லெமன் டீ வித்தியாசமான சுவையில் அசத்தலான டீ ஆகும். இது புத்துணர்ச்சியுடன் உண்ணும் ஆர்வத்தையும் தூண்டக்கூடியது.
பாலில் செய்யப்படும் டீயை விரும்பாதவர்கள் கூட இதனை விரும்பி உண்கின்றனர். இதில் மிளகு, ஏலக்காய் சேர்க்கப்படுவதால் தொண்டைக்கு இதமானதாகவும் திகழ்கிறது.
இனி எளிய முறையில் சுவையான லெமன் டீ செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தண்ணீர் – 2 டம்ளர்
பச்சை ஏலக்காய் – 2 எண்ணம்
இஞ்சி – 1 இன்ஞ்
மிளகு – 10 எண்ணம்
டீத்தூள் – 1 டீஸ்பூன்
நாட்டுச்சர்க்கரை – 3 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
செய்முறை
இஞ்சியை தோல் நீக்கிச் சுத்தம் செய்யவும்.
எலுமிச்சையை நறுக்கி விதையை நீக்கி சாறு பிழிந்து கொள்ளவும்.
இஞ்சி, பச்சை ஏலக்காய் மற்றும் மிளகு ஆகியவற்றை ஒருசேர நன்கு நசுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அதனுடன் 1 டீஸ்பூன் டீத்தூளைச் சேர்த்துக் கொள்ளவும்.
அதனுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.


பின்னர் அதனுடன் நசுக்கிய இஞ்சி, பச்சை ஏலக்காய் மற்றும் மிளகு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
மூன்று முதல் நான்கு நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்கவும்.

பின்னர் கொதிக்க வைத்த டீயை வடிகட்டவும்.

அதனுடன் பிழிந்த எலுமிச்சை சாற்றினைச் சேர்த்து கலக்கவும்.
சூடாக பரிமாறவும்.

சுவையான லெமன் டீ தயார்.
இதனை காலை, மாலை வேளைகளில் தயார் செய்து உண்ணலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் நாட்டுச் சர்க்கரைக்குப் பதிலாக வெள்ளைச் சர்க்கரையைப் பயன்படுத்தலாம்.
எலுமிச்சையை சாறு பிழிவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு குளிர்ந்த தண்ணீரில் போட்டு வைத்து விட்டு சாறு பிழிந்தால் நிறைய சாறு கிடைக்கும்.
வயிறு உப்பலாக இருக்கும் சமயங்களில் இதனைத் தயார் செய்து உண்ண நல்ல செரிமானம் ஏற்படும்.
தேநீரை உன்ன முடியாதுங்க, பருக தானே முடியும்….