வாழைக்காய் பஜ்ஜி செய்வது எப்படி?

வாழைக்காய் பஜ்ஜி ரோட்டுக் கடைகளிலும் கிடைக்கும் அற்புதமான சிற்றுண்டி. இதனைச் சுவையாகவும், எளிதாகவும் கடைகளில் கிடைப்பதைப் போன்ற சுவையுடனும் செய்யலாம்.

இதனைத் தயார் செய்ய சிறிதளவே நேரம் பிடிக்கும்.

பஜ்ஜிக்கான மாவை சரியான பதத்தில் கரைத்தால் சுவை மிகும்.

பண்டிகை நாட்களிலும் விருந்தினர்களின் வருகையின் போதும் இதனைச் செய்து அசத்தலாம்.

இனி எளிய முறையில் சுவையான வாழைக்காய் பஜ்ஜி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

வாழைக்காய் – 3 எண்ணம் (பெரியது)

கடலை மாவு – 250 கிராம்

அரிசி மாவு – 3 ஸ்பூன்

மிளகாய் வற்றல் பொடி – 5 ஸ்பூன்

சீரகப் பொடி – 2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

சிவப்பு உணவுக் கலர் பொடி – 1 ஸ்பூன்

சோடா உப்பு – 3/4 டீஸ்பூன்

பெருங்காயப் பொடி – 3/4 ஸ்பூன்

கடலை எண்ணெய் – பொரித்து எடுக்கத் தேவையான அளவு

செய்முறை

வாழைக்காயின் மேல் தோலை லேசாக சீவிக் கொள்ளவும்.

பின்னர் இழைப்பானில் நீளவாக்கில் ஒரே சீராக 1/4 இன்ச் தடிமனில் இழைக்கவும். எல்லா வாழைக்காயையும் இழைத்துக் கொள்ளவும்.

வாழைக்காயைச் சீவியதும்
வாழைக்காயைச் சீவியதும்

வாயகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் வற்றல் பொடி, பெருங்காயப் பொடி, சீரகப் பொடி, உப்பு, சிவப்பு உணவுக் கலர் பொடி, சோடா உப்பு ஆகியவற்றைச் சேர்த்து ஒரு சேரக் கலந்து கொள்ளவும்.

மாவுகளைச் சேர்த்ததும்
மாவுகளைச் சேர்த்ததும்

பின் தண்ணீர் சேர்த்து, கட்டி இல்லாமல் இட்லி மாவுப் பதத்திற்கு கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.

சரியான பதத்தில் மாவு
சரியான பதத்தில் மாவு

மாவினை நீர்த்துப் போய் கரைத்தால், பஜ்ஜியில் மாவு ஒட்டாமல் வாழைக்காய் வெளியே தெரியும். ஆதலால் மாவின் பதம் மிகவும் முக்கியம்.

வாணலியை அடுப்பில் வைத்து கடலை எண்ணெயை ஊற்றி காய விடவும்.

எண்ணெய் காய்ந்ததும் வாழைக்காயின் சீவலை எடுத்து மாவில் முக்கி, முன்னும் பின்னும் பிரட்டி எண்ணெயில் போடவும்.

மாவில் முக்கும் போது
மாவில் முக்கும் போது
முக்கி எடுக்கும் போது
முக்கி எடுக்கும் போது
எண்ணெயில் வேகும் போது
எண்ணெயில் வேகும் போது

பஜ்ஜியின் ஒருபுறும் வெந்ததும் திருப்பி வேக விடவும்.

எண்ணெய் குமிழி தோன்றுவது அடங்கியதும், பஜ்ஜியை எடுத்து அரிகரண்டியில் சிறிது நேரம் வைத்திருக்கவும். பின்னர் பரிமாறவும்.

சுவையான வாழைக்காய் பஜ்ஜி தயார்.

வாழைக்காய் பஜ்ஜிக்கு தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும்.

குறிப்பு

மாவினைக் கரைத்ததும் பஜ்ஜி போடவும். இல்லை எனில் பஜ்ஜி எண்ணெய் குடிக்கும்.

எண்ணெய் சரியான சூட்டில் இல்லாத போது, பஜ்ஜி போட்டால் எண்ணெய் குடிக்கும். ஆதலால் எண்ணெய் காய்ந்ததும் பஜ்ஜியைப் போடவும்.

பஜ்ஜிக்கு நாட்டு வாழைக்காயைத் தேர்வு செய்யவும்.

ஜான்சிராணி வேலாயுதம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.