பயம் சிறுகதை விமர்சனம்

பயம் சிறுகதை பழனிராகுலதாசன் அவர்கள் எழுதிய நிகழ்காலங்கள் சிறுகதைத் தொகுப்பில் உள்ள ஓர் அருமையான கதை.

பயம் ஒரு சிறந்த உளவியல் சிறுகதையாகவும், சமூகச் சிறுகதையாகவும், வட்டாரச் சிறுகதையாகவும், சிறந்த உரைநடைச் சிறுகதையாகவும், நவீன உத்திகள் வெளிப்பட்டு நிற்கும் சிறுகதையாகவும் அமைந்திருக்கின்றது.

கச்சிதமாகப் பொருத்தப்பட்ட கதாபாத்திரங்கள், கதைத்தொடக்கம், கதையில் சிக்கல், உச்சம், விடுவிப்பு, முடிவு எனும் சிறுகதை அமைப்பும், கதைக்களமும், கதைக்கான காலமும் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன. சிறுகதை இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாய் இக்கதை விளங்குகின்றது.

தலைப்புப் பொருத்தம்

தையல்காரர் நீலகண்டன், அவனது மகள் மீனு, மனைவி கனகம் ஆகியோர்களின் தேவைகளும், அதை ஒட்டிய உணர்ச்சிகளும், அதன் மூலம் ஏற்படும் இயலாமையும், எண்ண ஓட்டங்களும்,விரக்தியும் பயமும் ஏமாற்றமும் என விரிந்து செல்கிறது கதையின் மையக் கரு.

ஏழ்மையினால் சிறு குடும்பத்திற்குள் ஏற்படும் வாழ்வாதாரச் சிக்கல்களையும், அவற்றைத் தீர்க்க அவர்கள் படும் வேதனையையும் கதாசிரியர் பல கதைகளில் கூறியிருந்தாலும், இக்கதை அவற்றையெல்லாம் விட மேம்பட்டதாக அமைந்திருக்கிறது.

மானிடருக்கான தேவைகள் ஏழைகளின் வீட்டிலும் பணக்காரர்கள் வீட்டிலும் நடுத்தர மக்களின் வீட்டிலும் வெவ்வேறு வடிவங்களில் உள்ளன. அதை நிவர்த்தி செய்ய அவரவர் முனைகிற பொழுது ஏற்படும் பரிதவிப்பும் நிறைவேற்றிக் கொள்ளும் பாங்கும் வேறுபடுகிறது.

சமூக அந்தஸ்தில் அவர்கள் அனைவரும் வாழ அளவுகோல்கள் இப்புவியில் வேறு வேறாக இருக்கின்றன. எதார்த்தமாய் வாழப் பிரியப்படும் ஒவ்வொருவரும் அதன்படி வாழ்வது இல்லை.

சமூகம் ஒன்றைக் கட்டமைத்து, இப்படித்தான் இவர்கள் வாழ வேண்டும் என்கிறது. அதன்படி வாழ எல்லோராலும் முடிவதில்லை. அதனால் ஏற்படும் ஏற்றத் தாழ்வு மனிதருக்குள் ஒரு பெரிய பிளவை, வாழ்வாதாரச் சிக்கலை ஏற்படுத்துகின்றது.

ஒரு சிறு நிகழ்வு சமூகத்தின் மேல்மட்டம் வரைச் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தனிமனித வாழ்க்கையில் சமூகக் கட்டமைப்பு தொடர்ந்து பிரச்சனையாகவே சில விஷயங்களில் இருக்கின்றது என்பதை இக்கதை மூலம் வெகுவாய் உணர முடிகின்றது.

சமூகத்தின் புறக்கணிப்பும் ஒதுக்கி வைக்கப்படுவதும் பல உள நோய்களுக்குக் காரணிகளாக அமைந்துவிடுகின்றன.

இவை பொதுவாக நபர் ஒருவரின் நடத்தை, உணர்வு வெளிப்பாடு, சிந்தனை, அறிவு, உறுதிப்பாடு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே இனம் காணப்படுகின்றன என விளங்கிக் கொள்ளலாம்.

பயம் சிறுகதையில் வரும் குடும்பத்தலைவன் நீல்கண்டன், தன் மகளுக்கு யூனிபார்ம் எடுத்துத் தைத்துக் கொடுத்துப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்; அவ்வாறு அனுப்பினால் அவளும் சந்தோசமாகப் போட்டுக் கொண்டு செல்வாள் என்பதாகக் கதை அமையவில்லை.

மாறாகப் பள்ளி எனும் சமூகக் கட்டமைப்பு பள்ளிக்குள் இவ்வாறு தான் மாணவர்கள் வரவேண்டும் என்று அதிதீவிரமான கட்டுப்பாடுகளை விதிப்பதைக் கதை எடுத்துக் காட்டுகிறது.

அதுமட்டுமல்லாது, அவ்வாறு வரவில்லையெனில் மாணவர்களைச் சுடுமணலில் முட்டிபோட்டுக்கொண்டு நிற்கவைப்பதும், வகுப்பில் இருந்து வெளியே நிறுத்தி வைப்பதும், பிற மாணவர்களிடம் இருந்து தனித்து விடுவதும், அசிங்கப் படுத்துவதும் இயல்பாயிருக்கின்றன.

இவை மனநோய்க்கு ஒரு மாணவியைத் தள்ளி, யூனிபார்ம் இப்போதே வேண்டும் என்று தன் தகப்பனாரிடமும் தாயிடமும் கட்டாயப்படுத்தச் செய்கின்றன.

அதுவே பிடிவாதமாகக் கேட்கவும் வைக்கிறது. இது எந்த விதத்தில் நியாயம்?

கல்வி நிலையங்களின் முக்கிய நோக்கம் மாணவர்களின் உயர்வுக்காக என்பதாக இவ்விடத்தில் அமையவில்லை.

சமூகத்தினுடைய அந்தஸ்தை நிலைநாட்டுவதற்கும், பிற பள்ளிகளிடமிருந்து தன் பள்ளியின் தரத்தை மக்கள் மத்தியில் உணர வைப்பதற்காகவும் இதுபோன்ற பல நடவடிக்கைகளை ஒவ்வொரு பள்ளியும் எடுத்துக் கொள்ளுகிறது.

இதனால் பாதிக்கப்படுவது மாணவர்களும் பெற்றோர்களும் தானே தவிரச் சமூகம் எவ்விதத்திலும் உயர்ந்து விடாது. கல்வி நிலையங்கள் அறிந்திருந்தும் இதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.

மாணவர்களுக்குப் பள்ளி என்றாலே பயத்தைத் தருகிறது. இது போன்றவைகள் உள்ளத்தைப் பிறழ்வு நிலைக்குத் தள்ளுகிறது.

படிக்கச் செல்ல வேண்டும் என்றால், இன்ன இன்னவை எல்லாம் மாணவர்களிடையே இருக்க வேண்டும். அதுவும் ஒரே மாதிரியானவையாக இருக்க வேண்டும் என்பது, மாணவச் சமூகத்திலும் பெற்றோர் சமூகத்திலும் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்குகின்றன என இக்கதை மூலம் தன் சிந்தனையை ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.

தனியார் மயமான கல்வி நிலையங்கள் இன்றைக்குப் பணம் விளையும் விளைச்சல் நிலமாகக் கல்வி நிலையங்களை உருவாக்கி வைத்திருக்கின்றன.

பள்ளியில் நடக்கும் அவமானங்களும் தண்டனைகளும் குழந்தையின் மனதில் ஆழமான வடுக்களைத் தோற்றுவிக்கின்றன.

எதிர்காலச் சந்ததியினரை இவை பெரிதும் பாதிக்கும் என்ற பயம் ஆசிரியராக இருந்த இக்கதையாசிரியருக்கு வந்திருப்பது காலம் தந்த பாடம் ஆகும் எனத் தெளிவாக பயம் சிறுகதை மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

இதன் காரணமாகவே ஆசிரியர் சிறுகதைக்கு பயம் எனும் தலைப்பு வைத்திருக்க வேண்டும்.

கதையில் நீலகண்டன், தன் மகள் யூனிபார்ம் கேட்பாள் எனப் பயந்து பயந்து வீட்டிற்குச் செல்லும் நிகழ்வைக் காட்டியுள்ளார்.

பெற்றோர்கள் குழந்தைக்குப் பயப்பட வேண்டித்தான் உள்ளது. கேட்டதை வாங்கிக் கொடுக்க முடியவில்லை என்ற இயலாமை பயத்தை உண்டாக்குகிறது. இது ஒரு கதாபாத்திரத்தின் பய உணர்வு ஆகும்.

குழந்தை மீண்டும் பள்ளிக்குச் செல்லப் பயப்படுகிறாள். பள்ளியில் அவளுக்கு அளிக்கப்படும் அவமானங்களும் தண்டனைகளும் ஒரு மிகப்பெரிய மனப்பிறழ்வை அவளுக்குள் ஏற்படுத்துவது உண்மையே.

குழந்தை மீனுவும் அவள் பெற்றோர்களும் படிப்பதற்காகக் கல்வி நிலையம் என்கிற மனநிலை அற்றவர்களாக, வேறு ஏதோ ஒரு விஷயத்திற்காக அதிகமாகப் பயப்படும் மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

தந்தை, குழந்தை யூனிபார்ம் கேட்குமே எனப் பயப்படுகிறார். கதையாசிரியர் இது போன்ற பல காரணிகளால் எதிர்கால சமூகம் பாதிக்கும் எனப் பயப்படுகிறார்.

இதுவே கதைக்கான தலைப்பாக அமைந்திருக்கிறது. அது மிகப் பொருத்தமானதாகவும் அமைந்து சிறக்கிறது.

கதைமாந்தர் படைப்புத் திறன்

நீலகண்டன் பொறுப்புள்ள தந்தை.

மனதிற்குள் தொடர்ந்து போராடும் அவஸ்தைகளைத் தாங்கிக் கொண்டு, தன் மகளுக்கு எப்படியாவது யூனிஃபார்ம் தைத்துத் கொடுத்து விட வேண்டும் என்ற பேராசை முடியாதபோது, வேதனையால் தன் மகளைக் காணவே விரும்பாது மகள் தூங்கிய பின் வீட்டிற்கு வர நினைப்பது, மகள் எழுந்திருக்கும் முன்பே வீட்டை விட்டுச் செல்ல நினைப்பது என அவரின் மனம், மனம் சார்ந்திருக்கிற பிரச்சனைகள், அதனால் அவர் வாழ்க்கையில் அடைந்த வேதனை போன்றவற்றை இப்பாத்திரம் மூலமாக ஆசிரியர் வெளிப்படுத்துகிறார்.

‘தையல்கடைக்காரரின் மகள் சட்டை இல்லாமல் இருப்பதா?’ என்ற கேள்வி நீலகண்டன் உள்ளத்தை மிகவும் பாதித்துக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து தின்கிறது. உளவியல் ரீதியாகப் பயம் வேறு வாட்டி வதைக்கிறது.

வறுமையின் பிடியில் குடும்பத் தலைவர்கள் அடையும் வேதனைகள் இவர் மூலமாக விளக்கப்பட்டுள்ளன.

சமூக அந்தஸ்தும் சமூகக் கட்டமைப்பும், ஏழ்மையை எவ்விதம் எல்லாம் துன்பப் படுத்துகின்றன என்பதை மிகத் தெளிவாக இக்கதை விளக்குகிறது.

பள்ளிக்கூடம் கல்வியைக் கற்றுத் தருவதை விட, வேறு ஒரு விஷயத்தின் பூதாகரமாக மீனுக்குத் தெரிகிறது.

அங்கு தரப்படும் தண்டனைகள் அதன் மூலம் தள்ளி வைக்கப்படும் மனிதத்துவம், பிற மாணவர்களிடமிருந்து தீண்டத்தகாத ஒருவராக தன்னை மாற்றிக் காட்டுவது எனத் தண்டனைகளுக்குப் பயந்து நடுங்கும் ஒரு மாணவி அவள்.

தந்தையின் ஏழ்மையைப் புரிந்து கொள்ள இயலா வயது அவளுடையது.

அவள் முன் நிற்பதெல்லாம் ‘வேறு எதுவும் எனக்கு வேண்டாம். என்னை பாடாய்படுத்தும் பள்ளிக்கூடத்தின் யூனிபார்ம் இருந்தால் போதும்’ என்ற நினைவு. அது அவளைப் படாத பாடு படுத்துகிறது.

ஒவ்வொரு நாளும் அவள் எதிர்பார்ப்பு கிடைக்காத பொழுது அவள் அடையும் வேதனையை, அதன் மூலமான துன்பம் இவையே அவளினுடைய கதாபாத்திரத்தை ஆழமாக உணர வைக்கிறது.

அவளின் ஏமாற்றத்தை எங்கும் வெளிப்படையாகக் கதையில் கூறாமல் ஆசிரியர் படிப்பவர்களை உணர வைத்திருப்பது, அதைக் கூறிய கதை அமைப்பில் சிறப்பாகும்.

கனகம் அன்பான மனைவி. இல்லத்தரசி என்றால் இப்படிப்பட்ட பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என யோசித்து ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி உள்ளார் ஆசிரியர்.

இதனைச் ”சின்னச் சின்னச் சிரமங்கள், கஷ்டங்கள், ஏமாற்றங்கள் எல்லாம் வருகையில் அலுத்துப் பேதலித்து நீலகண்டன் மலைத்து நின்று விடுவார்.

அப்போதெல்லாம் கனகம் அருகில் வந்து தொல்லைகளைப் புறந்தள்ளுவது மாதிரி லேசாகப் புன்னகை பூப்பாள்.

அவளது புன்னகையிலேயே அது தரும் நம்பிக்கை தொனியிலேயே பிரச்சினைகளை அவன் மறந்துவிடுவான்.

எத்தனையோ வாழ்க்கை சாபங்கள் இருந்தாலும் அவளது சின்னச் சிரிப்பும் குறும்பு மொழிகளும் அவனுக்கு வரங்களாக அமைந்திருந்தன என கதாபாத்திரத்தின் தன்மையை ஆசிரியர் எழுதுகிறார்.

எனவே இக்கதையின் மௌனமான ஆனால் அதிகமாக செயலாற்றும் குடும்பத்தலைவியாக படைக்கப்பட்டிருக்கிறாள் கனகம்.

கதைக்கரு

வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிக்கும் கூறுகளை இழந்து தவிக்கும் மனப்போராட்டங்கள் மனப்பிறழ்ச்சியை மனிதர்களிடம் ஏற்படுத்துகின்றன எனும் உளவியல் சிந்தனை, கதைக்கருவாக இக்கதையில் பேசப்பட்டுள்ளன.

ஏழ்மை வாழ்க்கையில் பாசத்தையும் மகிழ்ச்சியையும் எவ்வாறு கெடுக்கின்றது என்பது தெளிவாகின்றது.

சமூகத்தினுடைய கட்டமைப்பு பல்வேறு தளங்களில் அனைவருக்குமான ஒரு பொதுத் தன்மையைத் தருகிறது. மேல்தட்டு வர்க்கமும், அடித்தட்டு வர்க்கமும் அதைச் சரி சமமாக ஏற்றுக் கொள்ளுகிற நிலையில் இல்லை. ஏழ்மை அதனால் மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்கப்படுகிறது.

எனவே சமூகக் கட்டமைப்பு பல நிலைகளில் வாழ்க்கையில் துன்பத்தை ஏற்படுத்துகின்றது என்பதை பயம் சிறுகதை மிகத் தெளிவாகச் சொல்கிறது.

உரைநடைத் திறன்

”தையல்காரர் நீலகண்டனுக்கு நினைக்க நினைக்க ஊசிமுனையாய் உள்ளுக்குள் தைத்துத் தைத்து வலித்தது” எனக் கதையை ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.

ஒரு தையல்காரர் அவருடைய மனம் துன்பத்தால் எப்படி இருந்தது என்பதை, அவருடைய தொழிலை உவமை காட்டி கூறுவதன் மூலமாக ஆசிரியரின் உரைநடை திறன் சிறப்பாக அமைந்திருக்கிறது என்பதை உணரலாம்.

”போஸ்ட் ஆபீஸ் பொன்னுரங்கம் வருவார்; வாய் நீளம்; சவடால் வார்த்தைகள் முத்திரை விழுகிற மாதிரி விழும்” என எழுதுகிறார்.

போஸ்ட் ஆபீஸ் அலுவலரின் வார்த்தைகள் முத்திரை மாதிரி விழுகின்றன என அவர் தொழில் சார்ந்து ஒரு உவமையினைக் கையாளுகிறார் ஆசிரியர்.

ஒரு நளினமான உணர்வை வெளிக்காட்டுகிற கணவன் மனைவிக்கு இடையில் நடந்த ஒரு உரையாடலை நமக்கு அழகாகத் தருகிறார். இது ஆசிரியரின் உரைநடைச் சிறப்பாகும்.

பனியன் எங்கே?’ என்று முக அசைவிலேயே கேள்விக்குறியை அவன் வரைந்தான்.

அவளும் வாய் பேசாமல் மூலப்பக்கம் கையை நீட்டி சைகை காட்டினாள்’ என அழகாக எழுதுகிறார்.

ஆண், பெண் இருவரும் தங்களின் அன்பின் மிகுதியில் பேசிக் கொண்ட ஒரு உரையாடலை அழகாகப் படம் பிடித்து காட்டுகிறது பயம் சிறுகதை.

வட்டார மொழிநடை

நேத்து, சேத்தாளி, பண்டம், கிட்டம், துண்ணூற்றுப் பை எனும் வார்த்தைகள் வட்டார வழக்குச் சொற்களாக இக்கதையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கதையின் போக்கில் வட்டார வழக்குச் சொற்கள் அனைவருக்கும் புரியும் வண்ணம் எழுதப்பட்டுள்ளன.

ஒரு சிறுகதை ஆசிரியர் கதை நடைபெறும் அந்தத் தளத்தில் என்ன வட்டார மொழி பேசப்படுகிறதோ அந்த மொழியின் மூலமாகவே கதை கூறுதல் என்பது மிக முக்கியமானதாகும்.

காரைக்குடி நகரினுடைய வழக்குச் சொற்களாக இவ்வட்டார மொழிநடை விளங்குகிறது. அதை அழகாக பல்வேறு இடங்களில் நம் சிறுகதையாசிரியர் எடுத்தாண்டிருக்கிறார்.

சமூகச் சிந்தனைகள்

ஒரு கதை கூறும் பொழுதே சமூகத்தில் நடக்கும் பல கதைகளை கோடிட்டுக் காட்டி வாசகனைச் சுற்றுப்புற நிகழ்வுகளைப் புரியவைப்பது படைப்பாளரின் சிறந்த வெளிப்பாடாக அமையும்.

அவ்வகையில் சிறுகதை ஆசிரியர் ‘பயம்’ சிறுகதையின் ஊடாக சமூக பிரச்சினைகள் பலவற்றை இனம் காட்டுகிறார். அவற்றைப் புரிந்து கொள்ளும் நிலையில், வாசகர் சுற்றுப்புறப் பிரச்சனைகளையும் அறிந்தவன் ஆகிறான்.

பள்ளிக்கூடங்கள் தரும் அவமரியாதைகளை இரு இடங்களில் பதிவு செய்கிறார். அவை பட்டியலிடப்படுகின்றன. என்னென்ன குற்றங்கள், என்னென்ன தண்டனைகள், அதற்கான விதிமுறைகள் போன்றவை இதில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் குழந்தைகளைத் தாழ்வு மனப்பான்மைக்குக் கொண்டு செல்வன.

சமூக முன்னேற்றத்தைக் கெடுக்கும் புறச்சூழல்களால் இவற்றைச் சுட்டிக் காட்டுகிறார் நம் கதாசிரியர்.

வியாபாரத்தில் மனிதாபிமானமற்ற, பணத்தை மட்டும் பிரதானமாகக் கொண்ட, நாயர் டீக்கடை குறித்துக் கூறப்பட்டிருக்கிறது. அங்கு போனால் கிளாசைக் காண்பிப்பதற்குப் பதிலாக முகத்தைக் காட்டுகிறார் என்று எழுதுகிறார்.

வேறு மாநிலத்தைச் சார்ந்தவர்கள் இன்னொரு மாநிலத்துக்குச் சென்று தொழில் சார்ந்த பல மையங்களைத் தனதாக்கிக் கொண்டு இங்கேயே வாழும் ஏழைகளின் வயிற்றில் இறக்கமின்றி அடிக்கின்ற நிலையினை இந்தக் காட்சி நமக்கு விளக்கிச் செல்கிறது.

”மத்திய ராஜாங்கத்தின் ரயிலும் மாநில ராஜாங்கத்தின் கரண்டும் எப்போ வரும் போகும் என்று இந்தியப் பிரஜை எவருக்கும் தெரியாத விஷயம்”

சமூகத்தின் குறைபாடுகளில் பெற்றோரின் மனநிலை குறித்து இக்கதை வாயிலாக இவ்விடத்தில் காணமுடிகிறது.

மின்சாரத்தடை வணிகர்களின் தொழிலைப் பாதித்து பலரின் வாழ்க்கையில் திண்டாட்டத்தை ஏற்படுத்திச் சிக்கலை உருவாக்கும். இதைத் தவிர்க்க எந்த அரசாங்கமும் முயற்சிக்கவில்லை என்று குற்றம் சாட்டுவது இதனின் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.

தையல்கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் சமூகத்தைப் பிரதிபலிக்கும் நபர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர்.

பிளஸ்டூ வாத்தியார் பிரகாஷ் ஆசிரியர்கள் செய்யும் கொடுமைத்தனத்தை வெளிப்படுத்தும் கதாபாத்திரமாகக் காணப்படுகிறார். பள்ளித் தலைமை ஆசிரியர் தனியாக டியூஷன் வைக்கக்கூடாது என்று கூறியும் ஜே ஜே என்று டியூஷன் நடத்திக் கொண்டிருக்கிறார் இந்த ஆசிரியர்.

இன்றைய பள்ளி ஆசிரியர்களின் பணம் சம்பாதிக்கும் பேராசையை இவ்விடம் சுட்டிக் காட்டுகிறது.

அரசாங்கச் சம்பளமே அதிகம் தான். பள்ளியில் சரியான உணர்வோடு பாடம் நடத்தி இருந்தால், ஏழை மாணவர்கள் ஏன் தனி டியூஷனுக்கு வரப் போகிறார்கள்?

பள்ளியில் சரிவர நடத்துவதில்லை. மதிப்பெண் வாங்க வேண்டுமென்றால் டியூஷன் வாருங்கள் என ஆசிரியர்கள் டியூஷன் நடத்துவது சமூகக் கேவலமாக இருக்கிறது என்ற தன் கருத்தை இக்கதையின் மூலம் ஆசிரியர் வெளிப்படுத்தி உள்ளார்.

சிறுகதையின் ஆழமான கருத்துக்கள் சமூகத்தைத் தோலுரித்துக் காட்டுகின்றன.

பயம் சிறுகதை உளம் சார்ந்த பிரச்சனைகளையும் பேசுகின்றது; அன்பையும், காதலையும் வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருக்கின்றது.

சிறுகதை படைப்பாளர்: பேராசிரியர் பழனிராகுலதாசன்

பழனிராகுலதாசன்
பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
தமிழ்ப் பேராசிரியர்
வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி
ஆவடி, சென்னை – 600062
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com

One Reply to “பயம் சிறுகதை விமர்சனம்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.