மரங்களுடன் அளவளாவி
சில பல
கவிதைகள் அரும்பிக்
கூடி மகிழ்ந்து
புலர்ந்து மலர்ந்த
அந்தியோடு ஆயிரம்
பொழுதுகள் போயின!
பின்னர் மெது மெதுவாய்
உள் நுழைந்த
வெறுமைக்கு மேலும்
மரமில்லாக்
கிளைகளுண்டு
அவ்வாறான சந்தடிகளில்
சந்ததி கூடிய
திசை வண்ணங்கள்
மறந்து தளர்ந்ததொரு
விதி!
ஏகாந்தங்களில் பல்வேறு
இக்கட்டுச் சுமைளைச் சுமந்த
லயிக்க இயலா நிகழ்வுகள்
திணித்தலின் பொருட்டே
திரிகின்றன!
நாகரிகங்கள் போர்த்திக் கொண்ட
இயற்கைச் சமவெளிகளில்
இடைவேளையின்றி
எழும்
பணம் தோய்ந்த
கூக்குரல்கள்!
சூழ்நிலைப் பரப்புகளின்
சூடு தாங்கும்
பயிற்சிகள் பல
களமிறங்குகின்றன!
வெண் குதிரை தோன்றிய
மிச்சமிருக்கும்
ஏதேதோ
கனவுகளின் நிமித்தம்
நடை பயிலும்
மௌனங்களோடு பிணைந்த
நினைவு மயக்கம்
விரிந்து கிடக்கிறது
பெரும்பிரதேசமாய்!
எஸ்.மகேஷ்
சிட்லப்பாக்கம்
சென்னை – 600064
கைபேசி: 9841708284
மின்னஞ்சல்: mahicen@yahoo.com
எஸ்.மகேஷ் அவர்களின் படைப்புகள்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!