வெண்டைக்காய் பொரியல் செய்வது எப்படி?

வெண்டைக்காய் என்றாலே அதன் உடைய வழுவழுப்புதான் முதலில் நினைவுக்கு வரும். வழுவழுப்பின் காரணமாக வெண்டைக்காய் நிறைய பேருக்கு பிடிக்காம போகும்.

வழுவழுப்புக்கு அதில் உள்ள அமிலங்களே காரணம். ஆனால் வெண்டைக்காயில் உள்ள சத்துகள் அவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன. வெண்டைக்காயில் நார்சத்து, மாவுச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம் ஆகியவை உள்ளன.

வெண்டைக்காயின் பூர்வீகம் ஆப்பிரிக்காவில் உள்ள எத்தோப்பியா ஆகும். அங்கிருந்து அரேபியா, நைல் நதியோர நாடுகள் மூலம் இந்தியாவிற்கு அறிமுகமானது.

அடிமை வியாபாரம் தொடங்கிய காலத்தில் ஆப்பிரிக்க அடிமைகள் மூலம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. வெண்டைக்காயில் சாம்பார், பச்சடி, பொரியல், சூப் போன்ற உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

சுவை மற்றும் சத்து மிகுந்த வெண்டைக்காய் பொரியல் தயார் செய்யும் முறை பற்றி பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் – ½ கிலோ

சின்ன வெங்காயம் – 15 (எண்ணிக்கையில்)

மிளகாய் வற்றல் – 4

உப்பு – தேவையான அளவு

 

தாளிக்க

கடுகு – ½ ஸ்பூன்

உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்

கருவேப்பிலை – ஒரு கொத்து

நல்ல எண்ணெய் – தேவையான அளவு

 

செய்முறை

முதலில் வெண்டைக்காயை தண்ணீரில் கழுவி துடைத்துக் கொள்ளவும். பின் வட்ட வட்டமாக அரிந்து தனித்தனியாக படத்தில் காட்டியவாறு தட்டில் ½ மணி நேரம் உணர விடவும்.

 

வெட்டி உலர வைத்த வெண்டைக்காய்
வெட்டி உலர வைத்த வெண்டைக்காய்

 

சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

 

வெங்காயம் மற்றும் உலர்ந்த வெண்டைக்காய்
வெங்காயம் மற்றும் உலர்ந்த வெண்டைக்காய்

 

வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு நல்ல எண்ணெய் ஊறவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, நீளவாக்கில் வெட்டி வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும். கடுகு வெடித்தவுடன் வெண்டைக்காயைச் சேர்க்கவும்.அதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய் வற்றலை நான்காக ஒடித்துச் சேர்க்கவும்.

 

வெண்டைக்காய் வதக்கும் போது
வெண்டைக்காய் வதக்கும் போது

 

சிறிது நேரத்திற்கு ஒரு முறை கிளறி விடவும். வெண்டைக்காயின் பச்சை நிறம் மாறத் தொடங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான வெண்டைக்காய் பொரியல் தயார்.

 

சுவையான வெண்டைக்காய் பொரியல்
சுவையான வெண்டைக்காய் பொரியல்

 

குறிப்பு

வெண்டைக்காயை வெட்டி உலர வைப்பதனால், வதக்கும் போது வெண்டைக்காயின் வழுவழுப்புத் தன்மை குறைந்து விடும்.

வெண்டைக்காய் பொரியலுக்கு பிஞ்சு வெண்டைக்காயைத் தேர்வு செய்யவும்.

– கோகுலவாணி பிரபு

 

One Reply to “வெண்டைக்காய் பொரியல் செய்வது எப்படி?”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.