கவிழ்த்த நீலச் சட்டி போலக்
கண்முன் தோன்றும் வானம்! – நாம்
கண்முன் தோன்றும் வானம்!
காலை மாலை கதிரைக் காட்டி
உலகைக் காக்கும் வானம்! – இந்த
உலகைக் காக்கும் வானம்!
எட்டி நடந்தால் எட்டிப் போகும்
இருக்க இருக்கும் வானம்! – அருகில்
இருக்க இருக்கும் வானம்!
பட்டப் பகலில் கடலைப் போல
பரந்து கிடக்கும் வானம்! – கண்முன்
பரந்து கிடக்கும் வானம்!
புளியைப் போல நிறத்தைக் காட்டிப்
புதுமை காட்டும் வானம்! – அடிக்கடி
புதுமை காட்டும் வானம்!
ஒளியைத் தீயை மழையைக் காற்றை
உலகுக் களிக்கும் வானம்! – இந்த
உலகுக் களிக்கும் வானம்!
– கவிஞர் வாணிதாசன்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!