ஒடி விளையாடும் போது வாழ்க்கைப் பாடம் நமக்குப் புரியும்
ஒவ்வொரு மனிதருள்ளும் ஒளிந்திருக்கும் குணங்கள் தெரியும்
கூடி விளையாடும் போது கோபம் என்ற நோய் விலகும்
கொண்டாடும் விதத்தில் அங்கே தோல்விக்கும் இடமிருக்கும்
தேடி நண்பன் வரும் வேளையில் ஒளிந்து விளையாடும் போது
திடமாக மனதினுள்ளே துணிவு என்ற குணம் பிறக்கும்
பாடிச் சென்று கபடியிலே பிறரை தொட்டு திரும்பும் போது
பாய்ந்து சென்றால் ஜெயித்திடலாம் என்ற பாதை நமக்குப் புரியும்
மூடி வைத்த மணலுக்குள்ளே புதைத்த பொருள் எடுத்தும் போது
முயற்சியினால் வென்றிடலாம் என்பதுவும் நமக்குப் புரியும்
வேடிக்கைதான் விளையாடும் வேளையிலும் கவனமாக
விழிப்புடனே இருப்பதற்கும் விளையாட்டே துணைபுரியும்
வாடிடாத உடல்வளரும் வலிமையுடன் பலம் பெருகும்
வந்து ஆடிப்பாடும் போது நட்பு எனும் பூ மலரும்
விலை கொடுத்து வாங்க முடியாத மகிழ்ச்சி
விளையாட்டு கொண்டு வந்து கொடுக்கும்!
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!