கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் …… அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை …… கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய …… மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு …… பணிவேனே
முத்தமிழ் இடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய …… முதல்வோனே
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடிசெய்த …… அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை …… இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் …… பெருமாளே.
விநாயகர் துதி விளக்கம்
யானை முகத்தை உடையவனும்,
கல்வி வளம் நிறைந்த அறிஞர்களின் புத்தியில் இருப்பவனும்,
ஊமத்தம் பூ, பிறைச்சந்திரன் ஆகியவற்றை தலையில் அணிந்த சிவபெருமானின் மகனும்,
மற்போருக்குத் தக்க திரண்ட தோள்களை உடையவனும்,
மதயானையைப் போன்ற பலசாலியும்,
மத்தளம் போன்ற வயிற்றினை உடையவனும்,
உத்தமியாகிய உமையவளின் மகனுமாகிய கணபதியே!
உன்னை நறுமணம் வீசும் மலர்களைக் கொண்டு நான் வணங்குகிறேன்.
முத்தமிழை எல்லாம் பழைமையான மேரு மலையில் முதலில் எழுதியவனும்,
திரிபுரங்களை எரிக்கச் சென்ற சிவபெருமானின் ரதத்தின் அச்சினை பொடியாக்கிய வீரனும்,
வள்ளியின் மீதுள்ள காதலால் துயரமுற்ற முருகப் பெருமானின் கவலையைப் போக்க தினைப்புலத்தில் யானையாகத் தோன்றி அந்தக் குறமகளான வள்ளியை தனக்கு இளையவனாகிய முருகப்பெருமானுக்கு மணம்புரியச் செய்தவனும் ஆகிய விநாயகப் பெருமானே!
உன்னை கற்பகமே என அழைத்தால் விரைவில் வினைகள் யாவும் ஓடிப்போகும்.
இப்பெருமைகள் நிறைந்த உன்னை கைநிறையப் பழங்கள், அப்பம், அவல், பொரி ஆகியவற்றை படையலிட்டு விநாயகப் பெருமானே வழிபாடு செய்கிறேன்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!