குறும்படம் விமர்சனம் – பாரதிசந்திரன்

குறும்படம் விமர்சனம் என்ற புதிய தொடர் இந்த வாரம் ஆரம்பமாகின்றது. பாரதிசந்திரன் என்று இலக்கிய உலகில் புகழ் பெற்ற முனைவர் செ சு நா சந்திரசேகரன் அவர்கள் எழுதும் தொடர் இது. அவர் இனிது இணைய இதழில் தமிழ் இணைய இதழ்கள் என்ற ஒரு சிறப்பான தொடர் எழுதியவர். கல்லூரி மாணவர்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் மிகவும் உதவியாக அமையும் தொடர் அது.

குறும்படம் என்பது ஒரு சிறந்த கலை வடிவம். குறும்படம் விமர்சனம் என்ற இந்தத் தொடர், பாரதிசந்திரன் அவர்கள் கைவண்ணத்தில் சிறப்பாக மிளிரும்; கலை இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக அமையும்.

அதீத வளர்ச்சியின் ஊடே இலக்கியம், உலக அளவில் தன்னை எப்பொழுதும் நிலை நிறுத்திக் கொண்டே இருக்கும்.

அவ்வகையில் குறும்படங்கள் இலக்கிய மேம்பாட்டின் வளர்ச்சியில் ஓர் உன்னத இடத்தை இன்று பிடித்திருக்கின்றன.

சிறுகதைகள், காட்சி வடிவம் பெற்று, இசைப் பின்னணியோடு ரசிகரின் மனதில் ஆழமான உணர்ச்சிகளைக் கொண்டு போய்ச் சேர்க்கும் இலக்கியப் பணியை, குறும்படங்கள் மிகச் சிறப்பாகச் செய்கின்றன.

குறும்படங்கள் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனால் இக்காலத்தில், மிகப்பெரும் அளவில் அனைத்து மொழிகளிலும் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவை, சாதனைகளைச் செய்தும், பிரமிப்பை ஏற்படுத்தியும் வருகின்றன.

தமிழ்க் குறும்படங்கள் உலகக் குறும்படங்களுக்குப் போட்டியாகப் பல முன்னெடுப்புக்களைச் செய்து கொண்டிருப்பதைக் குறும்படங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறவர்கள் அறிவார்கள். அவ்வகையில் வெளிவந்து கொண்டிருக்கும் பல மொழிகளில் வெளிவரும் சிறப்பான குறும்படங்களைக் குறித்து அறிமுகப்படுத்தும் வகையில் இக்கட்டுரைத் தொடர் அமைகிறது.

யூ ட்யூப் போன்ற தளத்திலும், சில இணையதளங்களிலும் குறும்படங்கள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன. பல இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் சில கருத்தாக்கங்களுடன் குறும்படப் போட்டிகளைத் தொடர்ந்து நடத்துகின்றன. அவை, அவையவை சார்ந்த தளங்களில் வெளியிடப்படுகின்றன.

சில OTT தளங்களில், புதுப்படங்கள் மற்றும் தொடர்கள், குறும்படங்கள் போன்றவை வெளியிடப்படுகின்றன. தற்போது WWW.ONVI.MOVIE எனும் தமிழகத்தின் புதியத் தொழில்நுட்ப அமைப்பின் மூலமாகப் பணம் செலுத்திப் பார்க்கும் தளமாகக் காணப்படுகிறது.

அதில் பல குறும்படங்கள் தற்போது சிறப்புடன் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாரமும் ஒரு குறும்படம் குறித்துக் காண்போம்.

(குறும்படம் விரியும்)

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com

புகைப்படம்: Gerd Altmann from Pixabay

3 Replies to “குறும்படம் விமர்சனம் – பாரதிசந்திரன்”

  1. எந்த ஒரு செயலும் விமர்சனத்திற்குட்படும் போது அது மேலும் செழுமை கொள்கிறது. உங்கள் விமர்சனத்தால் குறும்படங்கள் செழுமையடையட்டும். வாழ்த்துக்கள்! ஆவலோடு காத்திருக்கிறோம்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.