மல்லபுரம் என்ற ஊரில் கண்ணப்பர் என்ற செல்வந்தர் இருந்தார். அவருக்கு கதைகள் கேட்பது என்றால் மிகவும் பிடிக்கும். அவர் தனக்கு கதை சொல்லி தன்னை திருப்திபடுத்திவிட்டால் அவர்களுக்கு லட்சம் ரூபாய் பரிசளிப்பதாக அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பினைக் கேட்ட பலரும் கண்ணப்பருக்கு கதை சொல்ல முன்வந்தனர். அவர்களிடம் கதைகளைக் கேட்டபின் ஒவ்வொரு கதையின் முடிவிலும் இது உண்மையாக இருக்காது என்று கூறி அவர்களை வெறும் கையுடன் திருப்பி அனுப்பி விடுவார் கண்ணப்பர்.
கதை சொன்னவர்களை திருப்பி அனுப்பியவுடன் தனது மனைவியிடம் “என்னை வெல்ல யாரும் உலகில் கிடையாது” என்று பெருமையுடன் சொல்லுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.
இதனைக் கேட்ட அவர் மனைவி மிகவும் வருந்துவார். “என்றாவது ஒருநாள் எனது கணவரின் கர்வம் அடக்கப்படும்” என்று தனக்குள் கூறிக் கொள்வார்.
கண்ணப்பரையும் அவரின் அறிவிப்பினையும் கண்ணப்பரின் தந்திரத்தை பற்றியும் வல்லபுரத்தைச் சேர்ந்த அறிவாளியான அருளப்பர் கேள்விப்பட்டார்.
கண்ணப்பரிடம் இருந்து எப்படியும் பரிசு பெற்று கண்ணப்பரின் கர்வத்தை அடக்குவது என்ற முடிவோடு கண்ணப்பரிடம் சென்றார் அருளப்பர்.
“வணக்கம் கண்ணப்பரே, நான் தங்களுக்கு கதை கூற வந்துள்ளேன்” என்றார் அருளப்பர்.
அதற்கு கண்ணப்பர் “மிக்க மகிழ்ச்சி. நீங்கள் சொல்லும் கதையில் எனக்கு திருப்தி ஏற்பட்டால் லட்சம் ரூபாய் பரிசினை உங்களுக்கு வழங்குவேன்” என்றார் கண்ணப்பர்.
“மிகவும் நல்லது. நான் கதை கூறும்போது தாங்கள் குறுக்கிட்டு ‘இது உண்மையாக இருக்காது’ என்று கூறக்கூடாது. அவ்வாறு கூறினால் எனக்கு தாங்கள் அறிவித்துள்ள லட்சம் ரூபாய் பரிசினை வழங்க வேண்டும்” என்று அருளப்பர் கூறினார்.
கண்ணப்பர் சிரித்துக் கொண்டே “சரி” என்றார். அருளப்பர் கதை கூறத் தொடங்கினார்.
“மகேந்திரபுரி என்ற நாட்டை பூபாலன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். ஒரு சமயம் தன் வீரர்களுடன் மலைப் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தான். அப்போது ஒரு பருந்து பறந்து வந்து மன்னின் ஆடையில் எச்சமிட்டது.
மன்னன் கோபம் கொள்ளாமல் பழைய ஆடைகளைத் தூக்கி எறிந்தான். புதிய ஆடைகளைக் கொண்டு வரச்செய்து அணிந்து கொண்டான்.
வழியில் ஒரு மரத்தடியில் தங்கி ஓய்வெடுத்தான். மீண்டும் அங்கு வந்த அந்தப் பருந்து சத்தமிட்டுக் கொண்டே பறந்து வந்தது. இம்முறை பருந்து மன்னனின் வாளில் எச்சமிட்டு பறந்து சென்றது.
அரசன் கோபம் கொள்ளவில்லை. புதிய வாளைக் கொண்டு வரச் செய்தான். தனது பயணத்தைத் தொடர்ந்தான் மன்னன். பருந்து சத்தமிட்டுக் கொண்டே பறந்து வந்தது.
இம்முறை மன்னனின் தலைமீது எச்சமிட்டது. இம்முறைமும் அரசன் கோபம் கொள்ளாமல் தன் தலையைக் கழற்றி வீசி எறிந்தான். புதிய தலையைக் கொண்டு வரச் செய்து அணிந்து கொண்டான்.
கண்ணப்பர் தன்னை மறந்து “இது உண்மையாக இருக்காது” என்று கூறினார்.
அதனைக் கேட்ட அருளப்பர் “கண்ணப்பரே சொன்னபடி லட்சம் ரூபாய் பரிசளியுங்கள்” என்றார். அதனைக் கேட்ட கண்ணப்பர் லட்சம் ரூபாயைப் பரிசாக அருளப்பரிடம் கொடுத்தார்.
அதனைக் கண்ட கண்ணப்பரின் மனைவி “வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு” என்று கூறினார்.
குழந்தைகளே வல்லவனுக்கு வல்லவன் கண்டிப்பாக இவ்வுலகத்தில் இருப்பான் என்பதினை மேலே உள்ள கதையின் மூலம் அறிந்து கொண்டீர்கள் தானே.
எனவே நான்தான் பெரிய அறிவாளி என்ற கர்வத்துடன் நாம் செயல்படக்கூடாது.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!