வாழைக்காய் கடலைப்பருப்பு குழம்பு என்பது மிகவும் ருசியான குழம்பு வகைகளுள் ஒன்று.
எங்கள் ஊரில் குருபூஜையின் முடிவின் அன்னதானத்தில் இதனை வைத்து பரிமாறுவர். இதனுடன் மிளகு ரசம் ஊற்றி சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும்.
இது மற்ற குழம்புகளைப் போல நீர்த்து இருக்காது. அதே நேரத்தில் கூட்டுபோல கெட்டியாகவும் இருப்பதில்லை.
சுவையான வாழைக்காய் கடலைப்பருப்பு குழம்பு செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வாழைக்காய் – 2 எண்ணம்
கடலைப் பருப்பு – 150 கிராம்
கொத்தமல்லிப் பொடி – 2 ஸ்பூன்
சீரகப் பொடி – 1 ஸ்பூன்
வத்தல் பொடி – 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி – ¾ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் – ¼ மூடி (பெரியது)
தாளிக்க
நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – 3 கீற்று
கடுகு – ½ ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)
வாழைக்காய் கடலைப்பருப்பு குழம்பு செய்முறை
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
தேங்காயை துருவிக் கொள்ளவும்.
கடலைப் பருப்பை தண்ணீரில் அலசிக் கொள்ளவும்.
வாழைக் காயை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
குக்கரில் தண்ணீர் ஊற்றி அதில் கடலைப் பருப்பைப் போட்டு வேக விடவும்.
கடலைப் பருப்பானது முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் நறுக்கிய வாழைக்காய் சேர்த்து கிளறி விடவும்.
பின்னர் அதனுடன் கொத்தமல்லிப் பொடி, சீரகப் பொடி, வத்தல் பொடி, மஞ்சள் பொடி மற்றும் தண்ணீர் சேர்த்து கிளறி குக்கரை மூடி விசில் போடவும். அடுப்பினை மிதமாக வைக்கவும்.
குக்கரில் ஒரு விசில் வந்ததும் அடுப்பினை சிம்மில் வைத்து மூன்று நிமிடங்கள் வைக்கவும்.
பின்னர் அடுப்பிலிருந்து குக்கரை இறக்கி விடவும்.
விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து ஒரு சேரக் கிளறி அதனுடன் தேவையான உப்பு , தேங்காய் துருவலைச் சேர்க்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதனுடன் சதுரமாக்கிய சின்ன வெங்காயம், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.
கடுகு வெடித்ததும் தாளிதத்தை குழம்பில் ஊற்றிக் கிளறவும்.
சுவையான வாழைக்காய் கடலைப்பருப்பு குழம்பு தயார்.
குறிப்பு
கடலைப்பருப்பினை வேகவிடும்போது சற்று அதிக தண்ணீர் விட்டு வேகவிடவும்.
நாட்டு வாழைக்காயினை பயன்படுத்தினால் குழம்பின் ருசி அதிகரிக்கும்.
விருப்பமுள்ளவர்கள் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள் ஆகியவற்றிற்கு பதில் மசாலா பொடி (2½ ஸ்பூன்) யைப் பயன்படுத்தி இக்குழம்பினை தயார் செய்யலாம்.