சூது கொடியது; மிகவும் கொடியது! – வ.முனீஸ்வரன்

சூது கொடியது; மிகவும் கொடியது!

ஆம். மனிதன் நாகரிகம் அடைந்து, நிலையாக ஓரிடத்தில் தங்க ஆரம்பித்து, பொழுதுபோக்கிற்கு என்று நேரம் கிடைத்த காலம் முதல் இன்றைக்கு வரையிலும் சூது மிகக்கொடுமையான விளைவுகளையே கொடுத்து வருகிறது.

அன்றே அவ்வைப்பாட்டி கொன்றை வேந்தனில் ‘சூதும் வாதும் வேதனை செய்யும்’ என்று பாடி வைத்துள்ளார்.

நமது புராணங்களிலும்கூட சூதாட்டத்தால் கெட்டவர்கள் என்று மூவரைக் குறிப்பிடுகின்றனர்.

அவர்களின் கதைகளைத் தெரிந்து கொண்ட பிறகாவது மனிதர்கள் சூதாட்டத்தில் ஈடுபடக் கூடாது என்பதற்பதற்காகவே அவை சொல்லி வைக்கப்பட்டிருக்கின்றன.

சூதாட்டத்தால் கெட்டவர்கள் தர்மர், நளன், ருக்மி ஆகியோர் ஆவார்.

தர்மர் பாண்டவர்களில் மூத்தவர். இவர் சூது விளையாடியதால் பாரதப் போர் ஏற்பட்டது.

நளன் நளவெண்பாவின் நாயகன். சூதாடியதால் நாட்டை இழந்து, குழந்தைகள், மனைவியைப் பிரிந்து காட்டில் ஒளிந்து, உருமாறி இறுதியில் மனைவியை கண்டறிந்து நாட்டினை மீட்டவன்.

ருக்மி பகவான் கிருஷ்ணனின் மைத்துனன். ருக்மணியின் அண்ணன். சூதாட்டத்தால் தன்னுடைய உயிரை இழந்தவன்.

தர்மர், நளன், ருக்மி மூவரும் நற்பண்புகள் கொண்டவர்கள், குணத்தால் உயர்ந்தவர்கள். எனினும் சூதாட்டத்தால் சபலப்பட்டு தங்களின் வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டார்கள்.

தர்மர்

பாண்டவர்கள் திரௌபதியுடன் தங்களின் தலைநகரான இந்திரபிரஸ்தத்தில் இருந்து விருந்தினராக அஸ்தினாபுரத்திற்கு வந்திருந்திருந்தனர்.

சகுனி பாண்டவர்களின் நாட்டினை பறித்து தன்னுடைய சகோதரியின் புதல்வர்களான கௌரவர்களுக்கு கொடுக்க விரும்பினான்.

மேலும் கண் தெரியாத திருதுராட்டினனுக்கு தம்முடைய சகோதரி காந்தாரியை அஸ்தினாபுரத்து படைபலத்தை காட்டி மணமுடித்த பீஷ்மரை பழிவாங்கவும், அவர் சார்ந்த சந்திர வம்சத்தை அழிக்கவும் எண்ணி சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிய வேளையில் பாண்டவர்களின் அஸ்தினாபுர வருகை, அதற்கு சரியான தருணம் என்று எண்ணி நயவஞ்சகத்தைத் தீட்டினான் சகுனி.

அதன் விளைவாக அஸ்தினாபுர அரண்மனை தர்பாரில் சூதாட்டத்திற்கு தர்மரை அழைக்குமாறு துரியோதனனிடம் கூறினான்.

துரியோதனன் அழைப்பிற்கு முதலில் மறுத்த தர்மர் சூதாட்ட சபலத்தால் உடன் இசைந்தார். துரியோதனின் சார்பில் சகுனி தர்மருடன் சூதாடினான்.

அச்சூதாட்டத்தில் தான் உட்பட நாடு, மனைவி, தம்பியர் என எல்லோரையும் இழந்து கௌரவர்களுக்கு அடிமையாகி நின்றான்.

வெற்றியின் மமதையில் இருந்த கௌரவர்கள், நிறைந்த சபையில் திரௌபதியின் துகிலை உரித்து அவமானப்படுத்தி பாண்டவர்களை 13 வருடங்கள் வனவாசத்திற்கு அனுப்பினர்.

வனவாசம் முடித்தபின் பாண்டவர்களின் நாட்டினை கௌரவர்கள் திரும்பக் கொடுக்க மறுத்ததால் நிறைய உயிர்களைப் பலிவாங்கிய மகாபாரதப் போர் உண்டானது. அதன் பின்னரே இழந்த நாட்டை திரும்பப் பெற்றனர் பாண்டவர்கள்.

தர்மரின் சூதாட்டம் பாண்டவர்களின் புதல்வர்கள் உட்பட ஏராளமான உயிர்பலிக்கு காரணமாயிற்று.

நளன்

இன்றைக்கு விருந்து சமையல் ‘நள பாகம்’ என்றே அழைக்கப்படுகிறது. ‘நள பாகம்’ என்ற சொல்லில் குறிப்பிடப்படும் நளன் சூதால் தன் வாழ்க்கையைத் தொலைத்தவன்.

நம் நாட்டில் காதலுக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படும் ஜோடிகளில் ‘நள தமயந்தி’ இணையர்கள் முக்கியமானவர்கள்.

நளனின் கதை மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ள கிளைக்கதைகளில் ஒன்று. இக்கதை வனவாசத்தில் தர்மர் முனிவர் ஒருவரிடம் “என்னைப் போன்று சூதாட்டத்தால் வாழ்க்கை மாறி கஷ்டப்பட்டவர்கள் உண்டா?” என்று கேட்டதற்கு முனிவர் கூறியது ‘நள சரித்திரம்’.

நிடத நாட்டு மன்னனான நளன், விகேத நாட்டு இளவரசியான தமயந்திக்கு அன்னத்தின் மூலம் காதல் தூதுவிட்டு சுயம்வரத்தில் தேவர்களை வீழ்த்தி மணம் புரிந்தான்.

நற்குணங்கள் வாய்ந்த, நல்லாட்சி புரிந்த நளன் சூதாட்ட சபலம் கொண்டிருந்தான். அவனுடைய சூதாட்ட சபலம் பற்றி அறிந்த நளனின் மந்திரி புஷ்கரன் சூதாட்டத்திற்கு நளனை அழைத்தான்.

சூதாட்டத்தில் நாட்டினை இழந்த நளனை, புஷ்கரன் நிடத நாட்டை விட்டு வெளியேற்றினான்.

தேரோட்டியிடம் குழந்தைகளை தன்னுடைய மாமனார் அரண்மனைக்கு சேர்ப்பிக்கச் சொல்லி விட்டு தமயந்தியுடன் காட்டிற்குச் சென்றான் நளன்.

காட்டில் உணவிற்கும் நீருக்கும் தமயந்தி கஷ்டப்படுவதைப் பார்த்த நளன், அவளிடம் அவளுடைய அப்பாவின் அரண்மனைக்குச் சென்றுவிடச் சொன்னான். அதற்கு மறுத்தாள் தமயந்தி.

காட்டில் ஒருநாள் தமயந்தி தூங்கிக் கொண்டிருந்த வேளையில் நளன் அவளைப் பிரிந்து சென்று விட்டான். காட்டை விட்டு வெளியேறிய தமயந்தி சேடி நாட்டை அடைந்து அரசியின் பணிப்பெண்ணாக பணிபுரிந்தாள்.

சேடி நாட்டிற்கு வந்த தமயந்தியின் தந்தை வீமசேனன் தமயந்தியை அடையாளம் கண்டு கொண்டு விகேத நாட்டிற்கு அழைத்துச் சென்றார்.

காட்டில் தமயந்தியைப் பிரிந்த நளன் தீயில் அகப்பட்டுக் கொண்ட கார்கோடகன் என்ற பாம்பரசனைக் காப்பாற்றினான். கார்கோடகனோ நளனைத் தீண்டினான். இதனால் நளன் உருவம் கறுத்து குள்ளமாக உருமாறினான்.

கார்கோடகன் நளனுக்கு உடை ஒன்றை கொடுத்து “தமயந்தியை காணும் போது இதனை அணிந்து கொண்டால் நீ மறுபடியும் பழைய உருவிற்கு மாறிவிடுவாய்” என்று கூறினான்.

அதனைப் பெற்றுக் கொண்ட நளன் அயோத்தியை அடைந்து அந்நாட்டு அரசனுக்கு தேரோட்டியாக பணிபுரிந்தான்.

நளனின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள தமயந்தி மற்றொரு சுயம்வரத்திற்கு தந்தையை ஏற்பாடு செய்யச் சொன்னாள்.

அயோத்தி அரசன் தமயந்தியின் இரண்டாம் சுயவரத்திற்கு பங்கேற்க விகேத நாட்டிற்கு வந்தபோது நளனும் உடன் வந்தான் .

நளனின் சமையலை உண்டபோது தமயந்தி அவனை அடையாளம் கண்டு கொண்டாள்.

மறுநாள் சுயம்வரத்திற்குச் செல்லும்முன் நளன் கார்கோடகன் கொடுத்த ஆடையை அணிந்து பழைய உருபெற்று சுயம்வரத்தில் பங்கேற்று தமயந்தியை மணந்தான்.

மாமனார் வீமசேனனின் படையைத் திரட்டி நளன் புஷ்கரனோடு போர் புரிந்து நிடத நாட்டை மீட்டு தமயந்தி மற்றும் குழந்தைகளோடு அரசேற்றான்.

ருக்மி

ருக்மி விதர்ப நாட்டின் அரசன். இவனுடைய தந்தை பீசுமகன். பகவான் கிருஷ்ணனின் மனைவியான ருக்மணியின் சகோதரன்.

ருக்மணியை சேடி நாட்டு அரசனான சிசுபாலனுக்கு மணம் முடிக்க ருக்மி எண்ணி இருந்த வேளையில், கிருஷ்ணன் பலராமன் உதவியுடன் ருக்மியை எதிர்த்து போரிட்டு ருக்மணியை கவர்ந்து சென்று மணம் புரிந்தார். இதனால் ருக்மிக்கு யாதவர்களின் மீது பகை உண்டானது. யாதவர்களை பழிவாங்க காத்திருந்தான்.

கிருஷ்ணன், ருக்மணியின் புதல்வனான பிரத்தியுமனன் ருக்மியின் மகளான ருக்மாவதியை சுயரம்வரத்தில் வென்று எதிர்த்தவர்களுடன் போரிட்டு ருக்மாவதியுடன் துவாரகை அடைந்தான். இதனால் யாதவர்களின் மீதான ருக்மியின் கோபம் அதிகரித்தது.

அதன் பின் பிரத்தியுமனனின் மகனான அனிருதனுக்கும் ருக்மியின் பேத்தியான ரோசனாவுக்கும் திருமணம் பேச்சு நடைபெறுகிறது. தன் தங்கை ருக்மணிக்காக, ருக்மி இத்திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தான். ஆனாலும் யாதவர்களின் மீதான் ருக்மியின் கோபம் குறையவில்லை.

அதன்பின் கலிங்க மன்னன் ஒருவன் யாதவர்களைப் பழிவாங்க ருக்மிக்கு உதவுவதாக வாக்களித்தான். அவர்களின் திட்டப்படி பலராமருடன் ருக்மி சூதாட்டத்தில் ஈடுபட்டான்.

முதல் ஆட்டத்தில் பலராமர் ருக்மியிடம் தோற்றாலும், அடுத்ததடுத்த இரண்டு ஆட்டங்களிலும் பலராமர் வெற்றி பெற்றார். ஆனால் ருக்மி தானே அவ்விரு ஆட்டங்களிலும் வென்றதாக வாதிட்டான். கலிங்க அரசனும் ருக்மி வென்றதாகவே கூறினான்.

மீண்டும் ருக்மிக்கும் பலராமருக்கும் சூதாட்டம் நடைபெற்றது. அந்த ஆட்டத்திலும் பலராமர் வென்றார். ஆனால் ருக்மி தான் வென்றதாக வாதிட்டான்.

“போரும், சூதாட்டமும் சத்திரியர்களுக்குரியது. மாடு மேய்த்து திரியும் உங்களுக்கு அது எங்கே தெரியப் போகிறது?” என்று கோபத்தில் ருக்மி கூறினான்.

ருக்மி கூறியதைக் கேட்ட பலராமர் பொறுமையிழந்து ருக்மியை தன்னுடைய கதாயுதத்தால் தாக்கி கொன்று விட்டார்.

கொடிய சூதாட்டத்தால் ருக்மி உயிரை இழந்தான்.

நம்முடைய ஒரே ஒரு வாழ்க்கையை சூதாட்டத்தால் பாழ் பண்ணாமல் மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

வ.முனீஸ்வரன்

வ.முனீஸ்வரன் அவர்களின் படைப்புகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.