் வசிக்கும் வீராதி வீரர்களுக்கே முடியாத காரியம் என்றால், எந்த பரிச்சயமும் இல்லாத சித்தப்பா பாவம் என்ன செய்வார்?

வயிற்று வலி முடியாமல், எங்களையும் எழுப்ப மனமில்லாமல், வீட்டுக்கு முன்பாக இருந்த நடைபாதையில் சம்பவத்தை நிகழ்த்தி விட்டார்.

ஒருமுறை இல்லை பல முறை. இரவு முழுவதும், பாதை நெடுகிலும் இந்த ரவா உப்புமா இவரை உட்கார வைத்து அழகு பார்த்து இருக்கிறது.

சித்தப்பா, எப்படா விடியும் என்று காத்திருந்து, மண்வெட்டி மூலம் எல்லாம் வாரி தோட்டத்தில் எறிந்து, அரசலாற்றில் போய் குளித்து, துவைத்து, உடை மாற்றி வந்து கட்டிலில் சோர்வாய் அமர்ந்து இருந்தார்.

அப்பா காலையிலேயே வெளியில் போய் விட்டார். அம்மா, சித்தப்பாவுக்கு, எங்களுக்கெல்லாம் காபி போட்டு கொடுத்தாள். சித்தப்பா அவருக்கு இரவு நேர்ந்த சம்பவங்களை, நாசுக்காக அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அம்மாவும் ஏதோ கஷாயம் போட்டுத் தருவதாக ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

சித்தப்பா இரவு முழுவதும் வயிற்று கோளாறால் தூங்காமல் இருந்ததால் ரொம்ப சோர்வாகக் காணப்பட்டார். மறுபடியும் அந்த கட்டிலிலேயே சுருண்டு படுத்து விட்டார்.

கொஞ்ச நேரத்தில் அப்பா ஒரு மளிகைச் சாமான்கள் பையுடன் வந்தார். பையை அம்மா கையில் கொடுத்துவிட்டு, சித்தப்பாவுடன் கட்டிலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

அம்மா, மளிகை சாமானை பார்த்து அரண்டு போய் அப்பாவை “கொஞ்சம் உள்ளே வர்றீங்களா?” என்று பெருங்குரல் எடுத்து கோபமாக கூப்பிடவே நாங்கள் எல்லோரும் பயந்து விட்டோம்.

விசயம் என்னவென்றால், முறைப்படி காலை டிபனுக்கு சேமியா தான். ஆனால் அப்பா மறுபடியும் அதே ‘ரவா’வை வாங்கி வந்து விட்டார்.

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் போர் மூண்டது.

“ராத்திரி செய்த ரவா உப்புமாவில் ஒருத்தன் ராத்திரி பூரா தூங்காம பாட்டுப்பாடி ஓஞ்சிருக்கான். எதுவும் தெரியாத துப்புக்கெட்ட மனுஷன், காலையில மறுபடியும் அந்த கசத்தை வாங்கிட்டு வந்துருக்கீங்க. என் தலையில் உங்கள கட்டி வச்சுட்டு, நா பாடா படறேன்.” அம்மாவின் வழக்கமான தாக்குதல்கள்.

“அங்க ஒங்கப்பன்னா கடை வச்சிருக்கான்? கிடைச்சது தானே வாங்கிட்டு வரமுடியும்.” அப்பாவி அப்பாவின் பதிலடி.

“எங்கப்பாவை பத்தி பேசினீங்க, அப்புறம் நடக்கிறது வேற” அம்மாவின் அவுங்க அப்பா பாசம் பிளஸ் ஆவேசம். சண்டை சூடு பிடித்தது.

“வெளியில இருக்கிற மனுச‌னுக்கு கேட்க போவுது; சத்தம் போடாத” என்று அம்மாவை அப்பா கெஞ்சினார்.

ஆனால் வெளியில் கட்டிலில் படுத்திருந்த சித்தப்பாவுக்கு எல்லாம் நன்றாக கேட்டது. நம்மால்தான் இந்த சண்டை என்று சித்தப்பா ரொம்பவும் யோசிக்கலானார்.

சண்டையின் முடிவில் மறுபடியும் ரவா உப்புமாதான் என்று உள்ளே முடிவானது.

வெளியே சித்தப்பா பெரும் கலவரத்திற்கு உள்ளானார்; திடீரென்று எழுந்தார். அடப் பாவிகளா மறுபடியும் ரவா உப்புமாவா, நம்மள கொல்றதுக்கு முடிவு பண்ணிட்டாங்கனு பதறிப் போய்விட்டார்.

எட்றா வண்டிய மொமெண்ட்! துணிமணிகள் மற்றும் அவருடைய பொருட்களையெல்லாம் எடுத்து தன்னுடைய சூட்கேஸில் திணித்தார்; கிளம்பி விட்டார்.

அப்பாவிடமும் அம்மாவிடமும் நான் சிட்டியில் போய் டாக்டரைப் பார்த்து விட்டு சென்னைக்கு போகிறேன். ஆபீஸ் வேலை நிறைய இருக்கு. ஏன்று சொல்லிக் கொண்டே வேகமாக நடக்க ஆரம்பித்து விட்டார்.

அப்பாவும் அம்மாவும் சாப்பிட்டு விட்டு போகும்படி வற்புறுத்தி கொண்டே அவர் பின்னாடி ஓடினார்கள்.

“பரவாயில்லை அண்ணி, இப்ப பசிக்கல” என்றபடியே சித்தப்பா தன் நடையின் வேகத்தைக் கூட்டினார்.

பின்னால் அப்பாவும் அம்மாவும் ரவா உப்புமாவை தட்டில் வைத்துக் கொண்டு தம்மை துரத்துவது போன்ற உணர்வு போலும் சித்தப்பாவுக்கு. சிட்டாய் பறந்து விட்டார்.

அதன்பின் பழனிச் சித்தப்பா எங்கள் வீட்டுக்கு வரவேயில்லை.

ரொம்ப வருடம் கழித்து, அவர் இறந்து விட்டார் என்ற துக்கச் செய்திதான் வந்தது.

காலம் மாறி விட்டது. இப்போது மூன்று, நான்கு அறைகள், கெஸ்ட் பாத்ரூம், அட்டாச்சு பாத்ரூம் என பெரிய வீடு இருக்கிறது. டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் நன்கு சுத்தம் செய்யப்பட்ட ‘நாகா’ ரவையும் கிடைக்கிறது.

இருப்பினும், எப்போதெல்லாம் ரவா உப்புமா செய்கிறோமோ, அப்போதெல்லாம் பழனி சித்தப்பா ஞாபகமும், அந்த ஓலைக்குடிசையும், அவருக்கு அந்த இரவில் செய்து கொடுத்த ரவா உப்புமாவும், கொஞ்சம் சிரிப்பும் வருத்தமாய் வந்து போகும்.

முனைவர் க. வீரமணி
சென்னை
கைபேசி: 9080420849

One Reply to “ரவா உப்புமா – சிறுகதை”

  1. எதார்த்தம் சிறுகதையில் மிக அற்புதமான ஒரு பங்கை வகிக்கிறது.
    சித்தப்பாவும் இரவில் அவரின் வேதனையும் அற்புதமாக நகைச்சுவையுடன் கதையில் கூறப்பட்டிருப்பது சிறப்பாகும்.
    உணர்வுகளின் திருவிளையாடல்கள் சிறுகதையை அலங்கரிக்கின்றன.
    ஏழ்மையும் பாசமும் சிறப்பாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
    சிறுகதை பாத்திரங்கள், ஊர் சிறப்பு, குணநலன் எல்லாம் அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.