வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை என்ற பழமொழியை வேங்கை வேலன் புதருக்குள் பதுங்கி இருந்தபோது கேட்டது.
வேங்கை வேலவன் புதரிலிருந்து எட்டிப் பார்த்தபோது வயதான பாட்டி ஒருத்தி பெண்கள் கூட்டத்தில் கூறுவது தெரிந்தது. பழமொழி பற்றி வேறுஏதேனும் தகவல்கள் கிடைக்கிறதா என்று வேங்கை வேலவன் கூட்டத்தினரை கவனிக்கலானது.
கூட்டத்தில் இருந்த இளம்பெண் ஒருத்தி “பாட்டி எந்த வேலைக்கும் லாயக்கி இல்லாதவர்கள்தான் வாத்தியார் வேலையிலும், போலீஸ் வேலையிலும் இருக்கிறார்களா?” என்று கேட்டாள்.
அதற்கு பாட்டி “இந்த பழமொழிக்கான அர்த்தம் அப்படியல்ல. ஆசிரியர்களை தெய்வமாக போற்றும் நம் முன்னோர்கள் இது போன்ற இழிவு படுத்தக்கூடியப் பழமொழிகளை கூறியிருப்பார்களா?.
‘ஸ்காட்லாந்து யார்டு’ காவலர்களைவிட தமிழக காவலர்கள் திறமை வாய்ந்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் நம் தமிழ்ப் பரம்பரை இப்படிப்பட்ட ஒரு பழமொழியை கூறியிருக்குமா?. இப்பழமொழி பற்றி விளக்குகிறேன் கேளுங்கள்” என்று கூறினார்.
வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை
பழமொழியின் முதல் பாதியான வக்கற்றவனுக்கு வாத்தியார் வேலை என்பது குறித்து முதலில் கூறுகிறேன்.
‘வாக்கு’ என்பது அனைவருக்கும் அமையக் கூடியது இல்லை. இதனையே ‘வாக்கினிலே தெளிவும் வேண்டும்’ என்றார் பாரதி.
ஆசிரியர் தொழிலில் ஈடுபடும் ஒருவருக்கு வாக்கு என்பது அவசியமானது. இப்படிப்பட்ட வாக்கினை தெளிவாக கற்று அறிந்தவர்கள்தான் ஆசிரியர்களின் வேலைக்கு லாயக்கு என்பதால் ‘வாக்குக் கற்றவனுக்கு வாத்தியார் வேலை’ என்ற பழமொழியின் முதல்பாதி உருவானது.
காலப் போக்கில் இது மருவி வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை” என்று கூறினாள்.
அப்போது மழை பெய்யத் தொடங்கியதால் எல்லோரும் அவ்விடத்தை விட்டு சென்றார்கள். வேங்கை வேலவனுக்கு மழையின் மேல் கோபம் வந்தது. இருந்தாலும் காட்டில் வட்டப்பாறையை நோக்கி வேகமாக ஓடியது.
அன்றைக்கு காக்கை கருங்காலன் ஏற்கனவே வட்டப்பாறையில் எல்லோருக்காகவும் காத்திருந்தது. வேங்கை வேலவன் காக்கை கருங்காலனிடம் பழமொழியைக் கூறி அப்பழமொழியின் பாதிக்கு மட்டுமே விளக்கம் தெரிவதையும் தெரிவித்தது.
காக்கை கருங்காலனும் தான் மீதிப் பழமொழிக்கான விளக்கத்தை கூட்டத்தில் தெரிவிப்பதாக கூறியதைக் கேட்ட வேங்கை வேலவன் மகிழ்ச்சியடைந்தது.
போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை
மாலை வேளை நெருங்கியதும் எல்லோரும் வட்டபாறைக்கு வருகை தந்தனர். காக்கை கருங்காலன் எழுந்து “என் அருமை குழந்தைகளே, குட்டிகளே உங்களுக்கு இன்றைக்கு வேங்கை வேலவன் வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை என்ற பழமொழியையும், பழமொழிக்கான பாதி விளக்கத்தையும் கூறுவான். நான் மீதிக்கான விளக்கத்தை கூறுகிறேன்.” என்று கூறியது.
வேங்கை வேலவனும் தான்கேட்டது முழுவதையும் விளக்கிக் கூறியது. காக்கை கருங்காலன் “இரண்டாவது பாதியான போக்கற்றவனுக்கு போலீஸ் வேலை என்பதில் போக்கு கற்றவனுக்கு அதாவது போக்கு என்பது நடவடிக்கை (மனிதப் போக்கு – மனிதர்களின் நடவடிக்கை) என்று பொருள் கொள்ளலாம்.
இவ்வாறு ‘போக்குகள் குறித்து அறிந்தவனுக்கே போலீஸ் வேலை’ அதாவது ஒருவனின் குணத்தை அவனது நடவடிக்கையை வைத்து அறியும் திறன் படைத்தவனுக்கே போலீஸ் வேலை என்ற பொருளில் உண்டான இந்தப் பழமொழியின் மறுபாதி போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை’ என மாறிவிட்டது.
குழந்தைகளே இந்த பழமொழியில் வாக்கினைக் கற்றவன், போக்கினைக் கற்றவன் ஆகியவை மருவியதால் பழமொழிக்கான அர்த்தமும் மாறியதை பார்த்தீர்கள்தானே. எனவே எப்போதும் தெளிவாகப் பேசப்பழக வேண்டும். சரி நாளை மற்றொரு பழமொழி பற்றிப் பார்ப்போம்” என்று கூறி எல்லோரையும் வழியனுப்பியது.
– இராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942