விடுகதைகள் – விடைகள் – பகுதி 5

1. கை இல்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்?

படகு

 

2. கையில் தவழும்; பையில் உறங்கும். அது என்ன?

பணம்

 

3. கையுண்டு; கால் இல்லை; கழுத்துண்டு; தலை இல்லை. அவன் யார்?

சட்டை

 

4. சூடு பட்டுச் சிவந்தவன், வீடு கட்ட உதவுவான். அவன் யார்?

செங்கல்

 

5. செய்ததைச் செய்யும்; குரங்கு அல்ல. சிங்காரிக்க உதவும்; சீப்பும் அல்ல. அது என்ன?

கண்ணாடி

 

6. தண்ணீர் இல்லாத தடாகத்தில், தாவிப் பாயுது ஒரு கப்பல். அது என்ன?

ஒட்டகம்

 

7. தம்பிக்கு எட்டுவது, அண்ணனுக்கு எட்டாது. அது என்ன?

உதடு

 

8. தரையில் முட்டிடும்; விரலில் ஒட்டிடும். அது என்ன?

கால் மெட்டி

 

9. தாயின் வாயில் பிறக்கும்; தரணி எங்கும் சிறக்கும். அது என்ன?

தாலாட்டு

 

10. நித்திரையின் தூதுவன்; நினையாமல் வருவான். அவன் யார்?

கொட்டாவி

 

11. நீரிலே கொண்டாட்டம்; நிலத்திலே திண்டாட்டம். அது என்ன?

மீன்

 

12. பகலில் தூங்குவான்; இரவில் அலறுவான். அவன் யார்?

ஆந்தை

 

13. படுத்து உறங்காத மிருகம்; பந்தயத்தில் ஓட்டம் அதிகம். அது என்ன?

குதிரை

 

14. பூட்டுச் சாவி இல்லாத பெட்டி; காசு கொடுத்து வாங்கும் பெட்டி. அது என்ன?

தீப்பெட்டி

 

15. பூமியிலே பிறக்கும். புகையாய்ப் போகும். அது என்ன?

பெட்ரோல்

 

16. பூவில் பிறக்கும்; நாவில் சுவைக்கும். அது என்ன?

தேன்

 

17. மண்டையிலே போட்டால், மகிழ்ந்து சிரிப்பான். அவன் யார்?

தேங்காய்

 

18. மண்ணுக்குள் பிறக்கும்; மங்கைக்கு அழகு தரும். அது என்ன?

மஞ்சள்

 

19 முன்னும் பின்னும் போவான்; ஒற்றைக் காலிலே நிற்பான். அவன் யார்?

கதவு

 

20. மூன்று கொம்பு மாடு; ஒரு கொம்பால முட்டுது. அது என்ன?

நெருஞ்சி முள்

 

21. மேகத்தின் பிள்ளை அது; தாகத்தின் நண்பன். அது என்ன?

மழை

 

22. மேலே பூப் பூக்கும்; கீழே காய் காய்க்கும். அது என்ன?

வேர்க்கடலை

 

23. வந்தும் கெடுக்கும்; வராமலும் கெடுக்கும். அது என்ன?

மழை

 

24. வழியெல்லாம் கூடவே வருவான்; வீட்டுக்குள் மட்டும் வரமாட்டான். அவன் யார்?

செருப்பு

 

25. வாயிலே தோன்றி, வாயிலே மறையும் பூ. என்ன பூ?

சிரிப்பு

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: