வான்வெளி வரைந்த ஓவியங்கள் என்ற, ஆகாசவாணி சுமி அவர்கள் எழுதிய நூலுக்கு மதிப்புரை வழங்குகிறார் பாரதிசந்திரன்.
‘வேள்வித் திருவிழா
வேடிக்கை பார்க்க ஆசை
தலையாட்டும் ஆட்டைப் பார்த்து
பரிதவித்தது மனது!‘
பாரம்பரிய வேள்வித் திருவிழாக்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. அத்தனையும் ரசனைக்கு உகந்தவை.
ஆனால் அங்கே அடுத்த நொடி என்ன நடக்கப் போகிறது என்பதை அறியாமல் ஆடு தனது தலையை ஆட்டிக் கொண்டு இருப்பதை காணும் பொழுது மனது பரிதவிக்கிறது என நூலாசிரியர் கூறும் பொழுது, நமது உள்ளமும் உறைந்து போகிறது” என்கிறார் கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்கள்.
ஆகாசவாணி சுமி என்கிற கவிஞர் சுமதி ரஞ்சநாதன் அவர்கள் எழுதிய தன்முனைக் கவிதை நூலான ‘வான்வெளி வரைந்த ஓவியங்கள்’ எனும் நூலிற்கான அணிந்துரையில் அமைந்தது தான் மேற்கண்ட மேற்கோள்.
சமகாலக் கவிதைகளில் இன்று அதிகமாக எழுதுகின்ற வகைமையாகத் தன்முனைக் கவிதைகள் இருக்கின்றன. அதுவும் ஈழமண்ணின் வாசமும் பண்பாடும் கலாச்சாரமும் உணர்வுகளும் மேலோங்கிய கவிதைகளாக அவை இருக்கும் பொழுது இன்னும் அதிக முக்கியத்துவத்தை இந்த நூல் பெறுகின்றது.
வான்வெளி வரைந்த ஓவியங்கள் கவிதைத் தொகுப்பு, உலக முத்தமிழ் மாநாடு இலங்கையில் நடந்த பொழுது வெளியிடப் பெற்ற சிறப்புடையதாகும்.
விடுதலை உணர்வு
இலங்கை மலையகத்தில் வெளியிடப் பெற்றதனாலோ என்னவோ இக்கவிதைகளுக்குள் விடுதலை உணர்வு மேலோங்கியிருக்கின்றது.
பெரும்பகுதிக் கவிதைகளின் மையப்பொருள் அகவயமாகவோ, புறவயமாகவோ ஒன்றிலிருந்து விடை பெற்றுப் பிறிதொன்றாகிச் சுதந்திரத்தை அடைவதிலேயே பேரானந்தமுள்ளது என்பதை வலியுறுத்துகின்றன.
அதற்கு எடுத்துக்காட்டாய் இக்கவிதைகள் அமைகின்றன.
'சிறுமி, கிளி சோதிடனிடம்
சோதிடம் கேட்டாள்.
எப்போ பறக்கும்
கூண்டுக் கிளி!'
'பற்றி எறியும்
மூங்கில் காடு
புகலிடம் தேடி
பறக்கும் வண்டுகள்!'
'நான்கு சுவருக்குள்
நான் விடும் மூச்சு
நாடு விட்டு நாடு வந்த
சுதந்திர மூச்சு!'
கவிநயமும் கலகக் குரலும்
“கவிதையின் மொழி, விஷேசித்த பண்புகளையும் பங்கு நிலைகளையும் வெளிகளையும் வினைகளையும் கொண்டிருக்கிறது.
பொதுவான ‘மொழி’ என்ற பரந்த தளத்தில் ஒரு உண்மையான கலைப் பொருட் சாதனமாக வடிவமாக அது இருக்கிறது.
மனிதப் பெருவெளியில் பின்னிப் பிணைந்து, அதன் சாரமாகவும் மனித உணர்வுகளின் மென்மையான பிரதிநிதியாகவும், கவிதையை அதன் மொழியே வடிவமைக்கிறது; சாத்தியப்படுத்துகிறது” என்பார் தி.சு.நடராஜன்.
மொழி நடையும், அதன் கற்பனை நயமும் கவித்துவத்தை மேன்மையாக்குகின்றன என்பதை இந்தூலின் கவிதைகள் கொண்டும் எடுத்துக் கூற முடியும். சிறந்த கவிநயமுடைய கவிதைகள் கவிஞரின் புலமைத்துவத்தை நிறுவுகின்றன.
'அட்டைப் பெட்டிக்குள்
தூங்கும் கடிதங்கள்
ஏக்கப் பெருமூச்சுகள்
ஏழையின் காதல்!'
முடிவுற்றதா அல்லது முடிவுறவில்லையா ஏழையின் காதல் என்பதனை வெளிப்படையாகத் தெரிவிக்காமல் வாசகனையும் ஏக்கப் பெருமூச்சுகள் விட வைத்திருக்கிறது இக்கவிதை.
காதல் கடிதங்களில் தூங்குகின்றவை உணர்வுகளின் மொத்தப் பிழிவுமாகும். அதனை இக்கவிதை தம் வார்த்தைப் பிரயோகத்தால் சிறப்புடன் வெளிப்படுத்தியிருக்கின்றது.
இதற்கு எதிர்மாறான உணர்வை,
'திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படும் என்றால்
விவாகரத்து மட்டும் ஏன்
நீதிமன்றத்தில்?'
தன்முனைக் கவிதை இலக்கணத்தில் சிறிது மாறி இருப்பினும், பொருட் திறத்தால் கவிதை மேலோங்கி இருக்கிறது, தொடர் வாக்கியமான இக்கவிதை.
பின் நவீனத்துவ பாணியில் கலகக் குரலால் கேள்வி கேட்பது சிறப்பாகும். இதற்கு அடித்தளத்தில் பதிவு செய்து வைத்திருக்கின்ற தொன்மை எண்ணப் போக்கையே மாற்றுவதற்கு முயற்சிக்கின்றது இக்கவிதை. தொன்மையும், நவீன கால வரையறையும் சிதிலமடைந்து கிடப்பதை அறியலாம்.
சமூகப் பிரச்சனைகள்
சமூகப் பிரச்சனைகளையும் இக்கவிதை நூலில் அதிகம் எழுதியுள்ளார் ஆகாசவாணி சுமி அவர்கள்.
அவ்வாறான கவிதைகளில் ‘தீ’ சுடர் விட்டு எரிகின்றது. பிரகாசமான எதிர்காலம் வருவதற்கு ஆணித்தரமான கருத்துகள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன.
எதிர்காலச் சிந்தனைகள் கவித்துவத்தால் நிறைந்து கிடக்கின்றன. அவ்வாறான கவிதைகளாக,
'கோவில் உண்டியலில்
கொட்டும் காணிக்கை
தெரிந்தே செய்யும்
தவறுகளின் பரிகாரமா?'
'கோவில் தெய்வம்
பாலில் குளிக்கிறது
கோபுர வாசலில்
கையேந்தும் குழந்தை!'
'ஒட்டிய உடல்
ஓவியமாய் மாறியது
ஏழை வரைந்த
வறுமைக் கோடுகள்!'
'நீரில் முழ்கிய மீனை
பாம்பு காப்பாற்றியது
திரிபுறும் செய்திகள்
ஊடக உத்தி!'
எனும் கவிதைகள் சமூகத்தின் நிலை மிக மோசமாக உள்ளதைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. எதிர்குரலாகவும் ஒலிக்கின்றன.
இவை வாசகர்கள் மனதில் தெளிவையும் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டிய பாதையினையும் உண்டு செய்யும் என்பது தெரிகிறது.
மேலும் சமூகச் சீர்கேட்டைத் தோலுரித்துக் காட்டவும் செய்கின்றார்.
'ஆலயப் புனரமைப்பு
அலங்காரத் திருவிழாவின் முன்னர்
பளிச்சென்று தோன்றும்
தர்மகர்த்தாவின் இல்லம்!'
'கிராம அபிவிருத்தி திட்டம்
அழைப்பிதழ் வழங்கப்பட்டது
கிராம அதிகாரியின்
புதுமண புகுவிழா!'
'தனித்தனி
தீவுகள் உருவாகின்றன
தொழில் நுட்ப வளர்ச்சியால்
இல்லத்து உறவுகள்!'
எனும் கவிதைகள் சமூகவியலோடு உளவியலும் கலந்து வெளிப்பட்டிருக்கின்றன.
ஒருமுறை படித்துப் பாருங்கள்!
வான்வெளி வரைந்த ஓவியங்கள்
உங்கள் மனதில் நீங்காதிருக்கும்!
நூல் விவரங்கள்
நூல்: வான்வெளி வரைந்த ஓவியங்கள்
ஆசிரியர்: ஆகாசவாணி சுமி
வெளியீடு: கலை உதயம் பதிப்பகம்
முகவரி: எண் 10 முதல் தெரு, ஸ்ரீ ராம புரம், ஆம்பூர்-635802
முதல் பதிப்பு: அக்டோபர்-2023
விலை: ரூ.120
தொடர்பு எண்: 9597864183
பாரதிசந்திரன்
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com
சமூக முரண்களை உரக்கச் சொல்லும் கவிதைகள்,
சிறுமி, கிளி சோதிடனிடம்
சோதிடம் கேட்டாள்.
எப்போ பறக்கும்
கூண்டுக் கிளி!’
‘பற்றி எறியும்
மூங்கில் காடு
புகலிடம் தேடி
பறக்கும் வண்டுகள்!’
‘நான்கு சுவருக்குள்
நான் விடும் மூச்சு
நாடு விட்டு நாடு வந்த
சுதந்திர மூச்சு!’
வான்வெளி வரைந்த கவிதைகள் தரைதொட்டு நிற்கின்றன..
பாரதி சந்திரன் வான் நிலவை
தரையிறக்கி நமக்கு தந்திருக்கிறார்..
அவருக்கு வாழ்த்தும் நன்றியும்.
வான்வெளி வரைந்த ஓவியங்கள் என்ற கவிதை நூலுக்கான பாரதிசந்திரன் அவர்களின் விமர்சனம் படித்தேன்.
கவிதைகளின் எண்ணப்பாங்கை ஆய்வுசெய்து படிப்போர் மனதில் விதைப்பதில் பாரதிசந்திரன் அவர்களின் பாணி தனித்துவமானது.
நவீனக் கவிதையின் வளர்ச்சி நிலைகள் குறித்தும் வெறும் அலங்கார வார்த்தைகளாக இல்லாது உள்ளார்ந்த கருத்துச் செறிவுகளை எடுத்துரைப்பதில் வல்லவர்.
சுமதிரஞ்சநாதனின் மனப்பாங்கை மிக யதார்த்தமாகப் பதிவு செய்துள்ளார்.
வாழ்த்துகள்!