வாழ விடுங்கள் – சிறுகதை

திருமாறன் இரண்டு நாட்கள் லீவில் திருச்சி வந்திருந்தான். தர்மபுரியில் அரசாங்க அலுவலகம் ஒன்றில் பணி புரிபவன். சொந்த ஊரும், மனைவியின் ஊரும் திருச்சியே.

திருமாறனின் பெற்றோர் ஸ்ரீரங்கத்திலும், அவன் மனைவியின் பெற்றோர் திருவெறும்பூரிலும் வசித்து வந்தனர். மனைவி பிறந்த வீடு வந்து பத்து நாட்களாகிறது. மனைவியைக் கூட்டிப் போவதற்காக வந்திருக்கிறான்.

திருமாறன் எப்போது திருச்சி வந்தாலும் முதலில் ஸ்ரீரங்கம் சென்று பெற்றோருடன் ஒரு நாளாவது இருந்துவிட்டுப் பிறகு தான் திருவெறும்பூர் மாமனார் வீடு வருவது வழக்கம்.

இம்முறை வழக்கத்திற்கு மாறாகக் கொஞ்சம் உற்சாகம் குன்றிப் போயிருந்தான் திருமாறன்.

தர்மபுரியில் வாங்கிப் போட்டிருக்கும் பிளாட்டில் வருகிற தையில் வீடு கட்ட அஸ்திவாரம் போட்டாலொழிய தான் திரும்ப தர்மபுரி வரும் உத்தேசம் இல்லை என்று வனிதா உறுதிபடக் கூறியிருந்தாள்.

அப்பாவுக்குத் தெரியாமல், அவரிடம் கலந்தாலோசிக்காமல் எதுவும் செய்யக்கூடிய தைரியம், உறுதி மனப்பான்மை திருமாறனுக்கு எப்போதுமே இருந்ததில்லை.

எனவே தான் குழப்பத்தின் உச்சகட்டத்தில் இருந்தான். வீடு கட்டும் விசயத்தில் வனிதாவுக்கும், திருமாறனுக்கும் வாக்குவாதங்கள் பலமுறை ஏற்பட்டிருக்கின்றன. அவன் ஆசைப்பட்டு என்ன பயன்? அப்பா சம்மதம் வேண்டுமே?

வனிதா குணம் திருமாறனுக்கு நன்றாகவே தெரியும். ரொம்பவும் விட்டுக் கொடுப்பாள். அனுசரித்துப் போவாள். பொறுமை காப்பாள்.

அவ்வளவையும் பைத்தியக்காரத்தனமாக எதிராளி நினைத்து செயல்படும் பட்சத்தில் எரிமலையாகி விடுவாள்.

எப்படிப்பட்ட சமாதானமும் அதன்பின் எடுபடாது. எவ்வளவோ விஷயங்களில் அடிபட்டு, மனதை விட்டு அகலாத அனுபவங்கள் திருமாறனுக்கு ஏற்பட்டிருக்கின்றன.

அன்று, மாமனார் வீடு கிளம்பும் முன், மனதில் வலுக்கட்டாயமாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அப்பாவிடம் பேச ஆரம்பித்தான்.

“அப்பா, தர்மபுரியில் பிளாட் வாங்கிப் போட்டு அஞ்சு வருஷம் ஆச்சு. இப்பதான் வீடு கட்ட எல்லா பேங்க்லேயும் லோன் தாராளமாத் தர்றாங்களே. சின்னதாய் வீடு கட்டலாம்னு இருக்கேன்.” தயங்கி தயங்கி வார்த்தைகளைக் கயிறு கட்டி இழுக்காத குறையாக உதிர்த்தான்.

அவ்வளவுதான்!

பன்னீர் செல்வம்-திருமாறனின் தந்தை ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்தார்.

“டேய், உனக்கு ஏதாவது பைத்தியம் பிடிச்சிருக்கா, வீடு கட்டப் போறீயா? பணத்தை வச்சிக்கிட்டு என்ன செய்யறதுன்னு தெரியலையா உனக்கு? இல்லாதவன் வீடு கட்டத்தான் பாங்ல லோன் கொடுக்கிறாங்க. உன் மாமனார் வீடு பிற்காலத்தில் உனக்குதான்டா வரப்போகுது. உன் மனைவி அவங்களுக்கு ஒரே பொண்ணுடா. அதனால அவங்க சொத்து, வீடு எல்லாமே உனக்குத் தானே வரப்போகுது. இந்த வீடு வேற இருக்கு. இந்த வீட்டிலும் உனக்கும், உங்க அண்ணனுக்கும் சமபங்கு இருக்கு. அப்புறம் எதுக்குடா உனக்குன்னு வீடு”

திருமாறன் வாய் திறந்து எதுவும் பேச முடியவில்லை. வனிதாவிடம் அப்பா சொன்னதை எப்படிக் கூறுவது? அவளை எப்படி சமாதானப்படுத்துவது? அவள் நிச்சயமாகத் தன்னுடன் தர்மபுரி வரப்போவதில்லை.

எதையாவது சொல்லி சமாளித்துத் தான் மட்டும் கிளம்பிப் போக வேண்டியதுதான்.

அவளின் பிடிவாதக்குணம் அவனுக்கு நன்கு தெரியும். அவள் விரும்பும் போது வரட்டும்.

ஒருவிதமாக அலைபாய்ந்த மனதை ஒருநிலைக்குக் கொண்டு வந்து மாமனார் வீடு கிளம்பினான்.

அவன் கிளம்பும் சமயம், அவனது தந்தை பன்னீர் செல்வமும் அவனோடு கிளம்பினார். மெயின் காட் கேட் வங்கி ஒன்றில் வேலை இருந்தது அவருக்கு.

காலை மணி ஒன்பதுதான் ஆகியிருந்தது. ஸ்ரீரங்கத்திலிருந்து சத்திரம் வந்து இறங்கியதும் டிபன் சாப்பிட இருவருமாக மாயாவரம் லாட்ஜ் நோக்கிச் சென்றனர்.

வீட்டில் காலை டிபன் எப்போதுமே கிடையாது. பத்தரை, பதினோரு மணியளவில் சாப்பாடு ரெடியாகிவிடும்.

வங்கியில் முக்கிய வேலை இருந்ததால் அன்று சாப்பிடாமலேயே பன்னீர் செல்வம் திருமாறனுடன் கிளம்பியிருந்தார்.

வங்கி பத்து மணிக்குத்தான் ஆரம்பமாகும். வங்கி வேலை முடிந்து வீடு திரும்ப பன்னிரெண்டு மணியாகிவிடும். எனவேதான் டிபன் சாப்பிட மாயாவரம் லாட்ஜிற்குள் நுழைந்தனர்.

அந்த குறுகிய வாணப்பட்டரைத் தெருவில் கம்பீரமாகக் காட்சியளித்தது மாயாவரம் லாட்ஜ். பரந்து விரிந்து, விஸ்தாரமாகக் காணப்படும் புகழ் வாய்ந்த, நகரிலுள்ள பழமை வாய்ந்த ஓர் ஹோட்டல்.

இவர்கள் உள்ளே நுழையும் போதே உரிமையாளர் முகம் மலர வரவேற்றார்.

“என்ன சார், எப்படியிருக்கீங்க? ரொம்ப நாளாச்சு. பாங்க் வேலையா வந்தேன். பையன் கூட இருக்கானேன்னு கூட்டிக்கிட்டு வந்தேன்” பன்னீர் செல்வம் உரிமையாளரிடம் ரொம்பவும் உரிமையோடு பேசினார்.

“ரொம்ப நல்லாயிருக்கேன். முதலில் டிபனை சாப்பிட்டுட்டு வாங்க. சாவகாசமாய் பேசலாம்’ என்றார் உரிமையாளர்.

டிபன் சாப்பிட்ட பின் வெளியே வந்த பன்னீர் செல்வம் மீண்டும் உரிமையாளரிடம், “உங்க பையன் கணேஷ் எங்கு இருக்கான்? மனைவி, குழந்தைகள் எல்லாம் சௌக்கியமா? திருச்சிக்கு வர்றதே இல்லை போலிருக்கு” என்றார்.

“அதுக்கெல்லாம் எங்கே சார் நேரம்? வீடு வேற கட்டிக்கிட்டிருக்கான். வேலை சரியா இருக்கு அவனுக்கு.”

பன்னீர் செல்வம் ஆச்சரியத்துடன்,

“என்னது வீடு கட்டிக்கிட்டிருக்கானா? என்ன சார் இது? தில்லைநகர்ல பங்களா, இவ்வளவு பெரிய லாட்ஜ் எல்லாம் இருக்கு. உங்களுக்குப் பிறகு எல்லாமே அவனுக்குத் தானே? அப்புறம் எதுக்கு இன்னொரு வீடு?” என்றார்.

“அவன் சும்மா தான் இருந்தான். நான்தான் அவனைக் கட்டாயப்படுத்தி, அவன் வேலை பார்க்கும் கும்பகோணத்தில் பிளாட் ஒன்றை வாங்கி வீட்டைக் கட்டச் சொல்லியிருக்கிறேன். எல்லாம் அவன் சுய சம்பாத்தியம்தான். நான் தம்பிடிக் காசு கொடுக்கலை.” என்றார் உரிமையாளர்.

அவரை விசித்திரமாகப் பார்த்த பன்னீர் செல்வம்,

“நீங்க அவன் சம்பாதித்த பணத்தை வேஸ்ட் செய்யறதாத்தான் தோணுது. உங்களுக்கு ஒரே பையன். திருச்சியில் இவ்வளவு சொத்து, சுகங்கள் இருக்கு. இருந்தும் அவனை நீங்கள் வீடு கட்டச் சொல்லியிருப்பது வேடிக்கையாகத் தான் இருக்கு சார்.” என்றார் மறுபடியும்.

“பன்னீர் செல்வம் சார், என்ன இப்படிச் சொல்லீட்டீங்க. எங்கப்பா காலமானபோது இந்த ஓட்டல் இவ்வளவு பெரிதாக இல்லை. போதுமான வசதிகளும் இல்லை.

என்னிடம் வந்த பிறகுதான் என் முயற்சி, உழைப்பால் இவ்வளவு பெரிதாக விரிவுபடுத்தி அதிக வசதிகளையும் ஏற்படுத்தியிருக்கேன். தில்லைநகர்ல பங்களாவும் கட்டினேன். எங்கப்பா வீடும் இருக்கு. இருந்தாலும் என் சொந்தக் காலில் நிற்கணுமில்லையா. அதுபோலத்தான்.

பரம்பரைச் சொத்து, ஒரே வாரிசு என்பதற்காக அவனது பொறுப்பைத் தட்டிக் கழிக்க நானே காரணமாகிவிடக் கூடாதில்லையா?

அவன் கஷ்டப்பட்டு சம்பாத்தித்து, சேமித்து அவனுக்குன்னு சொத்து ஏற்படுத்திக்கணும். வாழ்க்கையில் பொறுப்புணர்ச்சி வரணும். பெரியவங்க சின்னவங்களை சுயமாக சிந்திக்க, உழைக்க, பொறுப்புணர்ச்சியை வளர்த்துக்கிட்டு வாழ்க்கையில் தானாகவே உயர அனுமதிக்கணும்.

நம்மக் கட்டுப்பாட்டுக்குள்ளேயே அவங்களை வச்சுக்கிட்டுக் கிணற்றுத் தவளையா இருக்க விடக்கூடாது. கஷ்ட, நஷ்டம்னா என்னன்னு அவங்களும் தெரிஞ்சுக்கணும். அவங்களை சுயமாய் வாழ வைக்கணும்.

இவ்வளவு பெரிய ஓட்டல்ல டிபன், சாப்பாடு எல்லாமே இருக்கு. சாப்பிடுறேனா? வீடுன்னு ஒன்றை வச்சுக்கிட்டு, மனைவி சமைத்து வைக்கும் சாப்பாட்டைத் தானே அங்கு போய் சாப்பிடுகிறேன்.

இவ்வளவு பெரிய ஓட்டல்ல எவ்வளவோ வசதிமிக்க அறைகள் இருக்கு. அதற்காக இங்கேயே சாப்பிட்டுத் தங்கி விட முடியுமா?

நமக்குன்னு ஒரு சுயமரியாதை வேணும் சார். சுய கௌரவம், சுய அந்தஸ்து இருந்தால் தான் இந்த சமுதாயத்தில் நமக்குன்னு ஒரு பேரு இருக்கும். மரியாதை இருக்கும். தலைநிமிர்ந்து வாழலாம்.” எனச் சொல்லி முடித்தார் ஓட்டல் உரிமையாளர்.

பன்னீர் செல்வம் வாயடைத்துப் போனார். அவர் உள்ளம் குறுகுறுத்தது. மெதுவாகத் திரும்பி திருமாறனைப் பார்த்தார். திருமாறன், “அப்பா, அப்போ நான் கிளம்பறேன்” என்றேன்.

ஓட்டல் உரிமையாளிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தனர் இருவரும்.

பன்னீர் செல்வம் திருமாறனிடம், “திருமாறா, அடுத்த வாரம் ஒரு நல்ல நாளாய் பார்த்து மனை பூஜை போட்டுடலாம். இம்மாதக் கடைசியிலேயே தர்மபுரியில் கட்டிட வேலையைத் துவங்கி விடலாம்.” என்று கூற, திருமாறனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

திருவெறும்பூர் மாமனார் வீட்டிற்குப் படு குஷியுடன் கிளம்பினான்.

This image has an empty alt attribute; its file name is RajaGopal.webp

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

One Reply to “வாழ விடுங்கள் – சிறுகதை”

  1. தனி மனிதனின் தன்னம்பிக்கை மற்றும் சுய வளர்ச்சியை ஊக்குவிக்கும் சிறுகதை!பாராட்டுக்கள்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.