மந்திர வளையல் – ஜானகி எஸ்.ராஜ்

ஐஸ்வர்யா!

ஒரு மாபெரும் நாட்டு மன்னனின் புதல்வி. நடைபயிலும் குழந்தையாய் இருக்கையில் தாயை இழந்தவள். எனவே, ஐஸ்வர்யாவை நல்ல முறையில் வளர்ப்பதற்காக மன்னர் மறுமணம் செய்து கொண்டார்.

புதிதாக வந்து சேர்ந்தவள் வளர்ந்த ஐஸ்வர்யாவை ஒரு வேலைக்காரி போல் நடத்தி வந்தாள். மன்னரின் இரண்டாவது மனைவிக்கும் ஒரு பெண் இருந்தாள்.

ஐஸ்வர்யா கொள்ளை அழகு! ஆனால் மாற்றாந்தாயின் மகளோ அழகற்றவள். இதுவே ஐஸ்வர்யா மீது மாற்றாந்தாய்க்கு வெறுப்பைத் தந்தது.

இந்நிலையில் மற்றொரு நாட்டு இளவரசன் ஐஸ்வர்யாவை மணக்க விரும்பி மன்னருக்கு செய்தி அனுப்பினான்.

செய்தியறிந்த மன்னர் தனது இரண்டாவது மனைவியிடம் இளவரசியின் விருப்பத்தைக்கூற அவளும் சம்மதித்து விட்டு தீவிரமாக ஓர் திட்டம் தீட்டுவதில் ஈடுபட்டாள்.

தன் மகளை இளவரசனுக்கு மணமுடிக்து வைக்க அவளுக்கு ஆசை. அதை எப்படி செயல்படுத்துவது என்பதே அவளின் தீவிர திட்டமிடுதலாக இருந்தது.

மந்திரவாதி ஒருவனிடம் சென்று விஷயத்தைக் கூற, மந்திரவாதி ஒரு ஜோடி வளையல்களைக் கொடுத்தான்.

அழகாய் இருப்பவர்கள் அந்த வளையல்களை அணிந்தால் அழகற்றவர்களாகி விடுவார்கள் என்றும், அழகற்றவர்கள் அணிந்தால் மிகுந்த அழகுள்ளவர்களாக மாறி விடுவார்கள் என்றும் மந்திரவாதி சொன்னான்.

மகிழ்ச்சியடைந்த மன்னரின் இரண்டாவது மனைவி அரண்மனைக்கு வந்து தன் மகளிடம் அந்த வளையல்களைக் கொடுத்து அணியச் சொன்னாள்.

தன் மகள் மிகுந்த அழகியாய் மாறியதும், வளையல்களைக் கழற்றச் சொல்லி அவைகளை எடுத்து கொண்டு ஐஸ்வர்யாவிடம் தந்து அணியச் சொன்னாள். வளையல்களை அணிந்த மாத்திரத்திலேயே ஐஸ்வர்யா அழகற்றவளாகிப் போனாள்.

மனம் மகிழ்ந்த ஐஸ்வர்யாவின் மாற்றாந்தாய் மீண்டும் ஐஸ்வர்யாவிடமிருந்து வளையல்களைப் பெற்றுக் கொண்டு தன் மகளிடம் கொடுத்து நிரந்தரமாக அணியச் சொன்னாள்.

வளையல் உடைந்து போகாமல் ஜாக்கிரதையுடன் பாதுகாக்க கூறியும் கூடவே அறிவுரை வழங்கினாள். ஏனெனில், வளையல் உடைந்து போனால் நிலைமை மீண்டும் பழைய நிலைக்கே ஆகிவிடும் என மந்திரவாதி எச்சரித்திருந்தான்.

தன் மகள் அழகியானவுடன் அவளை இளவரசனுக்கு மணமுடித்துக் கொடுக்க ஏற்பாடானது.

மணம் புரிந்து கொள்ளும் சில நிமிடங்களுக்கு முன்பு மகிழ்ச்சியுடன் தோழிகளோடு இருந்த போது கூட்ட நெரிசலில் துரதிருஷ்டவசமாக அந்த மந்திர வளையல் உடைந்து போக, அக்கணமே அவள் உருக்குலைந்து அழகற்றவளானாள்.

இளவரசனோ அதிர்ச்சியடைந்தான். அந்த நிமிடமே மன்னருக்கு இவ்விஷயத்தைத் தெரிவித்தான்.

மன்னர் விசாரிக்கையில் இரண்டாவது மனைவியும், அவரது இரண்டாவது மகளும் தாங்கள் செய்த சதியை ஒப்புக் கொண்டு நடந்தவற்றை விளக்கினர்.

மன்னர் மிகவும் மனம் வருந்தினார். இளவரசனிடம் நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு பிராயச்சித்தமாக மீண்டும் அழகியாக மாறிப் போயிருந்த ஜஸ்வர்யாவை இளவரசனுக்கு மணமுடித்து கொடுத்தார்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.