“ஏன்யா அடிக்கடி ஆபீஸ்க்கு லீவு போடுற? நீ லீவு போடுறதுனால எவ்வளவு வேலை கெட்டுப் போகுது தெரியுமா?” மேலதிகாரி வாசுதேவன் அரவிந்தை திட்டினார்.
“சார்! எனக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கு. அதனால ராத்திரியானா தண்ணி அடிக்கிறேன். விடிஞ்சா ஒரே தலைவலி. அதான் லீவு போடுறேன்.” எந்த கூச்சமும் இல்லாமல் சொன்ன அரவிந்தை, மேலும் கீழும் பார்த்தார் வாசுதேவன்.
“சாயங்காலம் என் வீட்டுக்கு வா, உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்” அன்று மாலை வாசுதேவனோடு அவரது வீட்டுக்கு சென்றான் அரவிந்த்.
“உன் பிரச்சனைய இப்ப சொல்லு”
“சார் என் புள்ளைக்கு அடிக்கடி உடம்பு சரி இல்லாம போயிடுது. ஆஸ்பத்திரிக்கு என் மனைவி கொண்டு போனாலும் என் மனசுல அது பாரமா இருந்து என்ன சித்திரவதை பண்ணுது. அதான் சார் குடிக்கிறேன்” அரவிந்தை அழைத்துக் கொண்டு நடு அறைக்கு வந்தார் வாசுதேவன்.
அங்கே அவன் கண்ட காட்சி அவனை அதிர வைத்தது. மேலதிகாரியின் மனைவி எலும்பும் தோலுமாக படுத்திருந்தாள்.
“என் மனைவிக்கு கேன்சர் நோய் வந்து இன்னைக்கோ நாளைக்கோன்னு கிடக்கிறா. இத நெனச்சு நான் குடிக்க ஆரம்பிச்சா ஆபீசுக்கு ஒழுங்கா வந்திருக்க முடியாது.” என்றார் வாசுதேவன்.
அதனைக் கேட்ட அரவிந்த் தலை குனிந்தான். அதன் பிறகு அவன் குடிப்பதுமில்லை, அலுவலகத்திற்கு லீவு போடுவதும் இல்லை.
எம்.மனோஜ் குமார்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!