வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டது போல என்ற பழமொழியை வயதான பெண்மணி கூறுவதை காட்டுவான்கோழி கனகா கேட்டது.
“ஆகா இன்றைக்கு நாம் கூறுவதற்கு பழமொழி கிடைத்து விட்டது. இப்பழமொழிக்கான பொருளும் நமக்கு தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்று மனதிற்குள் எண்ணியது.
அப்போது கூட்டத்தில் இருந்த இளம்பெண் ஒருத்தி “பாட்டி இந்தப் பழமொழியை வயது வந்த பெண்களை பெற்றவர்கள் அடிக்கடி கூறுவதைக் கேட்டிருக்கிறேன். இந்த பழமொழிக்கான விளக்கம்தான் என்ன? நீங்கள் கூறுங்களேன்.” என்று கூறினாள்.
அதனைக் கேட்ட காட்டுவான்கோழி கனகா “நாம் இந்த பழமொழியின் விளக்கம் கிடைத்ததும் வட்டப்பாறையில் இன்றைக்கு எல்லோரிடமும் இதனைச் சொல்லி அசத்தி விடவேண்டும்.” என்று மனதிற்குள் மகிழ்ந்தது.
பழமொழிக்கான விளக்கம்
பாட்டி “இந்த பழமொழி உருவான கதையோ வேறு விதமானது. அதனை விளக்கிக் கூறுகிறேன். குளிர்ப் பிரதேசங்களில் பெரும் குளிர் காலங்களில் அதிகமான குளிரிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக சிறு குடுவைகளில் கங்குகளை (நெருப்பை) போட்டு வைப்பர்.
நெருப்பு போடப்பட்ட அக்குடுவைகளில் ஒன்றினை கயிறு கட்டி தோளில் அந்தக் கயிற்றை படுமாறு கழுத்தை சுற்றி துண்டு போடுவது போல போட்டுக் கொள்ளவர்.
அதற்கு மேல் கம்பளியால் ஆன உடைகளை அணிந்து வெளியே வருவர். இதைக் கண்ட ஒருவர் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டது போல என்று கூறினார். இது நாளடைவில் வேறு விதமான பொருளைக் குறிக்கும் வகையில் வழங்கலாயிற்று!
நம்மில் பசியால் வாடும் சிலரை ‘வயிற்றில் ஈரத் துணியைக் கட்டு’ என்று கூறுவதைக் கேட்கலாம். இந்த இரு பழமொழிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சில உண்மைகளைப் புரிந்து கொள்ளலாம்.
பசி என்னும் தீயை அணைக்க ஈரத்துணியை போடவேண்டும் என்று ஆறுதல் கூறும் நம் மக்கள் ஈரத்தை அதாவது குளிரை விரட்டத்தானே நெருப்பை கட்டிக்கொள்ள சொல்லி இருக்க வேண்டும்.
ஆனால் இடையில் சிலரால் கருத்துகளை சிதைத்து பொருளை மாற்றி இன்று தவறாக கூறிவரும் பழமொழிகளில் இதுவும் ஒன்றாக மாறி விட்டிருக்கிறது. இது மிகவும் வருந்த தக்கது.” என்று கூறினாள்.
பழமொழியின் விளக்கம் கிடைத்தவுடன் காட்டுவான்கோழி கனகா காட்டின் வட்டப்பாறையை நோக்கி ஓடியது. வட்டப்பாறையில் எல்லோரும் வழக்கமாகக் கூடியிருந்தனர்.
காக்கை கருங்காலன் “என் அருமைக் குஞ்சிகளே, குட்டிகளே உங்களில் யார் இன்றைக்கான பழமொழியைக் கூறப்போகிறீர்கள்?” என்று கேட்டது.
காட்டுவான்கோழி கனகா எழுந்து “தாத்தா நான் இன்றைக்கு வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டது போல என்ற பழமொழியைக் கூறப்போகிறேன்.” என்று தான் கேட்டது முழுவதையும் விளக்கிக் கூறியது.
காக்கை கருங்காலனும் “என் அருமைச் செல்லங்களே. கனகா கூறியது புரிந்தது தானே. நாளை மற்றொரு பழமொழி பற்றிப் பார்ப்போம்” என்று கூறி எல்லோரையும் வழியனுப்பியது.
மறுமொழி இடவும்