வங்கிக் கணக்கு ஆரம்பிக்கும் முன்பு எந்த வங்கியில் கணக்கு ஆரம்பிக்க வேண்டும் எனத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
எல்லா வங்கிகளுமே இன்று ஓரளவு சிறப்பான சேவைகளை அளிக்கின்றன.
ஒரு வங்கியைத் தேர்வு செய்யுமுன் அது அரசாங்கத்தினுடையதா இல்லை தனியார் வங்கியா என்பதையும், அதன் சேவை எப்படி இருக்கின்றது என்பதையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள், அந்த வங்கியின் கிளைகள் எந்தெந்த ஊர்களில் எல்லாம் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் வங்கிக் கணக்கில் குறைந்தபட்சம் எவ்வளவு பணம் இருக்க வேண்டும் என வங்கி வலியுறுத்துகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நம்மால் ஒருவேளை அந்த குறைந்தபட்ச தொகையை ஒருமாதம் வைத்திருக்க முடியாவிட்டால் எவ்வளவு அபராதம் போடுவார்கள் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
வெளியூர்களில் உள்ள வங்கியின் கிளைகளில் பணம் போட்டாலோ, எடுத்தாலோ எவ்வளவு பணம் பிடிப்பார்கள் என்பதை அறிய வேண்டும். மேலும் வேறு எந்த விதமான சேவைக்கட்டணங்கள் வரும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் ஒவ்வொரு வங்கியிலும் பலவிதமான கணக்குகள் இருக்கும். உங்களுக்கு ஏற்ற கணக்கு வகை எதுவென்று தயங்காமல் வங்கி அலுவலரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுடைய அடையாளச் சான்று, முகவரி சான்று மற்றும் தேவையான பணத்தோடு வங்கிக்குச் செல்லுங்கள். வங்கி அலுவலர் தரும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுத்துப் பணத்தையும் கட்டுங்கள். உடனடியாகவோ ஓரிரு நாளிலோ உங்களுக்கு வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு கணக்கு எண் உங்களிடம் கொடுக்கப்படும்.