விளையும் பயிர் – படிப்பது எப்படி? – பாகம் 9

உற்று நோக்குபவர் கற்றுக்கொள்கிறார் என்று சென்ற கட்டுரையில் பார்த்தோம். கற்றுக்கொள்பவர் உற்று நோக்குவது இருக்கட்டும்!

கற்பிப்பவரும் தன்னிடம் ஆர்வமுடன் கல்வி கற்கவரும் மாணவரை உற்று நோக்க வேண்டும் அப்படியானால்தான் விளையும் பயிர் எது என்பதனை அதன் முளையிலே கண்டறிய முடியும்.

வகுப்பறையில் ஆசிரியர் கற்றுக் கொடுப்பதனை மாணவ மாணவியர் கற்றுக் கொள்கிறார்கள் என்பார்கள்.

இன்றைய தினம் மாணவ மாணவியர் வகுப்பறையில் ஆசிரியரிடம் பாட சம்பந்தமாக சந்தேகங்கள் எழுப்புவது மற்றும் கேள்வி கேட்பது என்பது அரிதான விஷயமாக மாறிவிட்டது.

வகுப்பறை என்பது ஒரு வழிப் போக்குவரத்து போல நமது நாட்டில் மாறிவிட்டது என்பதனை நம்மால் மறுக்க முடியாது.

மாணவர்கள் ஆசிரியர் சொல்வதை கவனிக்கின்றார்களா? என்பதை விட, மாணவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் அல்லது என்ன சொல்கிறார்கள் என்பதனை ஒவ்வொரு ஆசிரியரும் கவனமாக கவனிக்க வேண்டும்.

அப்படி கவனிக்கும் போதுதான், ஒரு ஆசிரியராக தனது கற்பித்தல் முறைகளை மாற்றி வகுப்புகளை உயிர்ப்புள்ளதாக மாற்றமுடியும்.

மேலும் ஒவ்வொரு மாணவ மாணவியரிடத்தும் பொதிந்து கிடக்கும் பேராற்றலை உணர்ந்து அதனை வெளிக்கொணர முடியும்.

விளையும் பயிர் போல கற்போரைக் கண்காணிக்க வேண்டும் என்பதை ஆசிரியர்கள் உணர்ந்தால் கல்வியில் புரட்சி நிச்சயம் நிகழும்.

ஒரு சிறுகதை சொல்லவா!

எத்தனை ஆப்பிள் பழங்கள்?

அது ஒரு தொடக்கப் பள்ளி. 3ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு கணிதப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் ஒரு ஆசிரியை.

அந்த வகுப்பில் ஒரு சுட்டி மாணவி. அவளது பெயர் ஆலிஸ்.

அன்று ஆசிரியை ஆலிஸிடம் ஒரு கூட்டல் மனக்கணக்கு கேட்டார்.

“ஆலிஸ் நான் உனக்கு 3 ஆப்பிள் தருகிறேன். நம் தலைமை ஆசிரியை 2 ஆப்பிள் தருகிறார். மேலும் உன்னோட வகுப்பாசிரியை 4 ஆப்பிள் தருகிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது உன்னிடம் மொத்தம் எத்தனை ஆப்பிள் பழங்கள் இருக்கும்?” எனக் கேட்டார்.

ஆலிஸ் தனது பிஞ்சு விரல்களில் எண்ண ஆரம்பித்தாள்.

“மிஸ் நீங்க 3, மேடம் 2, எங்க மிஸ் 4 ஆக மொத்தம் என்னிடம் 10 ஆப்பிள் பழங்கள் இருக்கும்” என்று கூறினாள்.

உடனே ஆசிரியை திரும்பவும் அதே கணக்கினைக் கேட்டார்.

அப்பொழுதும் ஆலிஸ் பொறுமையாக எண்ணி 10 என்றே விடை கூறினாள்.

‘உடனே ஆசிரியை என்ன இவள் நன்கு படிக்கிற சுட்டிப் பெண்தானே! பிறகு ஏன் தவறாகப் பதிலளிக்கிறாள்?’ என்று யோசித்தபடியே தனது அணுகுமுறையை மாற்றினார்.

“இப்போது சொல்லு ஆலிஸ்! நான் உனக்கு 3 மாம்பழங்கள் தருகிறேன். தலைமை ஆசிரியை 2 மாம்பழங்கள் தருகிறார்கள். மேலும் உங்கள் வகுப்பு ஆசிரியை 4 மாம்பழங்கள் தருகிறார் என வைத்துக் கொள்வோம். இப்போது உன்னிடம் மொத்தம் எத்தனை மாம்பழங்கள் இருக்கும்?” என்று கேட்டார்.

உடனே ஆலிஸ் தனது விரல்களால் மீண்டும் எண்ணிப் பார்த்து விட்டு மிகச்சரியாக 9 என்று பதில் கூறினாள்.

உடனே ஆசிரியை மீண்டும் ஆப்பிள் பழக் கணக்கினைக் ஆலிஸிடம் கேட்டார். இப்பொழுதும் ஒரு பழம் அதிகமாக தவறான பதிலைத்தான் ஆலிஸ் கூறினாள்.

உடனே ஆசிரியை இந்த முறை ஆரஞ்சுப் பழத்தின் துணையோடு கணக்கினை மறுபடியும் ஆலிஸிடம் கேட்டார். அதற்கு ஆலிஸ் சரியான பதிலைக் கூறினாள்.

உடனே ஆசிரியை “ஆலிஸ் நான் மாம்பழக் கணக்கு மற்றும் ஆரஞ்சுப்பழக் கணக்கு கேட்டால் நீ சரியான விடையினைக் கூறுகிறாய். ஆனால் ஆப்பிள் பழக் கணக்கில் மட்டும் ஏன் தவறாக விடையளிக்கிறாய்? உனக்கு ஆப்பிள் பழம் பிடிக்காதா?” என்று கேட்டார்.

அதற்கு ஆலிஸ் “ மிஸ் எனக்கு ஆப்பிள் பழம் என்றால் ரொம்பப் பிடிக்கும். நான் சரியாகத்தானே விடை சொல்கிறேன். பின்னர் நீங்கள் ஏன் நான் தவறாக விடை சொல்கிறேன் என்று சொல்கின்றீர்கள்?” என்று கேட்டாள்.

ஆசிரியை உண்மையிலேயே குழம்பிப் போனார்.

“சரி ஆலிஸ் ஆப்பிள்பழக் கணக்குக்கான உன்னுடைய பதிலினை கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போமா?” என்று கேட்டபடியே,

“நான் உனக்கு கொடுத்த ஆப்பிள்கள் 2 சரியா! அடுத்து மேடம் கொடுத்த ஆப்பிள்கள் 3, இரண்டையும் கூட்டினால் 5 வருகிறது சரியா! அப்பறமா உங்க கிளாஸ் மிஸ் 4 ஆப்பிள்கள் கொடுத்தாங்க. அதனையும் கூட்டினால் வருவது 9 சரியா! இப்ப சொல்லு உன்னிடம் 9 ஆப்பிள் பழங்கள்தானே இருக்க வேண்டும் பிறகு நீ ஏன் 10 என்று தவறாகச் சொல்கிறாய்?” என ஆசிரியை விளக்கமாகக் கேட்டார்.

இதனைக் கேட்டதும் ஆலிஸ் ஆசிரியைப் பார்த்து “அப்போ எங்க அம்மா என்கிட்ட கொடுத்து அனுப்பியிருக்கிற இந்த ஆப்பிள் பழத்தை கூட்ட வேண்டாமா? மிஸ்” என்று கேட்டவாறே, ஆலிஸ் தனது பையில் வைத்திருந்த ஒரு ஆப்பிள் பழத்தினை எடுத்துக் காண்பித்தாள்.

“மிஸ் இந்த ஆப்பிள் பழத்தை மதிய சாப்பாட்டு வேளையில் எனது ப்ரண்டஸ் கூட சேர்ந்து பகிர்ந்து சாப்பிட வேண்டும் என்று என்னோட அம்மா கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். நான் இந்தப் பழத்தை மொத்த கூட்டலில் சேர்க்க வேண்டாமா?” என்று கேட்டாள்.

அப்போதுதான் ஆசிரியை தனது தவறினை உணர்ந்தார்.

‘உன்னிடம் இப்போது எத்தனை ஆப்பிள் பழங்கள் இருக்கும்? என்று தான் கேள்வி கேட்டதால்தான் ஆலிஸ், தன்னிடம் ஏற்கனவே இருந்த அந்த பழத்தையும் சேர்த்து விடையளித்திருக்கிறாள்’ என்று.

யாருடன் விளையாடினாய்?

இப்படித்தான் பிரபல ரஷ்ய தத்துவமேதை மற்றும் பிரபல எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் வாழ்வில் நடந்ததாக ஒரு கதை சொல்வார்கள்.

அன்று மாலை தனது ஊரில் அமைந்திருந்த ஒரு பூங்காவில் டால்ஸ்டாய் அமர்ந்திருந்தார். அங்கே ஆலிஸ் போன்ற ஒரு சிறுமி வந்தாள்.

அவள் கையில் ஒரு பந்து வைத்திருந்தாள்.

அவள் டால்ஸ்டாயினைப் பார்த்து “தாத்தா என்னுடன் பந்து விளையாட வருகின்றீர்களா?” என்று அவரை அழைத்தாள்.

உடனே டால்ஸ்டாயும் “சரி” என்று கூறி அந்தச் சிறுமியுடன் சிறு பிள்ளை போல பந்து விளையாட ஆரம்பித்தார்.

நேரம் போனதே தெரியவில்லை.

மாலை மயங்கி வெளிச்சம் குறைய ஆரம்பித்தநேரம் சிறுமி, “தாத்தா! நேரம் ஆகிவிட்டது. வீட்டில் அம்மா தேடுவாள்” என்று கூறி வீட்டுக்குப் புறப்பட தயாரானாள்.

டால்ஸ்டாய் அவளிடம் “உங்கள் வீடு எங்கே உள்ளது?” என்று கேட்டார்.

சிறுமி அதற்கு “எங்கள் வீடு இந்தப் பூங்காவின் மிக அருகில் அந்தப் பகுதியில்தான் உள்ளது.” என்று காண்பித்தாள்.

டால்ஸ்டாய் அவளிடம் “உனது அம்மா நீ யாருடன் விளையாடினாய்? என்று கேட்டால், நான் ரஷ்ய தத்துவ மேதை லியோ டால்ஸ்டாய் அவர்களுடன் இவ்வளவு நேரம் விளையாடி விட்டு வருகிறேன் என்று சொல்” என்றாராம்.

உடனே சிறிதும் தாமதிக்காமல் அந்த சிறுமி “நீங்களும் உங்கள் அம்மாவிடம் நானும் இந்நேரம் வரை சிறுமி ஆலிஸ் உடன்தான் விளையாடி விட்டு வருகிறேன் என்று கூறுங்கள்” என்றாளாம்.

அப்போதுதான் டால்ஸ்டாய் அவர்களுக்கு ‘ஐயோ! இந்தச் சிறுமியிடம் நாம் தலைக்கனத்துடன் பேசிவிட்டோமே!’ என்ற அவருடைய தவறு புரிந்தது.

உடனே அவர் அந்தச் சிறுமியிடம், “சபாஷ், நீ என்னை விட நூறு மடங்கு பெரிய மேதையாக வருவாய்” என்று வாழ்த்தி அனுப்பினார்.

சென்ற வாரம் ‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்பதற்கு உண்மைச் சம்பவம் சொல்கின்றேன் என்று கூறிவிட்டு இங்கே இரண்டு கதைகளைத்தானே சொல்லியிருக்கின்றீர்கள் சார்! என்று நீங்கள் கேட்பது எனக்குத் தெரிகிறது. அந்த உன்னதமான நிகழ்வுகளை நான் உங்களுக்கு அடுத்த வாரம் சொல்லுகிறேன்.

( படிப்பது எப்படி என்று படிப் படியாய்ப் படிப்போம்)

மு​னைவர் ​பொ.சாமி
வேதியியல் இ​ணைப் ​பேராசிரியர்
வி.இ.நா. ​செந்திக்குமார நாடார் கல்லூரி
விருதுநகர் – 626 001
கைபேசி: 9443613294

முந்தையது உற்று நோக்கு – படிப்பது எப்படி? – பாகம் 8

5 Replies to “விளையும் பயிர் – படிப்பது எப்படி? – பாகம் 9”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.