வெண்டைக்காய் குழம்பு வைத்தது – மங்கம்மாள் பாட்டி

இரண்டாவது நாள் காலையில் தனத்தின் வருகைக்காக மங்கம்மாள் பாட்டியுடன் சேர்த்து ஐந்து பெண்கள் அம்மையப்புரத்தின் ஆலமரத்தடியில் காத்திருந்தனர்.

முதல் நாளைவிட வேகமாகவே கடலை எடுக்க செல்ல வேண்டும் என்று தனம் சொல்லியதால் ஐவரும் காலை ஐந்தே முக்கால் மணிக்கே ஆலமரத்திற்கு வந்திருந்தனர்.

தனம் சரியாக ஆறு மணிக்கு ஆலமரத்தடிக்கு வந்ததும் எல்லோரும் கடலை காட்டினை நோக்கிப் புறப்பட்டனர்.

சரியாக ஐந்து நிமிடம் கழித்து ஒரு பெரிய பொட்டல்வெளியை அடைந்தனர். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் மறைப்புகள் ஏதுமின்றி வெளியாகவே அந்த இடம் காணப்பட்டது.

சூரியனும் லேசாக தன்னுடைய வெளிச்சத்தை பரவவிட ஆரம்பித்திருந்தான்.

அப்போதுதான் மங்கம்மாள் பாட்டி தூரத்தில் ஏதோ ஊர்ந்து வருவதைக் கண்டாள்.

முன்னால் சென்ற மல்லியை “ஏய், மல்லி நில்லு. எல்லோரும் அமைதியாக அப்படியே நில்லுங்க. அங்க பாருங்க நல்ல பாம்பு. வாயில முட்டையை எடுத்துட்டு வருது.” என்றபடி பாம்பை நோக்கி கையை நீட்டினாள் பாட்டி.

பாம்பைப் பார்த்த எல்லோரும் திகைத்து நின்றனர்.

சற்று முன்னால் வந்த பாம்பு ஏற்கனவே வைத்திருந்த முட்டைக் குவியலில் வாயில் கொண்டு வந்த முட்டையையும் சேர்த்தது. பின்னர் முட்டைக் குவியலை விட்டு சற்று தள்ளிப் படுத்தது.

சூரியன் இளஞ்சூட்டுடன் தன்னுடைய ஒளியை வேகமாகப் பரப்ப ஆரம்பித்தான். ஒரு முட்டை வெடித்து அதிலிருந்து குட்டிப் பாம்பு வெளியே வந்தது.

உடனே முட்டைகளுக்கு அருகே படுத்திருந்த பெரிய பாம்பு ஓடிச் சென்று குட்டியை விழுங்கியது. அதனைத் தொடர்ந்து முட்டைகள் ஒன்றொன்றாக வெடிக்கத் தொடங்கியன.

முட்டைகள் வெடித்து வெளியே வந்த குட்டிகளை தாய்ப் பாம்பு விழுங்கியவாறு இருந்தது.

ஒரே சமயத்தில் இரண்டு மூன்று முட்டைகள் வெடித்து குட்டிகள் வெளியே வரும்போது, ஏதேனும் ஒன்றை தாய்ப் பாம்பு பிடிக்கையில் ஒன்றிரண்டு குட்டிகள் தாய்ப் பாம்பிடமிருந்து தப்பித்து ஓடி மறைந்தன.

எல்லா முட்டைகளும் வெடித்து குட்டிகள் வெளியேறியதை உறுதி செய்ததும் தாய்ப் பாம்பு அவ்விடத்தை விட்டு சென்றது.

பாம்பு நகர்ந்ததும் எல்லோரும் மீண்டும் நடக்கத் தொடங்கினர்.

“தாய்ப் பாம்பு கண்ணுக்குத் தப்பிச்சதுதான் பெரிய பாம்பா வளரும். பாம்பு பொதுவாக நிறைய முட்டைகளைப் போடும். எல்லா முட்டைகளும் பாம்பா மாறி உயிரோட இருந்தா இந்த உலகத்துல எங்க பாத்தாலும் பாம்பாதான் இருக்கும்.

இன்னொன்னு தெரியுமா? பாம்பு முட்டை போடும் போது சிறுசாத்தான் இருக்கும். பாம்பு அதுமேல படுத்து அடை காக்கையில முட்டை வளரும்.

நல்ல பாம்பு தன்னோட முட்டைய பொரிய வைக்க சூரியனின் இளம்சூட்டையும் வெளிச்சத்தையும், பயன்படுத்தும்.” என்றாள் மங்கம்மாள் பாட்டி.

பாட்டி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த எல்லோரும் வாயைப் பிளந்தனர்.

“பாட்டி நிசமாவே நீ சூப்பருதான் போ. பாம்ப அடையாளம் கண்டதோட பாம்பு முட்டையை பொரியுறதை கண்ணால பாக்கவச்சிட்ட. அதோட பாம்பப் பத்தி அழகாக இத்தனை விசயம் சொல்லுறியே.” என்றாள் மல்லி.

“நான் இளவயசுல நெல்லுக்கதிர் அறுக்க நெல்லுக் காட்டுக்கு கூலி வேலைக்குப் போனேன். அப்ப இந்த மாதிரிதான் ஒரு நல்ல பாம்பு விளைஞ்ச முட்டைகளை எடுத்து வெளியில வைச்சுச்சு. வெயிலின் இளஞ்சூட்டுல முட்டைகள் பொரிஞ்சதும் குட்டிகளை விழுங்கியது. அப்ப எனக்கு அது அதிசயமா இருந்துச்சு. இன்னைக்கும் இதே மாதிரி நடந்திருக்கு.” என்றாள் பாட்டி.

“பாட்டி வெண்டைக்காய் குழம்பு வச்சதப்பத்தி சொல்றேன்னு சொன்னீக நேத்து. காட்டுக்குப் போற வரைக்கும் அதப்பத்திச் சொல்லுங்க. கதை கேட்டுக்கிட்டே நடந்தா தூரம் தோணாம போகும்.” என்றாள் தனம்.

“அதுவாம்மா, எனக்கு சின்ன வயசிலேயே கல்யாணம் வெச்சிட்டாகளா. அப்பயெல்லாம் எனக்கு சமைக்கத் தெரியாது.

என் மாமியாகிட்டதான் கொஞ்சம் கொஞ்சமா கூழு காச்ச, களி கிண்ட, நெல்லுச்சோறு ஆக்க, குழம்பு வைக்க கத்துக்கிட்டேன்.

அப்பயெல்லாம் ஒருநாளைக்கு ஒருவாட்டிதான் சமைப்போம். சாய்ந்திரம் ஐஞ்சு மணிக்கு கஞ்சி காய்ச்சுவோம்.

சோறு ஆக்கி குழம்பெல்லாம் வைப்போம். இப்ப மாதிரி நேரத்துக்கு நேரமெல்லாம் சமைக்க மாட்டோம்.

சமையல கத்துக்க ஆரம்பிச்சிருச்ச சமயம், என் மாமியாரு ஒரு கேத வீட்டுக்காக பக்கத்து ஊருக்குப் போயிட்டாக. என் வீட்டுக்காரரும், மாமனாரும் விவசாய வேலைக்குப் போயிட்டாக.

நானும் என் நாத்தனாளும் அதான் எங்க வீட்டுக்காரரோட தங்கச்சியும் வீட்ல இருந்தோம். என் நாத்தனாளுக்கு அப்ப எட்டு வயசு இருக்கும்.

என்னையும் என் நாத்தனாளையும் கம்ப இடிச்சு கம்பஞ்சோறும், வெண்டைக்காய் குழம்பும் வைக்கச் சொல்லி எங்க மாமியாரு சொல்லிட்டுப் போயிருந்தாக.

கம்ப இடிச்சி கம்பஞ்சோறு செஞ்சிட்டேன். வெண்டைக்காய் குழம்புக்கு வெண்டைக்காயை அலசி நறுக்குனேன். விழுவிழுன்னு வந்துச்சு.

அப்ப என் நாத்துனா, ‘தண்ணிய ஊத்தி அலசினா விழுவிழுப்பு போயிரும் மதினி’ன்னு சொன்னா.

உடனே சட்டியில தண்ணிய ஊத்தி நறுக்கின வெண்டைக்காய்களை போட்டேன். அயிர மீன அலசுர மாதிரி மெதுவாக கைய உள்ளவிட்டு கலக்குனேன்.

வெண்டைகாயோட விழுவிழுப்பு அதிகமாயிடுச்சு.

‘ஐயோ! இத சமைக்க முடியாது போல. மாட்டுக்காச்சும் ஊரதண்ணியில போட்டுடுவொம்’ன்னு நான் சொன்னேன்.

உடனே என் நாத்தனா ‘மதினி, இந்த விழுவிழுப்பு விசம். மாட்டுக்கு ஊத்துனா மாடு செத்திரும். வேண்டாம். கீழ ஊத்திருவோம்.’ன்னு சொல்லி வீட்டுக்குப் பின்னால இருந்த குப்பைக் குழியில ஊத்திட்டா.

பிறகு ரெண்டு பேரும் சேர்ந்து சோறு ஆக்குனோம். சோத்துக்கு ஊத்திச் சாப்பிட ரசம் மட்டும் வைச்சோம். எள்ள வறுத்து துவையல் வைச்சோம்.

நைட்ல எங்க மாமியா கேத வீட்டுக்குப் போயிட்டு வந்து குளிச்சிட்டு சோறு சாப்பிட உட்கார்ந்தாக. சோறு, ரசம், எள்ளு துவையல வைச்சேன்.

‘வெண்டைக்காய் குழம்பை காலையில கம்பஞ்சோத்துக்குன்னு வச்சிட்டியா?’ன்னு கேட்டாக.

என் நாத்தனா உடனே நடந்த எல்லாம் ஒன்னு விடாம சொல்லிட்டா. எங்க மாமியா அதைக் கேட்டதும் கலகலன்னு சிரிச்சாக.

என் மாமனாருக்கிட்டயும் என் வீட்டுக்காரருகிட்டேயும் நான் வச்ச வெண்டைக்காய் குழம்பு பத்தி சொல்லி சொல்லி சிரிச்சாக.

இப்பவும் என் நாத்தனாரு ‘மதினி வெண்டைக்காய் குழம்பு சாப்பிட்டு நாளாயிடுச்சு. கொஞ்சம் வப்போமா?’ன்னு அடிக்கடி நக்கலாக் கேட்பா’ என்று சொல்லி சிரித்தாள் மங்கம்மாள் பாட்டி.

அன்னைக்கு முழுவதும் தப்பு கடலை எடுத்தும், எடுத்த கடலைகளை மூட்டைகளாகவும் உதவினாள் மங்கம்மாள் பாட்டி.

அன்றைக்கு கடலைக்காட்டிலிருந்து வேலையை முடித்துவிட்டு அம்மையப்புரம் நெருங்கியபோது தனம் மங்கம்மாளிடம் “பாட்டி, நாளையோட கடலை காட்ல வேலை முடியப் போகுது. அதனால நாளைக்கு கட்டாயம் வேலைக்கு வந்திடுங்க. நாளைக்கும் உங்க கதை ஒன்ன எடுத்துவிடுங்க” என்றாள்.

“சரிம்மா, நாளைக்கு பாட்டும், டீ தாளித்த கதையையும் சொல்றேன்.” என்றபடி விடைபெற்றாள் மங்கம்மாள் பாட்டி.

( பாட்டி கதை தொடரும்)

வ.முனீஸ்வரன்

One Reply to “வெண்டைக்காய் குழம்பு வைத்தது – மங்கம்மாள் பாட்டி”

Comments are closed.