வாழ வைத்த தெய்வம் P.சிவபிரான்

வாழ வைத்த தெய்வம் Anil Fireworks Partner Thiru. A.P.R.S.P. P.Sivapiran

என்னை வாழ வைத்த தெய்வம், சிவகாசி அணில் பயர் ஒர்க்ஸ் பங்குதாரர் உயர்திரு A.P.R.S.P. P.சிவபிரான் அவர்கள்.

திக்கற்றோருக்குத் தெய்வமே துணை என்பார்கள். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், வறுமையின் கோரப்பிடியில் அகப்பட்டு நான் தத்தளித்த பொழுது, என்னை வாழ வைத்த தெய்வம் சிவபிரான் அவர்கள்.

அது 1995 ம் வருடம் ஜீன் மாதம்.

நான் எங்கள் பள்ளியில் முதல் மாணவன் என்ற சிறப்போடு அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோவையில் B.E. (பொறியியல்) படிப்பதற்கான இடம் பெற்றும் இருந்தேன்.

படிப்பு செலவுக்கு மட்டுமல்ல போக்குவரத்து செலவுக்குக் கூட வழியில்லை.

ஆறுமாதங்களுக்கு முன்புதான் அப்பா இறந்திருந்தார்.

அண்ணன் ஸ்ரீகாளீஸ்வரி பயர் ஓர்க்ஸ் பங்குதாரர், உயர்திரு. A.S.சின்னா நாடார் அவர்கள் உதவியால், மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருந்தான்.

இரு தங்கைகள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர். விற்பதற்கு நிலமோ நகையோ கிடையாது. இப்போது போல் வங்கிகள் படிக்கக் கடனும் கொடுக்கவில்லை.

உணவுக்கே போராட்டம்; உயர்வைப் பற்றி எப்படி சிந்திப்பது?

வாழ வைத்த தெய்வம்

அந்த சூழ்நிலையில், சிவகாசி அருகே உள்ள பூலாவூரணி என்ற எங்கள் கிராமத்தின் பெரியவர், திரு T.சேர்மக்கனி அவர்கள் என்னை அழைத்தார்.

நானும் அவரும் சென்று, சிவகாசி இந்து நாடார் விக்டோரியா மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் திரு M.பால்ராஜ் ஆசிரியர் அவர்களைப் பார்த்தோம்.

அவர்கள் அணில் பயர் ஒர்க்ஸ் மேலாளர், திரு A.S.கருணாகரன் அவர்கள் மூலம், முதலாளி சிவபிரான் அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தினார்கள்.

முதலாளி என்னுடைய படிப்புக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டார்கள். கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம் மேலும் இதர கட்டணங்கள் என அனைத்தையும் முதலாளி கொடுத்தார்கள்.

அவர் எனக்கு உதவியதைவிட அவர் உதவிய விதம் தான், மேன்மக்கள் என்றால் யார் என்று எனக்கு அறிமுகப்படுத்தியது.

நாம் உதவி செய்யும் போது இயல்பாகவே உடன் வரும் அதிகார தோரணையோ, அறிவுரை சொல்லும் மனப்பாங்கோ, துருவித் துருவி கணக்குக் கேட்கும் மனப்பாங்கோ அவரிடம் துளியும் நான் கண்டதில்லை.

வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாது, என்ற வகையில் கொடுப்பவர்களும் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்பதை, முதலாளி சிவபிரான் அவர்கள் வடிவிலேதான் நான் கண்டேன்.

இது தான் பரம்பரைக் கொடை போலும்!

அவரின் உதவியால் நான் பட்டப் படிப்பை முடித்தேன். அடுத்து  மூன்றாண்டுகள் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்தேன்.

அதன் பின் ரோவன் சாஃப்ட்வேர் சொலுசன்ஸ் என்ற மென்பொருள் நிறுவனத்தைத் துவங்கி நடத்தி வருகிறேன். இனிது இதழையும் துவங்கி அதன் ஆசிரியராக உள்ளேன்.

எனக்கு மட்டுமல்ல இன்னும் பலருக்கு உதவியிருக்கிறார். பல கல்வி நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுத்திருக்கின்றார். அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், என்றும் எங்கள் மனதை விட்டு மறைய மாட்டார்.

முளைக்கும் முன்பே கருகியிருக்க வேண்டிய விதையை, மரமாக்கிய கடவுள் அவர்.

என் வாழ்வில் நான் தொடும் உயரம்தான், அந்தக் கடவுளுக்கு நான் செலுத்தும் காணிக்கையாக இருக்க முடியும்.

என் வாழ்வில் ஒளியேற்றிய அந்த தெய்வத்தை வேண்டிக் கொண்டு, என் முயற்சியில் வேகமெடுக்கிறேன்.

வ.முனீஸ்வரன்

இயக்குநர்
ரோவன் சாப்ட்வேர் சொலுசன்ஸ் பிரைவேட் லிமிடெட்
சிவகாசி ஆன்லைன்.காம்
இனிது.காம்

Visited 1 times, 1 visit(s) today

Comments

“வாழ வைத்த தெய்வம் P.சிவபிரான்” மீது ஒரு மறுமொழி

  1. ரத்தினகிரி

    இவர்களைப் போன்ற கொடையாளர்களுக்காகத் தான் அவ்வப்போது மழை வந்து போகின்றது.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.