வீணையடி நீ எனக்கு – சிறுகதை

நர்மதாவை நாராயணனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

எதையுமே தேர்வு செய்யும் விஷயத்தில் நாராயணனை மிஞ்ச எவருமில்லை என்னும் கூற்று, அவனைப் பொறுத்த மட்டில் இப்போதெல்லாம் பேத்தலாகவே பட்டது.

நண்பர்களும் உறவினர்களும் அவனைப் பற்றி வானளாவப் புகழ்ந்து தள்ளுகிற போதெல்லாம் ரொம்பப் பெருமையாகத்தான் இருந்தது. எல்லாம் திருமணமாகும் வரைதான்.

அலுவலக நண்பர்களின் பிரிவுபசார விழாவாகட்டும், உறவினர்களின் திருமணமாகட்டும் பரிசுகள் வாங்குவதிலிருந்து புடவை, நகை, பாத்திரங்கள் எதுவாயிருப்பினும் நாராயணன் இல்லாமல் எதுவும் நடக்காது.

அவ்வளவு நேர்த்தியாக, பாங்காக, தரமாகத் தேர்வு செய்வான். அவன் தேர்வு செய்துவிட்டால் கண்ணை மூடிக் கொண்டு வாங்கி விடலாம்.

உறவினர் வட்டாரத்திலும் சரி, நண்பர்கள் வட்டாரத்திலும் சரி, அவன் மூலமாய் பெண்ணோ, மாப்பிள்ளையோ தேர்வு பெற்று ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்கள் வெற்றிகரமாய் நடந்து முடிந்து, ஒவ்வொருவரும் சீரும், சிறப்புமாய் வளமுடனேயே வாழ்ந்து வருகின்றனர்.

அவனுடைய திருமணத்திற்குப் பெண் பார்க்கச் சென்ற சமயம்கூட, நண்பர்கள் எவரும் எவ்வித அபிப்ராய பேதமும் காட்டவில்லை.

உறவினர் ஒருவர் மூலமாய் நர்மதாவைப் பற்றிக் கேள்விப்பட்டு, அம்மாவும் அப்பாவும் அவனிடம் பிரஸ்தாபித்தபோது அவ்வளவு எளிதில் அவன் சம்மதித்து விடவில்லை.

உறவுக்குள்ளேயே ஆயிரம் பெண்கள் படித்து வேலைக்குச் செல்பவர்கள், படித்துவிட்டு வீட்டிலேயே இருப்பவர்கள், அதிகம் படிக்காத மிகுந்த வசதியைக் கொண்டவர்கள் என எண்ணற்றவர்கள் இருந்தும் அம்மாவும் அப்பாவும் அவனுடைய விருப்பத்திற்கே விட்டுவிட்டபோது, பார்த்துப் பார்த்து நிறைய யோசித்து, எவ்வளவோ விசாரித்து, மனம் நிறைந்தவனாய், பூரண திருப்தியுடன் தான் நர்மதாவைத் தேர்வு செய்தான்.

நர்மதா, நாராயணனின் குடும்பத்திற்கு எந்தவிதத்திலும் உறவு இல்லை. ஓரளவு வசதியுடைய குடும்பம். பிக்கல், பிடுங்கல் இல்லை. நர்மதாவுக்கு இரண்டு அண்ணன்கள். அவளுக்கு அடுத்து பிளஸ்டூ பயிலும் ஓர் தங்கை. ஓய்வு பெற்ற தாசில்தாரின் பெண். நல்ல குடும்பம்.

மனைவியின் விருப்பப்படி நர்மதாவின் திருமணத்தை தடபுடலாக எவ்வித குறையுமின்றி ஆடம்பரமாகவே நடத்தி முடித்தார் தாசில்தார் ஜெகன்னாதன்.

மூத்த பெண் என்பதாலும், நாராயணனை மிகவும் பிடித்துப் போயிருந்ததாலும் நாராயணன் குடும்பத்தினர் எதிர்பார்த்தற்கு மேலாகவே சீர்வரிசை செய்து அனைவரின் திருப்திக்கும் ஆளாகியிருந்தார் ஜெகன்னாதன்.

நர்மதா ஒரு பி.எஸ்.ஸி பட்டதாரி. உள்ளுரின் பிரபல கம்பெனி ஒன்றில் முக்கியப் பிரிவின் அதிகாரி. நாராயணன் அதே ஊரில் மத்திய அரசாங்கத்தைச் சேர்ந்த ஓர் நிறுவனத்தில் தணிக்கை அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தான்.

இரு குடும்பங்களும் ஒரே ஊரில் இருந்ததால் எவ்விதப் பிரச்சினையும் சிக்கலுமின்றி பலவிதத்தில் இரு குடும்பத்தினருக்கும் சௌகரியமாகப்பட்டது.

நர்மதா வேலைக்குச் செல்வதை நாராயணன் தடுக்கவில்லை. அதற்காக அவளைக் கட்டாயப்படுத்தவும் இல்லை. பொருளாதார விஷயம் கருதி நர்மதா தொடர்ந்து வேலைக்குச் சென்று வந்தாள்.

திருமணம் நடந்து முடிந்து மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் நாராயணன் தன் மனைவியின் தேர்வு குறித்து மெதுவாகக் கவலை கொள்ளத் துவங்கினான்.

திருமணமான முதல் ஓரிரு மாதங்கள் இருவரும் விருந்தினராக உறவினர்கள் வீடு செல்வதும், கோயில், குளம், சினிமா என வெளியே சுற்றுவதுமாகக் கழிந்தது.

குழப்பத்திற்கும், பிரச்சினைகளுக்கும் வித்தாக அமைந்த அந்த நாளை எண்ணிப் பார்த்தான் நாராயணன். முதன் முறையாக நெஞ்சம் கனத்தது.

அலுவலகத்திலிருந்து மாலை வீடு திரும்பியவன் ஆசையுடன் நர்மதாவை அழைத்தபடி அவளைக் கட்டிதழுவ, அவனது பிடியிலிருந்து விடுபட்டவளின் முகம் மாறியது.

“சே… என்ன இது? கொஞ்சம்கூட இங்கிதம் தெரியாமல்…”

“ஏய் என்ன புதுசா சிணுங்கல் இன்னிக்கு?”

“தோ பாருங்க. இந்த கொஞ்சறது, இழையறது இதெல்லாம் எனக்குக் கட்டோடு பிடிக்காது. கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு வருஷத்துக்குள்ளேயே பிள்ளையைப் பெத்துக்கிறதும், குழந்தையையும் பார்த்திக்கிட்டு குடும்பத்தோட மல்லாடுறதும்… சே…. என்ன யந்திர வாழ்க்கை இது?”

“நர்மதா! நீ படிச்சவ. விவரம் புரிஞ்சவ. நீயா இப்படிப் பேசற?”

“என்ன பெரிசா பேசிட்டேன்? கல்யாணம்னா வெறும் செக்ஸூக்குத்தான்னு எல்லோரும் நினைக்கிறாங்க. அதுதான் எனக்குச் சுத்தமாய் பிடிக்கலே.”

“கரெக்ட் நர்மதா. ஆனால் எடுத்த எடுப்பிலேயே இப்படியா ஒதுங்கணும்? நமக்குக் கல்யாணமாகி முழுசா மூணு மாசம்தான் ஆகுது. புதுசா கல்யாணமானவங்க மனசுல இப்படிப்பட்ட எண்ணமா தோணும்? உடனே குழந்தை பெத்துக்கணும்னு சொல்லலே. அதைத் தள்ளிப் போட்டுட்டு கொஞ்ச காலம் ஜாலியா வாழ்க்கையை அனுபவிக்க ஒரு கணவன் நினைக்கிறதுல என்ன தப்பு?”

“நீங்க கணவன்தான். அதுக்காக கல்யாணமான புதுசுங்கிற சாக்கில் மனைவியைக் கட்டிப் பிடிக்கிறதும், சீண்டறதும், கடைசியில் அவளை மயக்கி தன்னோட இச்சையைத் தீர்த்துக்கிறதும்… சே… என்ன வாழ்க்கை இது…?”

நாராயணன் அதிர்ந்தான்.

“மனைவியை கணவன் நல்ல தோழியா நினைக்கலாமில்லையா? அவள் கணவனுக்கு என்ன குறை வைக்கப் போகிறாள்?”

“அப்படீன்னா, தாம்பத்ய உறவுக்கு அர்த்தமில்லாமல் போயிடுமே நர்மதா? கணவன் மனைவிக்குள்ளே ஒட்டுதல், அன்னியோன்னியம் எல்லாம் எப்படி வரும்? அவங்களோட திருமண வாழ்க்கைக்கும், அன்பிற்கும் அடையாளச் சின்னமே முதலில் பிறக்கிற குழந்தைதானே? நமக்கு வாரிசுன்னு எதுவும் வேண்டாமா?”

“குழந்தை இல்லாதவங்க எத்தனை பேர் இருக்கிறாங்க? அவங்கெல்லாம் வாழ்க்கையிலே பிடிப்பு, சந்தோஷம் இல்லாமலா இருக்கிறாங்க?”

“அவங்களுக்கெல்லாம் குழந்தை இல்லாம இருக்கலாம். ஆனால் வாரிசுக்காக ஏங்கிட்டுத்தான் இருப்பாங்க. கணவன், மனைவி ரெண்டு பேர்ல யாருக்காவது உடல்ரீதியா ஏதாவது குறைபாடு இருக்கலாம். குழந்தை பாக்கியத்துக்குப் பிராப்தம் இல்லாம இருக்கலாம். அதுக்காக கணவன், மனைவிக்குள்ளே தாம்பத்ய உறவே இருக்காதுன்னு அர்த்தமில்லே நர்மதா.”

‘தாம்பத்ய உறவு இல்லாமலேயே கணவன், மனைவி இருவரும் அன்பாய் இருக்க முடியாதா என்ன? மனைவிங்கிற முறையில மற்ற விஷயத்துல உங்களுக்கு என்ன குறை வச்சிருக்கேன் சொல்லுங்க. குழந்தை இல்லாதவங்க மட்டும் வாரிசுக்கு என்ன பண்ணுவாங்களாம்?”

“குழந்தை பாக்கியமே இல்லை, ஏற்படாதுங்கிறது நிச்சயமா தெரிஞ்சு போச்சுன்னா, கடைசி காலத்து உதவிக்காக தங்களின் வாரிசாக யாரையாவது தத்து எடுத்துப்பாங்க.”

“அதே மாதிரி நாமும் எடுத்துக்கிட்டா போச்சு.”

“நர்மதா நீ பேசறது வேடிக்கையா இருக்கு. சின்னக் குழந்தை மாதிரி பேசறே. எவ்வளவுதான் ருசியோட சமைச்சாலும் உப்பில்லாமல் இருந்தால் அந்த உணவுக்கு என்ன சிறப்பு இருக்கும்? உப்பு, புளி, காரம், இனிப்பு இதெல்லாம் உணவின் ருசிக்கு எப்படி அவசியமோ அதுபோலதான் வாழ்க்கையும் நர்மதா. எல்லாமே தேவைதான். அதுவும் அளவோடு கண்டிப்பாகத் தேவை.”

“நீங்க ஆயிரம்தான் சொல்லுங்க. உங்க வாதத்துல எனக்கு உடன்பாடு இல்லீங்க. இப்படி எல்லாம் பேசி என்னை மயக்கிடலாம்னு நினைக்காதீங்க. உங்களுக்கு நல்ல மனைவியாய், நாணயமாய், நேர்மையாய் இருக்கிறேனா இல்லையா? அதோடு வச்சுக்குங்க.”

“வாழ்க்கையில முழுமையான நிறைவு இருக்காது நர்மதா.”

“அப்படிடீன்னா செக்ஸூக்காகத்தான் என்னைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்களா?”

நாராயணனுக்குத் தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது. அவள் புரிந்து பேசுகிறாளா, புரியாமல் பேசுகிறாளா என்பது தெரியாமல் குழம்பினான்.

“நீ கேட்கிற கேள்வியையே நானும் கேட்கிறேன். ஒரு நல்ல, அர்த்தமுள்ள, இனிய வாழ்க்கைன்னா என்னன்னு தெரியாத நீயும் கல்யாணம் பண்ணிக்காம இருந்திருக்கலாமே? அப்புறம் ஏன் கல்யாணத்துக்குச் சம்மதிச்சே?”

“அப்படி இல்லீங்க. ஓரு பெண்ணுக்குத் துணைன்னு ஒருத்தர் தேவையாயிருக்கே. சமூக நியதிகளுக்குக் கட்டுப்பட வேண்டியிருக்கே. தாயும் தந்தையும் தலைகுனியாமல் சமூகத்தில் உலவ வேண்டியிருக்கே. பெற்று விட்டதற்காக அவர்கள் மனம் கோணாமல் அவர்களுக்கு எவ்வித இழுக்கும் ஏற்படாமல் நடந்து கொள்ள வேண்டியது என் கடமை இல்லையா?

அப்படி சொல்ல முடியாதுங்க. என்னைப் பொறுத்தவரை கல்யாணம்ங்கிறது வெறும் செக்ஸூக்கு மட்டுமில்லை. அதைத் தவிர, எவ்வளவோ இருக்கு.”

நாராயணன் உடைந்து போனான்.

நர்மதாவுடன் அவனது வாழ்க்கை யந்திரத்தனமாய், எவ்விதப் பிடிப்புமின்றி ஆரம்பமாயிற்று.

நர்மதா அவனுடன் பல விஷயங்களை மனம்விட்டு பேசுவாள். அவனுடன் வெளியே செல்வாள். அவனுக்குப் பிடித்தமாதிரி சமைப்பாள். உடுத்துவாள். மனைவி என்கிற உரிமையில் உண்மையான காதலோடு அவன் அவளிடம் நெருங்கி வருவதை மட்டும் விரும்புவதில்லை.

தன் தோழி ஒருத்தியின் மண வாழ்க்கை சீர்குலைந்து, சின்னா பின்னமாய் போயிருந்ததில் ஆண் வர்க்கம் மீது ஒருவித வெறுப்பே அவளுக்கு ஏற்பட்டிருந்தது.

இதர தோழிகளிடம் பேசுகிற போதுகூட, செக்ஸ் ஒன்றே வாழ்க்கை என நினைக்கும் ஆண் வர்க்கத்துக்குப் பாடம் கற்பிக்கிறாற் போல் ஒவ்வொரு பெண்ணும் நடந்து கொள்ள வேண்டும் என ஆவேசப்படுவாள். தனக்கு திருமணம் நடந்தால் செயல்படுத்திக் காட்டுவதாக சவால் விட்டிருக்கிறாள்.

நாராயணன் குடும்பத்தினரும், நர்மதா குடும்பத்தினரும் அவர்களுக்கு வாரிசு உருவாகாததைக் கண்டு கேள்விக்குறியுடன் ஜாடைமாடையாகப் பேசிக் கொள்ளும்போதுகூட, ‘புரிந்து கொள்கிறாளா?’ என்பது போல நாராயணன் நர்மதாவைப் பார்ப்பான்.

அவளிடம், அவள் போக்கில் எவ்வித மாறுதலும் இருக்காது. அவர்களும் மற்றவர்கள் முன்னிலையில் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இயல்பாய் இருப்பது போல் நடந்து கொண்டனர்.

‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ என்கிற கதையில் நாட்கள் மாதங்களாகவும், மாதங்கள் வருஷங்களாகவும் உருமாறிக் கொண்டிருந்த சூழ்நிலையில், மாலை அலுவலகம் முடிந்து நர்மதா கிளம்புகிற சமயம் மழை பிடித்துக் கொண்டது. கிளம்பாமல் அரைமணி நேரம் மழை விடுவதற்காகக் காத்திருந்தும் மழை நிற்கவில்லை.

எம்.டி.யின் கார் ஊர்ந்து வந்து அவளருகே நின்றதும், நர்மதா சற்று விலகிச் சென்று, பார்வையை வேறு எங்கேயோ பார்ப்பது போல் திருப்பினாள்.

“ஆர். யு. கமிங்?” என்றார் எம்.டி.

“நீங்க போங்க சார். மழை நின்றதும் போறேன்.” என்றாள் பவ்யமாக.

“மணி ஆறாகப் போகுது. மழை நிற்கிற மாதிரித் தெரியலை. வாங்க. வீட்ல டிராப் செய்கிறேன்.” என மீண்டும் எம்.டி. அழைத்தபோது வழியின்றி ஏறிக் கொள்ள மாருதி கிளம்பியது.

எம்.டி.யின் காரில் வருவது நர்மதாவுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. இதோடு மூன்று முறை அப்படி ஆகிவிட்டது.

எவ்வளவு தயங்கியும், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வருகிறாற்போல் ஆகிவிடுகிறது.

இவள் முக்கியப் பிரிவின் அதிகாரி என்பதால் எல்லாப் பெண் சக ஊழியர்களும் கிளம்பிச் செல்வது போல் ஐந்து மணிக்கே போக முடிவதில்லை.

ஒருமுறை நகர் முழுவதும் பந்த். வாகனங்கள் ஏதும் ஓடவில்லை. மற்றொரு முறை வந்து கொண்டிருந்த பஸ் பாதிவழியில் மக்கர் செய்ய எல்லோரையும் இறக்கிவிட்டு மாற்றுப் பேருந்துக்காக காத்திருக்கச் சொன்னார்கள். அதுசமயம் அங்கு வந்து சேர்ந்த எம்.டி.யின் கார் இவளையும், இவளுடன் நின்று கொண்டிருந்த மற்றொரு சக ஊழியரையும் சுமந்து சென்றது.

அதுமட்டுமின்றி வரவர அலுவலகத்தில் எம்.டி. தன்னை அடிக்கடி அவர் அறைக்கு ஏதாவது சாக்கில் வரச் சொல்வதும், ஒப்புக்காக அலுவலக விஷயங்களைப் பேசிக் கொண்டு தன்மீது கண்களை மேயவிடுவதையும் நர்மதா கவனிக்க தவறுவதில்லை.

‘அலுவலகத்தில் தன்னைப் போல திருமணமான பல பெண்கள் பணிபுரியும்போது அவர்களிடம் காட்டாத பரிவும், நட்பும் தன்மீது மட்டும் ஏன்?’ என்பது நர்மதாவுக்குக் குழப்பமாய் இருந்தது.

டெல்லியில் நடக்கவிருந்த கம்பெனி சம்பந்தப்பட்ட முக்கிய மீட்டிங் ஒன்றுக்கு தன்னையும்கூட வரும்படி எம்.டி இன்று காலை கூப்பிட்டுச் சொன்னபோது உடனே அவள் சம்மதம் தெரிவிக்கவில்லை.

கணவரிடம் கேட்டுச் சொல்வதாகத் தெரிவித்தபோது எம்.டி.யின் முகம் மாறியது.

ஆபீஸ் வேலையைச் செய்ய கணவனின் அனுமதி தேவையில்லை எனக்கூறி, அவள் வராவிட்டால் அவளுடைய இடத்திற்கு நர்மதாவின் ஜூனியர் ஸ்டெல்லா மேரியை அமர்த்தி, அவளை பெங்களுர் கிளைக்கு மாற்ற வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுக்க, குழம்பினாள் நர்மதா.

அந்த ஜூனியர் ஸ்டெல்லா மேரியைச் சந்தித்து இவ்விஷயம் பற்றி கலந்து ஆலோசித்தபோது அவள் கூறிய தகவல்களைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் நர்மதா. எம்.டி.யின் சுயரூபம் இப்போது அவளுக்கு அப்பட்டமாயத் தெரிய வந்தது.

ஸ்டெல்லா மேரி எம்.டி.யின் வேண்டுகோளுக்கு சம்மதிக்கப் போவதில்லை என்றும் வேலையை ராஜினாமா செய்யத் தீர்மானித்திருப்பதையும் அறிந்தாள்.

ஸ்டெல்லா மேரி கணவனை இழந்தவள். நர்மதாவைப் போல அழகு இல்லாவிட்டாலும் குழந்தைகள் இல்லாததால் உடம்புக் கட்டுக் குலையாமல் கவர்ச்சிகரமாய் இருப்பாள்.

அன்று இரவு நர்மதாவின் முடிவைக் கேட்டு நாராயணன் வியப்படைந்தான். அவள் வேலையை விடப் போவதற்கான காரணத்தைக் கேட்டபோது, அவள் அலுவலக நிலவரங்களை விலாவாரியாக எடுத்துச் சொன்னாள்.

“இப்படிப்பட்ட சூழ்நிலை உருவாக என்ன காரணம் என நீ நினைக்கிறாய் நர்மதா?” எனக் கேட்டான்.

“பெண் பித்தர்களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்குதுங்க. வேறு என்னத்தைச் சொல்ல?”

“என்னைப் பொறுத்தமட்டில் திருமணமாகாத இளம் பெண்களும், திருமணமாகி இளமை குன்றாமல் கட்டுக்கோப்போடு குழந்தை குட்டிகள் இல்லாமல் இருக்கும் பெண்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் நர்மதா. நமக்குத் திருமணமாகி இத்தனை வருடங்களாகியும் உன் இளமை மாறாமல், பார்ப்பவர்கள் கண்களுக்கு வித்தியாசமாகத் தோன்றுகிற மாதிரி நீ இருக்கிறாய்.”

“அது என் குற்றமா?” இடைமறித்தாள் நர்மதா.

“உன் ஆபீசில் திருமணமானவங்க எத்தனையோ பேர் இருக்கிறாங்க இல்லையா? உன்னைத் தவிர, மத்தவங்க எல்லோருக்கும் அநேகமா குழந்தைகள் இருக்கு. குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வி என அவங்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள், கவலைகள். ஆபீஸ் நேரம் தவிர ஒரு நிமிடம்கூட ஆபிசில் தங்க முடியாத அளவுக்கு மலைபோல இதர வேலைகள்.

உனக்கு அந்த மாதிரி நிலைமை இல்லை. நினைச்ச நேரம் ஆபீஸ் போவதும், ஆபீஸ் நேரம் முடிந்தும் வீடு வரமுடியாத சூழ்நிலையும் இருக்கு. உன் வேலை அப்படி.

என்னதான் பொறுப்புள்ள அதிகாரி என்றாலும் நீ ஒரு பெண். அதுவும் அழகு குலையாத, கட்டுக்கோப்பான உடல்வாகைக் கொண்ட பெண்.

திருமணமாகியும் எவ்வித தயக்கமும் காட்டாமல், அடிக்கடி லீவு போடாமல், எவ்விதக் குடும்பப் பிரச்சினையையும் எடுத்துச் சொல்லாமல், கடமை உணர்வுடன் நீ செயல்படுவதை வேறு கோணத்தில் பார்க்க ஆரம்பித்து விட்டார் உங்க ஆபீஸ் எம்.டி.

ஒரு நிமிஷம் என்னோடு வா நர்மதா! இன்னும் புரியும்படியாய் சொல்கிறேன்.” என அவளை அழைத்துக் கொண்டு மாடிக்குச் சென்றான்.

மாடியிலிருந்த பூட்டிய அறை ஒன்றைத் திறந்தான். அங்கே உபயோகமில்லாத தட்டுமட்டுச் சாமான்கள் தாறுமாறாகக் கிடந்தன. அறை முழுவதும் தூசியும், புழுதியும், ஒட்டடையுமாய் காட்சியளித்தது. அறை மூலையில் ஓர் வீணை சாத்தி வைக்கப்பட்டிருந்தது.

‘எதற்காகத் தன்னை இங்கு கூட்டி வந்திருக்கிறார்?’ என்பது புரியாமல் குழம்பினாள் நர்மதா.

“இந்த வீணையைப் பார் நர்மதா! வருஷக் கணக்கில் இப்படிக் கிடக்கிறது. இவ்வளவு அழகான வீணையை மீட்டுவதற்கு ஆள் இல்லை. உபயோகப்படுத்தாததால் தூசியும், ஒட்டடையும் அதை ஆக்கிரமித்து, மரபாகமெல்லாம் செல்லரிக்க ஆரம்பிச்சிடுச்சு. இந்த வீணையைப் போலத்தான் நர்மதா பெண்ணும்.

பெண் என்பவள் வீணை என்றால் திருமணபந்தம் மூலம் அவளை ஆளவரும் கணவன் தான் அதை மீட்டுபவன். அவ்வப்போது இதமாக, மென்மையாக மீட்டி, வீணையிலிருந்து எழும் நாதத்தை ரசிக்கணும்.

வீணையை மீட்டத் தெரியாமல் முரட்டுத்தனமாக தாறுமாறாகக் கையாண்டாலும் தந்திக் கம்பி அறுந்துவிடும். நாதம் நாரசமாக ஒலிக்கும்.வீணை கேட்பாரற்று உபயோகப் படுத்தப்படாமலிருந்தால் இந்த நிலைதான்.

திருமணமான பெண்ணும் இப்படித்தான். கணவனுடன் அன்பாக, இதமாக, மென்மையாக, ஜீவனுள்ள காதலுடன் இல்லற வாழ்க்கை நடத்தா விட்டால் சமூகத்திலுள்ள சபல புத்திக்காரர்களும், பெண் பித்தர்களும் ஒட்டடையாகவும், புழுதியாகவும், தூசியாகவும், கரையான்களாகவும் மாறி அவர்களை ஆக்கிரமித்து அரிக்கத் தொடங்கி விடுவார்கள்.”

கணவன் நாராயணனின் இதமான அதே சமயம் அழுத்தமான, நியாயமான பேச்சு அவளை நிதானமாகச் சிந்திக்கச் செய்தது.

மறுநாள் காலை அலுவலகத்தில் தனது ராஜினாமாக கடிதத்தைச் சமர்ப்பிக்கத் தீர்மானம் செய்து கொண்டு அந்த நிமிடத்திலிருந்து தன்னை ஒரு புதுமனுஷியாய் மாற்றிக் கொண்டாள்.

அன்றைய இரவு, அவர்களின் முதல் இரவாகக் கழிந்தது!

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.