ஞாயிற்றுக் கிழமை மாலை ஏழு மணி இருக்கும். ஆசிரியர் வேதிவாசனின் திறன்பேசியில் (Smart Phone) மணியோசை ஒலிக்கத் தொடங்கியது.
“யாராக இருக்கும்?” என நினைத்துக் கொண்டே தனது அறையில் இருந்து வெளியே வந்தார் வேதிவாசன்.
அலமாரியில் இருந்த (ஒலித்துக் கொண்டிருந்த) திறன் பேசியை எடுத்துப் பார்த்தபோது தெரிந்தது, அழைப்பது அவரது நண்பர் கணித நேசன் என்பது. உடனே அழைப்பை ஏற்றார்.
வேதிவாசனுக்கும் கணிதநேசனுக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலை இனிக் கேட்போம்.
வேதி: (அழைப்பை ஏற்ற உடன்) அய்யா, வணக்கம்.
கணி: வணக்கம் வணக்கம். ஏதேனும் வேலையா இருக்கீங்களா? இப்போ பேசலாமா?
வேதி: சொல்லுங்கய்யா…. பேசலாம்….
கணி: சாப்பிட்டீங்களா?
வேதி: இல்லைங்க… இனிமேதான்… நீங்க?
கணி: இல்லைங்க… நானும் இனிமேதான் சாப்பிடனும். வேணும்னா அப்புறம் கூப்பிடவா?
வேதி: பரவாயில்லை. என்னன்னு சொல்லுங்க?
கணி: மதியம் இணையத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு சஞ்சிகையை (பத்திரிக்கை) படிச்சிகிட்டு இருந்தேன். அதில் ஒரு ‘விஞ்ஞான புதிர் கேட்டிருந்தாங்க’. அது குறித்துத்தான் பேசனும்….
வேதி: விஞ்ஞான புதிரா? சொல்லுங்களேன்!
கணி: உம்ம் சொல்றேன்.
இறகுண்டு எலும்பில்லை; நிறமியில்லா நிறங்களுமுண்டு; அழகான இறகாலே இருக்கும் வரை பறந்திடுமே!
என்ன கண்டுபிடிச்சிட்டீங்களா?
வேதி: உம்ம்……. கொஞ்சம் யோசிக்கனுமே…..
கணி: நான் ஓரளவு கண்டுபிடிச்சுட்டேன். ஆனா ஒருசந்தேகம். அது தீர்ந்ததுனா விடையை உறுதிப்படுத்திடுவேன். அதான்….
வேதி: நல்லது. சந்தேகத்தைச் சொல்லுங்களேன். முயற்சி பண்ணுவோம்.
கணி: எலும்பு இல்லாத இறகு; நிறங்களுடன் காட்சியளிக்கும் அழகான இறகு; இவையெல்லாம் வண்ணத்துப் பூச்சிக்கு உண்டான பண்புதான்.
ஆனால் நிறமியில்லா நிறங்களும் உண்டுன்னு சொல்லியிருக்காங்களே? அதனாலதான் சந்தேகம்.
வேதி: (கணிதநேசன் சொன்னதும் வேதிவாசனுக்குப் புரிந்து விட்டது. அதனால் உடனே) அய்யா, நீங்க சொன்ன மாதிரி அது வண்ணத்துப் பூச்சிதான்.
கணி: எப்படின்னு சொல்லுங்க. எனக்கு தெரிந்து நிறத்திற்கு நிறமிகள் இருக்குனும். உதாரணத்திற்கு இரத்தம் சிவப்பு நிறத்தில் இருப்பதற்கு காரணம் ஹீமோகுளோபின் நிறமி தானே? இது இல்லை எனபதால் தானே கரப்பான் பூச்சியின் இரத்தம் வெள்ளையா இருக்கு?
வேதி: நீங்க சொல்றதும் சரிதான். பொதுவாக ஒரு பொருளின் நிறத்திற்கு காரணமா இருப்பது அதிலிருக்கும் நிறமியே. ஆனா வண்ணத்துப் பூச்சியின் பல வண்ணங்களுக்கு நிறமி மட்டுமே காரணமாக இருப்பதில்லை.
கணி: உம்ம்ம்… (ஆர்வத்துடன்கேட்டுக்கொண்டிருந்தார்)
வேதி: வண்ணத்துப் பூச்சியோட நிறங்களுக்கு அதன் இறகில் இருக்கும் நானோ கட்டமைப்புகூட காரணமாக இருக்குது.
கணி: என்ன நானோ கட்டமைப்பா? வண்ணத்துப் பூச்சியிலும் நானோ பொருள் இருக்கா?
வேதி: ஆமாங்க. அதோட இறகுகளில் உயிரி பலபடி மூலக்கூறுகள் இருக்கு. அதுதான் நானோ வடிவத்தில் அமைந்திருக்கு.
கணி: உயிரி பலபடிகள் இருக்கு சரி. அது நானோ கட்டமைப்பில் இருப்பதால நிறங்கள் எப்படி தோன்றுது? விளக்கமா சொல்லுங்களேன்.
வேதி: அய்யா, அதாவது ஒளி அலைகள் விளிம்பு மற்றும் பிரதிபலிப்பு விளைவுகளுக்கு உட்படும்ன்னு நாம அறிவோம். இல்லையா?
கணி: (உடனே) ஆமாம். இயற்பியலில் படிச்சிருக்கோமே!
வேதி: அதேதான் இங்கும் நிகழுது. அதாவது (சூரியக் கதிர்கள்) ஒளி அலை, சிறகுகளில் இருக்கும் உயிரி பலப்படி நானோ கட்டமைப்புகளில் விழ, குறிப்பிட்ட அலை நீளமுடைய ஒளி அலை மட்டும் எதிரொளிக்கப்படுது.
உதாரணமா ஒரு வண்ணத்துப் பூச்சி நீல நிறத்தில் காட்சியளித்தால் அதற்கு காரணம் அது நீல நிறத்தை மட்டும் எதிரொளிக்கும்.
பல படி நானோ கட்டமைப்புகளில் பட்டு, விளிம்பு அல்லது பிரதிபலிப்பு அடையும் கதிர்களின் கோணம் வேறுபட, அதன் நிறமும் மாறும். அதனால பல வண்ணங்களில் வண்ணத்துப் பூச்சி இருக்குது.
கணி: சுவாரசியமா இருக்கு. மிக்க நன்றி வேதி.
வேதி: எதுக்குங்க? சரி கேட்க மறந்துட்டேன். அந்த சஞ்சிகையோட பேரைச் சொல்லவில்லையே?
கணி: இனிது
வேதி: மிக்க இனிது
உரையாடல் முற்றிற்று.
சென்னை, அலைபேசி: 9941091461
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!