விநாயகரின் அறுபடை வீடுகள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் போல சிறப்பு வாய்ந்த வழிபாட்டிடங்கள் ஆகும். எங்கும் எளிதில் எழுந்தருள்பவரும், முதல் கடவுளும் ஆகிய விநாயகப்பெருமானை இவ்விடங்களில் வணங்குவது சிறப்பாகக் கருதப்படுகிறது.
விநாயகரின் அறுபடை வீடுகள்
1. திருவண்ணாமலையிலுள்ள அல்லல் போக்கும் விநாயகர்
2. திருமுதுக்குன்றத்திலுள்ள ஆழத்து விநாயகர்
3. திருக்கடவூரிலுள்ள கள்ள வாரண விநாயகர்
4. மதுரையிலுள்ள காரிய சித்தி விநாயகர்
5. பிள்ளையார்பட்டியிலுள்ள கற்பக விநாயகர்
6. திருநரையூரிலுள்ள பொள்ளாப்பிள்ளையார்
திருவண்ணாமலை – அல்லல் போக்கும் விநாயகர்
திருவண்ணாமலை விநாயகரின் முதல்படை வீடாகக் கருதப்படுகிறது. இவ்விநாயகரைப் பற்றியே அவ்வையார் அல்லல் போம் வல்வினைப்போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைப்போம் என்ற பாடலைப் பாடியுள்ளார்.
இவர் திருவண்ணாமலையில் கிழக்கு ராஜகோபுரத்திற்குள்ளேயே செல்வக் கணபதியாக அருள்புரிகிறார். இவரை வழிபட நம் வாழ்வின் துயரங்கள் அனைத்தும் நீங்கும்.
திருமுதுகுன்றம் – ஆழத்து விநாயகர்
திருமுதுகுன்றம் என்றழைக்கப்படும் விருத்தாசலத்தில் ஆழத்து விநாயகர் அருள் புரிகிறார். இவர் நுழைவுவாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் 18 அடி ஆழத்தில் கிழக்கு முகமாக வீற்றிருக்கிறார்.
ஆழ் அகத்து விநாயகர் என்பதே ஆழத்து விநாயகர் என்று மருவி வழங்கப்படுகிறது. 16 படிக்கட்டுகள் இறங்கியே இவரைத் தரிக்க முடியும். தனியாக கொடி மரம் இவருக்கு அமைக்கப்பட்டுள்ளது.
திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும் என்று தொடங்கி பெருகும் ஆழத்துப் பிள்ளையாரைப் பேணுவோம் என்ற பாடல் இவரைப் பற்றியது. இவரை வழிபாடு செய்தபின் படியேறி மேலேறுவது போல் கல்வியுடன் சீரான செல்வமும் தந்து நம் வாழ்வினை மேன்மை அடையச் செய்வார்.
திருக்கடவூர் – கள்ள வாரண விநாயகர்
மூன்றாம் படைவீடான திருக்கடவூரில் இவர் கள்ள வாரண விநாயகர் என்ற பெயரில் அருள்புரிகிறார். ஒருமுறை விநாயகரை இந்திராதி தேவர்கள் வணங்க மறந்தனர். இதனால் அமிர்த கலசத்தை அவர் மறைத்து வைத்தார்.
அமிர்தம் கிடைக்காத தேவர்கள் விநாயகரை மறந்ததால் வந்த வினை இது என்பதனைப் புரிந்து விநாயகரை வணங்கி மீண்டும் அமிர்தத்தைப் பெற்றனர். இந்நிகழ்ச்சி நடந்த இடம் அபிராமி, அமிர்தக்கடேஸ்வரர் அருள்புரியும் திருக்கடவூர் ஆகும்.
அமிர்தத்தை மறைத்ததால் இவர் கள்ள வாரண விநாயகரானார். அபிராமிப் பட்டர் அபிராமி அந்தாதியில் காப்புச் செய்யுளில் இவரைப் போற்றி வணங்குகிறார்.
ஈசனின் சந்நிதிக்கு வலதுபுறத்தில் நந்திக்கு அருகேயுள்ள வெளிப்பிரகாரத்தில் கையில் அமுத கலசத்தை ஏந்தியபடி அருள்புரிறார். இவரை வழிபட நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தித்தை வழங்கி சுக வாழ்வினைத் தருவார்.
மதுரை காரிய சித்தி விநாயகர்
மதுரையிலுள்ள மீனாட்சி அம்மன் கோவிலுள்ள காரிய சித்தி விநாயகர் நான்காம் படைவீடு விநாயகராக வணங்கப்படுகிறார். அம்மன் சன்னதிக்கு செல்லும் வழியிலுள்ள ஊஞ்சல் மண்டபம் அருகில் உள்ளார்.
அளவில் சிறியவராக இருந்தாலும் அருள் தருபவரில் சக்தி மிக்கவர். இவர் தன்னை வழிபடுபவர்களுக்கு வாழ்வின் எல்லா சித்திகளையும் (வெற்றி) அருளும் வள்ளலாக விளங்குகிறார்.
மாணிக்க வாசகர் பாண்டிய நாட்டுக்காக குதிரை வாங்கச் செல்லும்போது இவரை வழிபாடு செய்துவிட்டு சென்றதாக திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.
பிள்ளையார்பட்டி – கற்பக விநாயகர்
ஐந்தாம் படைவீடு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலாகும். இரு கரங்களுடன் உள்ள இவர் சிவலிங்கத்தைக் வலகையில் தாங்கி சிவ பூஜை செய்யும் நிலையில் உள்ளார்.
இவ்விநாயகரின் துதிக்கை வலம்புரியாக உள்ளதும், இவர் அர்த்தபத்மாசனத்தில் அமர்ந்திருப்பதும், இடது கரத்தை கடி ஹஸ்தமாக தொடையில் வைத்திருப்பதும் இவரது சிறப்புத் தோற்றமாகும்.
இக்கோயில் சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில் ஆகும். கற்பக விநாயகர் இக்கோயிலின் மூலவராக வடக்கு நோக்கி அருள்புரிகிறார். இவரை வழிபட ஞானமும் தீட்சையும் கிடைக்கும்.
திருநரையூர் – பொள்ளாப் பிள்ளையார்
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்திற்கு அருகே உள்ள திருநரையூரிலுள்ள பொள்ளாப் பிள்ளையாரே ஆறாம் படைவீட்டின் அதிபதி ஆவார்.
சிற்பின் உளியால் பொள்ளப்படாமல் (செதுக்கப்படாமல்) சுயம்புவாக தோன்றியதால் இவ்வாறு அழைக்கப்படுகிறார். தேவாரத்திருமுறைகள் வெளிவரக் காரணமானவரும், அதனைத் தொகுத்தவருமான நம்பியாண்டார் நம்பி அவதரித்த திருத்தலம்.
இவர் பொள்ளாப்பிள்ளையாரின் மீது கொண்டிருந்த அதீவிர பக்தியினால் விநாயகரை நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றார். இந்தப் பொள்ளாப்பிள்ளையாரே நம்பியாண்டார் நம்பியிடம் தேவராம் இருக்குமிடத்தை தெரிவித்தார்.
அப்பரும் சுந்தரரும் பாடிய இத்தலத்தில் இவரை வழிபட்டால் புதிய முயற்சிகளில் கை மேல் வெற்றி பலன் கிடைக்கும்.
– வ.முனீஸ்வரன்