வெயிலை மனதால் வெறுத்திடாதே
விரும்பியே பழகிடு தோழனே!
வெயில்போல் நல்ல நண்பனே
இதுவரை கிடைத்தது இல்லையே!
பெயிலோ பாசோ கவலைகளின்றி
பள்ளியை மறந்திடச் செய்தவன்!
துயிலும் இரவினை துரத்தி நீண்ட
பகலினை நமக்குத் தந்தவன்!
பயிர்களில்லா வயல்வெளி தன்னை
பாய்போல் நமக்கெனத் தந்தவன்!
அயிரைகள் ஓடும் ஆற்றினில் குதித்து
ஆடிப் பாடிடச் செய்தவன்!
தயிரோ நீரோ பானகச் சுவையோ
தாகம் தீர்த்திடச் செய்தவன்!
வயிற்றினில் பசித்தீ எழும்பிடும்போது
கூழ் தன்னைக் குடிக்கத் தருபவன்!
வெயிலை மனதால் வெறுத்திடாதே
விரும்பியே பழகிடு தோழனே!
வெயில்போல் நல்ல நண்பனே
இதுவரை கிடைத்தது இல்லையே!