சிகப்பு உடையணிந்து
மிடுக்கு மாறாமல்
பணிக்குக் கிளம்பினான்
பாதி வயிற்றோடு!
அழைப்பு வந்தவுடன்
ஆர்வமாய் எடுத்து
சோத்துப் பொட்டலங்கள்
வகைக்கு ஒன்றாய் வாங்கி அடுக்கினான்…
சீனத்து வகையில் இரண்டு பொட்டலங்கள்
ஆட்டு பிரியாணி ஐந்து பொட்டலங்கள்
கோழியும் தப்பவில்லை
வறுத்த துண்டுகள் தனியாக இரண்டும்
போனால் போகட்டுமென்று
தயிர்சாதம் ஒன்றும்
தண்ணீரோடு சேர்த்து
பெட்டியை நிரப்பிக் கொண்டு
தொப்பியை சரி செய்து
வாகன நெரிசலில் லாவகமாய் பயணித்தான்…
அடுத்தடுத்த அழைப்புகள்
அவசரப்படுத்தின
அழைப்பிற்கு பதில் சொல்லி
நாக்கிலும் ஈரமில்லை
தொண்டையும் நனையவில்லை
போதாக்குறைக்கு குடல்கள் சண்டையிடும்
கூச்சல்கள் ஒருபுறம்
தாகமும் பசியும் ஒருசேர சதி செய்யும்
என கணமும் எண்ணவில்லை
சட்டைப்பையில் வாகனப் பசியாற்ற
நூறு ரூபாய் நோட்டு மட்டும்
கடும்பசியால் கண்கள் இருட்டாக
கச்சிதமாய் வந்து சேர்ந்தான்
பசையில்லா வயிற்றோடு
வசைகளையும் வாங்கிக் கொண்டு
வகை வகையாய் உணவுகளை
வெகுவாய் எடுத்துத் தந்தான்
வேகமாய் வாங்கிச்சென்ற நண்பர்கள்
நால்வரும் அறைக்கதவை உடன் அடைக்க
அடுத்த அழைப்பின் ரீங்கார மணி அழைக்க
தொலைபேசி காதில் வைத்து
சிறிது நேரம் உரையாடி நகரும் போது
சன்னல் வழியே சட்டென்று விழுந்தது
சாப்பிட்ட எச்சில் இலை
மூன்று கை உணவு போக மீதமுள்ளதைச் சுமந்து
அறைக்குள் ஒருவன் சொன்னான்…
இல்ல மச்சான் இது அவ்வளவா நல்லால்ல
வேற ஒன்னு ஆர்டர் பண்ணு டேஸ்ட் பண்ணிப் பாக்கலாம்…
எச்சில் இலையை வச்ச கண்ணு
வாங்காமல் பார்த்துக் கொண்டே நகர்ந்தான்…
அந்த ஜொமோட்டோ இளைஞன்!
மு.மு.நிஜாமுதீன்
சென்னை
கைபேசி: 9092819629