தாலாட்டு

வானதிக்கு குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆகியிருந்தன.

அவளது வீட்டில் செல்போனில் பாட்டை ஒலிக்கவிட்டு, தொட்டிலை ஆட்டியபடி இருந்தாள் வானதி. குழந்தை தூங்காமல் அழுதது.

சமையலறையை விட்டு வெளியே வந்த வானதியின் பாட்டிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“இப்படியா செல்போன்ல சத்தமா பாட்டை போடுவ?” வானதியின் பாட்டி திட்டிவிட்டு, தாலாட்டு பாடல் ஒன்றை பாடி தொட்டிலை ஆட்டினார். சிறிது நேரத்தில், குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு தூங்க ஆரம்பித்தது.

“அழுவுற குழந்தைக்கு, தெரிஞ்சவங்களோட குரலை கேட்டா தான் அவங்க பக்கத்தில இருக்கிற மாதிரி உணரும். முக்கியமா, அது அம்மாவோட குரலை கேட்டா அழுகையை தானா நிப்பாட்டும்.

அழுகை குழந்தைகளோட பாஷை. அதன் மூலமா தன்னோட தேவைகளை சொல்லும். அது மட்டுமில்லாம, குழந்தைங்க எப்பவும் அம்மா கூடவே இருக்கணும்னு விரும்பும்.

அம்மாவோட குரலை கேட்டா அம்மா பக்கத்தில இருக்காங்கனு குழந்தை அமைதி ஆகிடும். இதெல்லாம் செல்போன்ல போடுற பாட்டாலயும், நவீன தொழில்நுட்பத்தாலயும் கிடைக்காது” வானதியின் பாட்டி உறைக்கும் படியாக சொன்னார்.

“என்ன மன்னிச்சிடுங்க பாட்டி! இனிமே இப்படி பண்ண மாட்டேன். உங்கள மாதிரி நானும் தாலாட்டு தான் பாடுவேன்” சொல்லிவிட்டு தூங்கும் குழந்தையைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

அதன் பின்னர் வந்த நாட்களில் குழந்தைக்கு தாலாட்டு பாடினாள் வானதி அலைபேசி இல்லாமல்.

எம்.மனோஜ் குமார்

எம்.மனோஜ் குமார் அவர்களின் படைப்புகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.