வெந்தயக் குழம்பு சின்ன வெங்காயத்தையும் வெந்தையத்தையும் கொண்டு செய்யப்படும் குழம்பு வகையாகும்.
வெந்தயம் நமது சமையலறையில் இருக்கும் மருந்து உணவுப் பொருளாகும்.
வெந்தயம் உடலின் சூட்டினை நீக்கி குளிர்ச்சியைத் தரவல்லது.
இனி சுவையான வெந்தயக் குழம்பு செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – 200 கிராம்
வெந்தயம் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மசாலுக்கு
மல்லிப் பொடி – 1½ ஸ்பூன்
சீரகப் பொடி – ¾ ஸ்பூன்
மிளகாய் வற்றல் பொடி – ¾ ஸ்பூன்
மஞ்சள் பொடி – ½ ஸ்பூன்
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
தாளிக்க
நல்ல எண்ணெய் – 10 ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கீற்று
கடுகு – ¼ ஸ்பூன்
செய்முறை
முதலில் புளி மூழ்குமளவு நீர் ஊற்றி புளியை ஊற வைக்கவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து சதுரங்களாக நறுக்கவும்.
கறிவேப்பிலையை தண்ணீரில் அலசி உருவி வைத்துக் கொள்ளவும்.
மல்லிப் பொடி, சீரகப் பொடி, மிளகாய் வற்றல் பொடி, மஞ்சள் பொடி, ஊற வைத்த புளி மற்றும் புளித் தண்ணீர் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மசாலாக அரைத்து கொள்ளவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் சேர்க்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.
பின் அதனுடன் சதுரங்களாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
சின்ன வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து கிளறவும்.
அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்புக் கலவை ஒரு கொதி வந்தவுடன் அடுப்பின் தணலை குறைத்து கொதிக்க விடவும்.
குழம்பில் எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது வெறும் வாணலியில் வெந்தயத்தை சிவக்க வறுத்து குழம்பில் சேர்க்கவும்.
எண்ணெய் பிரிந்து குழம்பின் மேல் படர்ந்த பின் அடுப்பினை அணைத்து விடவும்.
சுவையான வெந்தயக் குழம்பு தயார்.
இக்குழம்பினை ஓரிரு நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
வெந்தயக் குழம்பினை சுடுசாதத்தில் பிசைந்து வறுத்த அல்லது சுட்ட அப்பளத்துடன் சேர்த்து உண்ண சுவையாக இருக்கும்.
பழைய சாதத்துடன் இக்குழம்பினை சேர்த்து உண்ணலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் மல்லிப் பொடி, சீரகப் பொடி, மிளகாய் வற்றல் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றிற்குப் பதிலாக 2½ ஸ்பூன் மசாலா பொடி சேர்த்து குழம்பு தயார் செய்யலாம்.
–ஜான்சிராணி வேலாயுதம்