ஊர் சுத்தும் கருப்பு!

பள்ளிக்கூடத்துக்கு போயிட்டு வந்து வீட்டுக்கு வெளியில காற்றோட்டமாக உட்கார்ந்து இருந்தேன்.

எங்க பக்கத்து வீட்டு ராசாத்தி பாட்டி கோயிலுக்கு போயிட்டு வந்து, “என் பேரனுக்கு நல்லபடியா படிப்ப கொடுத்து, கை கால் சுகத்தை கொடுக்கணும் கருப்பா!” என்று திருநீறு பூசி விட்டார்கள்.

“எங்க பாட்டி போயிட்டு வந்தீங்க?”

“இன்னைக்கு வெள்ளிக்கிழமையா! அதான் கருப்புசாமிக்கு விளக்கு போட்டு சாமி கும்பிட்டு வந்தேன்!”

“ஓ! அப்படியா பாட்டி !”

“ஆமாய்யா! எந்தங்கம்!” என்று கூறிவிட்டு பாட்டி அவர்களின் வீட்டிற்கு சென்று விட்டார்.

“குமாரு சாப்பிட வாடா. சோறு ஆற போகுது!” என்ற அம்மாவின் குரல் அடுப்படியில் இருந்து ஒலித்தது.

வீட்டுக்குள்ளே சென்று சாப்பிட்டு விட்டு மீண்டும் எங்கள் வீட்டு திண்ணையில் வந்து மெல்ல அமர்ந்தேன்.

ராசாத்தி பாட்டியும் திண்ணையில் உட்கார்ந்திருந்தார்கள். வேப்பமரத்தில் இருந்து காற்று நன்றாக வீசிக் கொண்டிருந்தது.

அன்று பௌர்ணமி என்பதால் நிலாவும் பிரகாசமாக இருந்தது. சிறிது நேரத்தில் கரண்ட் கட் ஆகிப் போனது.

உடனே பாட்டி மெல்ல எழுந்து, “வீட்டில போய் மண்ணெண்ணய் விளக்கை ஏத்திட்டு வாரேன்டா பேராண்டி” என்று வீட்டுக்கு சென்றார்.

பின்பு சற்று நேரத்தில் விளக்கு ஏற்றி விட்டு மீண்டும் திண்ணையில் வந்து அமர்ந்தார்.

எனக்கு பாட்டியிடம் கதை கேட்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது.

“பாட்டி எனக்கு ஒரு கதை சொல்லுங்க!”

“நான் எந்த கதையை சொல்றது!

நான் வளர்ந்த கதையை சொல்லவா?

வாழ்ந்த கதையை சொல்லவா?

பிறந்த கதையை சொல்லவா?

புகுந்த கதையை சொல்லவா?”

“எனக்கு ஒரு நல்ல சாமி கதையை சொல்லுங்க பாட்டி” என்று சொன்னவுடன் கதையை சொல்ல ஆரம்பித்தார்.

“அன்னைக்கு ஒருநாள் நல்ல அர்த்தசாமம். வாழைதோட்டத்துல நான் மட்டும் தனியா தண்ணி பாச்சிக்கிட்டு இருந்தேன். அப்ப அந்த வாசனை எனக்கு வந்துச்சு”

“என்ன வாசனை பாட்டி அது?”

“சந்தனவாசமும் சவ்வாது வாசமும் புனுகு வாசமும் கலந்த ஒரு வாசனை வந்துச்சு! கூடவே அந்த சுருட்டு வாசமும் கூடி வந்துச்சு. அப்புறம் அந்த சத்தமும் கேட்டுச்சுடா பேராண்டி”

“அது என்ன சத்தம் பாட்டி?”

“சலங்கை சத்தமும், சாட்டை சத்தமும், குதிரை குதிச்சு ஓடுற சத்தமும் கேட்டுச்சு! நல்லா உற்றுப் பார்த்தேன்.

நல்ல முறுக்கு மீசையும், முட்டை முளிகண்ணும், நெத்தியில பட்டையும், ரோசாப்பூ மாலையும், வீச்சருவாளும், வேல்கம்பும், ஈட்டியை இடையில இட்டு, இடவளரியை தோளில் போட்டு வேட்டை நாயை முன்ன விட்டு அவர்தான் போனாரு! அவரேதான் போனாரு! கையெடுத்து கும்பிட்டு கண் கலங்கிப் போயி நின்னேன்!

இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு ரெட்ட மாட்டு வண்டி பூட்டி ஒய்யாரமா குடை புடிச்சு நம்ம ஊரு வழி போனாரு! அந்த சத்தமும் எனக்கு கேட்டுச்சு டா! அந்த ரெட்ட மாட்டு வண்டியில அழகா அமர்ந்து அருமையா போனாரு!.

அந்த வண்டிக்கு பின்னால ஒரு கால தொங்கவிட்டு ஒரு காலை மடக்கி உட்கார்ந்து போனவரு என்ன பார்த்துட்டாரு. அவரை பார்த்த உடனே கதியே கலங்கிப் போச்சு! கையெடுத்து நின்னேன்! அந்தக் காட்டு பக்கத்தில போய் மாட்டுவண்டி மறைஞ்சிருச்சுடா”

“இவங்க எல்லாம் யாரு பாட்டி?”

“முதல்ல குதிரையில போனாருலடா அவருதான் பெரிய கருப்பு!

ரெட்ட மாட்டு வண்டி பூட்டி ரெண்டாவதா போனவரு சின்ன கருப்பு!”

“அப்போ மாட்டு வண்டிக்கு பின்னால கால தொங்கவிட்டு உக்காந்துட்டு உங்கள பார்த்துட்டு போனவரு யாரு பாட்டி?”

“அவருதான் டா என் குலசாமி நொண்டிக் கருப்பு!”

“இவங்க எல்லாம் நைட்ல எங்க போறாங்க பாட்டி?”

“நம்ம ஊருக்கு காவல் தெய்வம் கருப்பு. அவரு இரவு நேரத்தில சுத்துற பேய், பிசாசு, காட்டேரி, ஆடு, மாடு களவாங்குற களவாணி பயலுக! இப்படி எல்லாத்தையும் வேட்டையாடி ஊரையும் ஊர் மக்களையும் காப்பாத்துர காவக்காரன்.”

“அந்தக் கருப்பன் நல்லவரா பாட்டி?”

“நல்லதே செய்கிற மக்களுக்கு நல்லவரு!

கெட்டது செய்ற மக்களுக்குக் கெட்டவரு!

அண்டி வார மக்களுக்கு அன்பக் கொடுப்பாரு!

அடங்காத மக்களுக்கு அழிவைத் தருவாரு!

ஊரக் காத்து நிப்பாரு!

ஊரு சுத்தியும் வருவாரு!”

“இப்படி நம்ம ஊர் மக்களை காவல் காத்து காப்பாத்துற கருப்பனுக்கு நம்ம என்ன சம்பளம் கொடுக்கணும் பாட்டி?”

“அட போடா! நீ வேற, சம்பளமா?”

“அவருக்கு வருஷத்துல ஒருநாளு கெடா வெட்டி, பொங்க வச்சு, அவருக்கு பட்டு வேட்டி கட்டி, பட்டு துண்டு போட்டு, பன்னிரு தெளிச்சு, ரோசாப்பூ மாலை போட்டு, சாராயம், சுருட்டு, பனை மரத்து கள்ளு, கஞ்சா, புகையிலை, காதோல கருகமணி இப்படி எல்லாத்தையும் படச்சு அவர வருந்தி அழைச்சோம்னா வந்து நிப்பாரு எங்க கருப்பு!”

என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கரண்ட் வந்தது. ஓட்டு வீடு மேலே இருந்து கெவுளி சத்தம் விடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது.

கெவுளி சத்தம் கேட்டவுடனே பாட்டிக்கு ஒரே சந்தோஷம்.

“ஐயா! உத்தரவு கொடுத்துட்டாரு!” என்று பாட்டி ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தார்.

“அரியும் சிவனும் ஒன்னு! அதை அறியாதவங்க வாயில மண்ணு!” என்று சொல்லிக் கொண்டே ராசாத்தி பாட்டி வீட்டை நோக்கி சென்றார்.

நான் அமைதியாக நின்றேன்.

பெ.சிவக்குமார்
பி.எட் (வேதியியல்) முதலாம் ஆண்டு
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம்
Cell- 9361723667
sivakumarpandi049@gmail.com

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.