விலங்குகளின் ஆச்சர்யம் – ஓர் பார்வை

உலகில் உள்ள உயிரினங்கள் பல்வேறு குணாதிசயங்களிலும் பல்வேறு வடிவங்களிலும் காணப்படுகின்றன.

அவற்றுள் சில உயிரினங்களின் உடலமைப்பு மற்றும் செயல்பாடுகள் நமக்கு ஆச்சர்யத்தை அளிக்கின்றன. அவற்றைப் பற்றியே இப்பதிவு.

ஆந்தை – நகர்த்த இயலாத கண்கள்

ஆந்தை என்றதும் மங்கிய ஒளியில் அதனுடைய கூர்மையான பார்வைத் திறனே சட்டென நம்முடைய நினைவிற்கு வரும்.

ஆந்தைக்கு கண்விழி (Eye ball) கிடையாது. ஆந்தையின் கண்கள் அதனுடைய குழிகளில் நிலையாக வைக்கப்பட்டுள்ளது. ஆதலால் ஆந்தையால் கண்களை எத்திசையிலும் நகர்த்த இயலாது.

எனவே இதனுடைய பார்வைத்திசையை மாற்ற அதனுடைய தலைப்பகுதி முழுவதையும் திருப்ப வேண்டியுள்ளது. ஆந்தையால் தன்னுடைய தலையை இருதிசைகளிலும் 270 டிகிரி வரை திருப்ப இயலும்.

ஆக்டோபஸ் – நீல இரத்தம்

இராட்சத பசிபிக் ஆக்டோபஸ்

ஆக்டோபஸூக்கு மூன்று இதயங்கள் உள்ளன. ஓரு இதயம் அதனுடைய உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தைச் செலுத்த உதவுகிறது. மற்ற இரண்டு இதயங்களும் சுவாசிக்கும் பகுதியான அவற்றின் செதில்களுக்கு இரத்தத்தைச் செலுத்துகின்றன.

ஆக்டோபஸூன் இரத்தம் சுவாசித்தலின்போது ஆக்ஸிஜனை ஏற்று நீலநிறத்தில் காணப்படுகிறது. ஆக்ஸிஜனை ஏற்காத நிலையில் இதனுடைய இரத்தம் நிறமற்று உள்ளது.

இரத்தம் நீலநிறமாவதற்கு இதனுடைய இரத்தத்தில் உள்ள ஈமோசயனின் என்னும் செம்புச்சத்து காரணமாகும். முதுகெலும்பு உள்ள விலங்குகளின் இரத்தத்தில் ஹீமோகுளோபின் என்னும் இரும்புச்சத்து உள்ளதால் இரத்தம் சிவப்பாக உள்ளது.

குளிரான கடல் பகுதியில் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல ஹீமோகுளோபின் என்னும் இரும்புச்சத்தைவிட ஈமோசயனின் என்னும் செம்புச்சத்து சிறந்ததாக செயல்படுவதால் கடலில் உள்ள ஆக்டோபஸூன் இரத்தம் நீலநிறத்தில் இருக்கிறது.

துருவக்கரடி – வெள்ளை முடி, கருப்புத் தோல்

துருவக்கரடி

துருவக்கரடி பார்ப்பதற்கு வெள்ளையாக இருக்கும். இதற்குக் காரணம் அதனுடைய வெண்ணிற முடிகள். துருவத்தில் இருக்கும் பனியைப் போன்று வாழிட தகவமைப்பின் காரணமாகவே இதனுடைய முடி வெண்ணிறமாக உள்ளது.

துருவக்கரடியின் முடி வெண்ணிறத்தில் இருந்தபோதிலும் அதனுடைய தோல்பகுதி கருப்பாகவே இருக்கிறது.

கருப்புநிறத் தோல் துருவப்பகுதியில் இதனுடைய உடல் சூடாக இருக்க, சூரியனிலிருந்து வெப்பத்தை உறிஞ்ச உதவுகிறது. மேலும் கருப்புநிறத்தோல் கரடியை தீங்கு விளைவிக்கும் சூரியனின் புறஊதாக்கதிர்களிலிருந்து பாதுகாக்கிறது.

வண்ணத்துப்பூச்சி – தந்திரம்

வண்ணத்துப்பூச்சி

வண்ணத்துப்பூச்சி தன்னுடைய கால்களை அடிக்கடி சுவைக்கின்றது. இப்பூச்சியானது தான் அமர்ந்த தாவரங்களின் தன்மையை தன்னுடைய கால்களில் உள்ள வேதியியல் ஏற்பிகள் மூலம் அறிந்து கொள்ளவே இவ்வாறு செய்கின்றது.

பெண் பூச்சிகள் முட்டையிட சரியான இலையைத் தேர்ந்தெடுக்கும் போது தன்னுடைய கால்களால் இலையை உதைத்து இலைச்சாற்றினை வெளியேறச் செய்து கால்களை சுவைத்து அடையாளம் கண்டு கொள்கின்றன.

வண்ணத்துப்பூச்சி பெரும்பாலும் நச்சுத்தன்மை வாய்ந்த இலைகளையே முட்டையிட தேர்வு செய்கிறது. இதனால் முட்டையிலிருந்து வெளிவரும் கம்பளிப்பூச்சிகள் நச்சு இலையை தின்றே வளர்ந்து இதனுடைய உடலில் நச்சுத்தன்மை அதிகரிக்கிறது.

வண்ணத்துப்பூச்சியாக வளர்ந்த பின்பும் நச்சுத்தன்மை தொடர்வதால் பறவைகள் பெரும்பாலும் இதனை உண்பதில்லை.

நாய் – கூரிய மோப்பசக்தி, குறைந்த சுவையுணர்ச்சி

நாய்க்குட்டி

நாய் மோப்பசக்திக்கு பெயர் போனது என்பது எல்லோருக்கும் தெரியும். நாயின் மோப்பசக்தியானது மனிதர்களின் மோப்ப சக்தியைவிட 10,000 மடங்கு அதிகம் ஆகும்.

நாய்களுக்கு 220 மில்லியன் நுகர்ச்சி செல்கள் உள்ளன. மனிதர்களுக்கு வெறும் 5 மில்லியன் நுகர்ச்சி செல்களே உள்ளன.

அதே நேரத்தில் நாயின் நாக்கில் உள்ள சுவை மொட்டுகள் மனித நாக்கில் உள்ள சுவை மொட்டுகளில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே ஆகம்.

துருவமான் – கண் நிறம் மாறுதல்

துருவமான்

துருவமானின் கண்கள் கோடைகாலத்தில் பொன்னிறத்திலும் குளிர்காலத்தில் ஊதா நிறத்திற்கும் மாறுகின்றன. குளிர்காலத்தில் துருவப்பகுதியின் மங்கிய ஒளியிலும் இதனுடைய பார்வைத்திறனை அதிகரிக்கவே கண்கள் பொன்னிறத்திலிருந்து ஊதா நிறத்திற்கு மாற்றம் அடைகின்றன.

இம்மாற்றத்தால் இவ்விலங்கால் துருவப்பகுதியின் தொடர் இருளில் எளிதாக பார்க்கவும் எதிரிகளை அடையாளம் காணவும் இயலுகிறது.

சதர்ன் ரைட் வேல் – எதிரி பொடியன்

சதர்ன் ரைட் வேல் என்பது ஈகுவடார் நாட்டிற்கு தெற்குப்பகுதியில் காணப்படும் ஒருவகை திமிங்கலம் ஆகும். இது சுமார் 50 மீ நீளமும் 60 டன் எடையும் கொண்டது.

ஓர்க்கா எனப்படும் கொலைக்காரத் திமிங்கலத்தைத் தவிர ஏனைய கடல் வேட்டையர்களுக்கு இவை பயப்படுவதில்லை.

ஆனால் இதனுடைய எதிரி கெல்ப் குல் எனப்படும் மிகச்சிறிய பறவை ஆகும்.

மூச்சுவிட நீரின் மேற்பகுதிக்கு வரும் இத்திமிங்கலத்தின் குட்டியை கெல்ப் குல் தன்னுடைய கூரிய அலகால் குத்தி அரை மீட்டர் சுற்றளவுக்கு முதுகில் காயத்தை உண்டாக்கி விடுகிறது. இப்பறவை உண்டாக்கும் காயத்தால் அவை இறந்து விடுகின்றன.

இப்பறவையின் தாக்குதலால் இவ்வினத் திமிங்கலக்குட்டிகள் எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன.

குதிரை – முகபாவனை

மனிதர்களைப் போன்றே குதிரைகளும் முகபாவனைகள் மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன. இம்முகபாவனையால் அவை ஒன்றுடன் ஒன்று தொடர்பை ஏற்படுத்திக் கொள்கின்றன.

சுமார் 17 வகையான தனித்துவமான முகபாவனைகளை ஆராய்ச்சியாளர்கள் குதிரைகளிடம் கண்டறிந்துள்ளனர்.

பென்குவின் – காதல் பரிசு

ஜென்டூ மற்றும் அடேலி இனப்பென்குவின்களில் ஆண் பறவையானது பெண் பறவைக்கு கூழாங்கல்லை பரிசாக வழங்குகிறது.

பெண் பறவையானது அக்கல்லை பரிசோதித்த பின்னரே ஏற்றுக் கொள்ளும். அவ்வாறு பெண் பறவை கல்லை ஏற்றுக் கொண்டால் அது ஆண் பறவையின் காதலை ஏற்றுக் கொள்வதாக அர்த்தம்.

காரணம் அன்டார்டிக்காவில் கடற்கரையில் உறுதித்தன்மை வாய்ந்த கற்களை கண்டுபிடிப்பது சிரமம்.

பென்குவின்களுக்கு இக்கற்களால் என்ன நன்மை என்று தானே கேட்கிறீர்கள்? கற்களைக் கொண்டே பென்குவின்கள் கூடுகளை அமைக்கின்றன.

எனவேதான் பென்குவின்களின் காதல் பரிசு கற்களாக இருக்கிறது.

ஆப்பிரிக்க எருமை – ஓட்டளித்தல்

ஆப்பிரிக்க எருமைக் கூட்டத்தில் ஓட்டளிக்கும் முறை பின்பற்றப்படுகிறது. தாங்கள் நகர வேண்டிய திசையை தீர்மானிக்க இவ்வோட்டளிப்பு முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

ஓய்வின்போது பெண் ஆப்பிரிக்க எருமைகள் எழுந்து நின்று சுற்றுமுற்று பார்த்து பின்னர் மீண்டும் தரையில் அமர்கின்றன. எத்திசையில் பயணிக்க விருப்பப்படுகின்றனவோ அத்திசையைப் பார்த்து அமர்ந்து தங்களுடைய விருப்பத்தை பதிவு செய்கிறார்கள்.

பெரும்பான்மையோர் அமர்ந்திருக்கும் திசையை நோக்கியே கூட்டம் இறுதியில் நகரும். இந்த ஓட்டளிப்பில் வளர்ந்த பெண் எருமைகள் மட்டுமே பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு
வ.முனீஸ்வரன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.