மயிலிறகு உலகம்!

வீட்டுப்பாடம் செய்யாததால் ரமா டீச்சர் நோட்டை தூக்கி எறிந்ததில், நான் அதில் வைத்திருந்த சிறிய மயிலிறகு எங்கோ விழுந்து தொலைந்து விட்டது.

வீட்டுக்கு வந்து அக்காவிடம் அவள் வைத்திருக்கும் மயிலிறகை கேட்டதில் சண்டை வந்து அவள் என் தலையில் குட்ட, நான் அவளை திரும்பி அடிக்கும்போது அம்மா பார்த்து விட, “பொட்ட புள்ளையை கைநீட்டி அடிக்கிறாயே?” என்று முதுகில் விரல் ரேகை பதியும் அளவுக்கு இரண்டு அடியை போட்டு விட்டாள்.

இப்படி நாலா பக்கமும் அடி விழ நான் அழுது கொண்டே திண்ணையில் அமர்ந்திருந்தேன்.

ஒரு மயிலிறகு கேட்டது குற்றமாடா?

அப்போதுதான் திலகா அக்கா 16 வயதினிலே ஸ்ரீதேவி போல் துள்ளிக் குதித்து என் வீட்டுக்குள் வந்தாள். தன் வீட்டில் வாழைமரம் விழுந்து விட்டதால், வாழைத்தண்டை வெட்டி ஒரு பை நிறைய எடுத்துக்கொண்டு வந்திருக்கிறாள்.

என்னைப் பார்த்து, “ஏன் மாமி தம்பி அழுகிறான்?” என்று அம்மாவிடம் அவள் கேட்க, அதற்கு அம்மா ஒரு முக்கு முக்கி விட்டு, “கழுதை வயசாவுது, எருமை மாடு மாதிரி வளர்ந்திட்டான். இன்னும் மயிலிறகு வேணுமாம் மா” என்று சொன்னாள்

என்னைவிட பெரிய மாடு ஒன்று மயிலிறகை வைத்துக் கொண்டிருக்கும் போது, நாம் ஏன் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற சுய பச்சாதாபத்தில் அழுகை இன்னும் வேகம் பிடித்தது.

உடனே திலகா அக்கா அருகில் வந்து என் கண்ணீரைத் துடைத்துவிட்டு, “கவலைபடாதடா தம்பி! என்கூட என் வீட்டுக்கு வா, உனக்கு நான் ஒரு மயிலிறகு தருகிறேன்” என்று சொல்லி அழைத்து போய் ஒரு பெரிய மயிலிறகைக் கொடுத்து, “இதை பத்திரமாக பெரிய நோட் புக்கில் வைத்துக் கொள். அடிக்கடி திறந்து பார்க்காதே. அப்பதான் குட்டி போடும்.” என்றாள்.

எனக்கு உலகத்தையே வென்ற மன நிறைவு.

அந்த வயதில் திலகா அக்கா பெயரை “மயிலிறகு அக்கா” என்று ஞாபகம் வைத்து கொண்டேன் . அதன் பின் என் அம்மா அக்கா கூட , பொருள்கள் கொடுக்க வாங்க என்னை “மயிலிறகு அக்கா”வீட்டிற்கு போய் வா என்று தான் சொல்லி அனுப்புவார்கள்.

மயிலிறகு அக்கா சொன்னது போல், மயிலிறகு வைத்திருந்த பக்கத்தை என்னால் திறந்து பார்க்காமல் இருக்க முடியவில்லை.

ஆர்வம் தாளாமல் அடிக்கடி திறந்து பார்த்ததால், அக்கா சொன்னது போல் அது குட்டி போடவில்லை.

நாட்கள் நகர்ந்தன. காலம் மயிலிறகு பக்கத்தில் இருந்த எல்லோரையும் மானுட உலகத்தின் கோர பக்கங்களுக்கு இழுத்துச் சென்று கொண்டிருந்தது.

திலகா அக்காவின் அப்பா தங்கவேல் அய்யா சுற்று வட்டரக் கிராமங்களின் தலைவர். ஆஜானு பாகு ஆறடி உயரம், பெரிய மீசை, அவர் கைக்காட்டும் நபருக்குத் தான் ஓட்டு. அந்தளவுக்கு செல்வாக்கு.

அவர் என் தந்தையின் பள்ளிக்கூட நண்பர்; தூரத்து சொந்தம். அவரை எங்கு பார்த்தாலும் வணக்கம் செலுத்த வேண்டும், அவ்வப்போது வீட்டில் போய் பார்த்து நலம் விசாரித்து மரியாதை செலுத்த வேண்டும் என்பது என் தந்தையின் நிரந்தர உத்திரவு.

அய்யாவின் மனைவி பாக்கியம் உடல் நலமில்லாதவள், திலாகவும் அவள் தம்பியுமாய் அய்யாவுக்கு இரண்டு பிள்ளைகள்.

ஒருநாள் திலகா அக்காவின் அம்மா இறந்து விட்டதாக ஊரே அடித்து கொண்டு அழுதது. திலகா அக்கா அழக்கூட சக்தி இல்லாமல் உடைந்து கிடந்தாள்.

ஒருவருடம் கழித்து தங்கவேல் அய்யா தம் சொந்தக்கார பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின் திலகா அக்காவிற்க்கு சித்தியும், சித்திக்கு திலகாவும் தித்திக்கவில்லை என பெரிய வீட்டு சமாச்சாரம் ஊர் முழுக்க கதைக்க பட்டுக்கொண்டுதான் இருந்தது.

பெரிய பிரளயம் வெடித்தது திலகா அக்காவின் காதல் விஷயத்தில் தான்.

பாலன் என்கிற வேறு ஜாதி பையனை திலகா காதலிக்க, அதை வைத்து அரசியல் எதிரிகள் தங்கவேல் அய்யாவை நிலைகுலையச் செய்தார்கள்.

அய்யா எவ்வளவு சொல்லியும் திலகா தம் காதலை விடவில்லை.

ஊரில் ஜாதிக்கலவரம் ஏற்படும் அபாயம் வந்தது. திலகா காதலிக்கும் பாலனை கொல்ல திட்டம் போட்டார்கள். வைக்கோல் போர்களை தீயிட்டார்கள். எந்நேரமும் போலீஸ் ரோந்து சுற்றிக்கொண்டே இருந்தது.

சொந்த பெண்ணையே காப்பற்ற தெரியவில்லை; இவர் எங்கே ஊர் மானத்தை காக்க போகிறார் என்று அய்யாவை எல்லோரும் உசுப்பேத்தினார்கள். சமயம் பார்த்து சித்தியும் அய்யாவின் கோபத்தை கிளறி வஞ்சம் தீர்த்தாள்.

ஒருநாள் அங்காளம்மன் கோயில் வாசலில் திலகா தலையில் இரண்டு குடம், தன் தலையில் இரண்டு குடம் தண்ணீர் ஊற்றிக் கொண்டு, ஒரு கிலோ சூடத்தைக் கொளுத்தித் தீ மூட்டி, ஊர் மக்கள் முன்னிலையில் திலகாவை தன் மகள் இல்லை எனக் கணக்கு தீர்த்தார்.

நான் சாகும் வரை நீ இந்த ஊரை மிதிக்கக் கூடாது என சத்தியம் வாங்கிக் கொண்டார்.

திலகா அக்கா எப்படி அம்மா செத்த போது பலமற்று படுத்துக் கிடந்தாளோ, அதுபோல் கோயில் வாசலில் சாய்ந்து கிடந்தாள். தண்ணீரில் கண்ணீர் கலந்தோடியது.

அய்யாவின் எதிரிகள் சிரித்து கொண்டிருக்க, ‘தாயில்லா பெண்ணை இப்படி செய்கிறீர்களே?’ என்று சிலரும், ‘காதலுக்காக அப்பனேயே துறக்க தயாராகிவிட்டாளே!’ என்று சிலரும் பிரிந்து கிடந்தார்கள்.

தங்கவேல் அய்யாவிற்கு திலகா அக்கா ரொம்ப செல்லம். மகனைவிட மகள் தான் அவருக்கு உயிர். அந்த உயிரை இப்படி உதறியதை தாங்க முடியவில்லை. கை, கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது; தலை சுற்றியது. ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடினார்கள்.

‘இந்த பெரிய மனுஷனை இப்படி சாய்ச்சுட்டாளே; அவ நல்லாவே இருக்க மாட்டா’ என்று சித்தியும் இன்னும் சிலரும் சபித்து கொட்டினார்கள்.

ஆனால் திலகா அக்கா கொடி கட்டிப் பறந்தாள்.

திலகா அக்கா காதலித்து திருமணம் செய்து கொண்ட பாலன் வெகு சுட்டி. திருச்சியில் போய் செட்டில் ஆனார்கள். ரியல் எஸ்டேட் தொழில் பெரும் வருமானம் ஈட்டி தந்தது. கார், பங்களா என உயர்ந்தார்கள்.

ஒருமகள் பிறந்தாள். அமெரிக்காவில் படிக்க வைத்தார்கள். பாலன் சார்ந்திருந்த ஜாதி சங்கம் அரசியல் கட்சியாக மாறியது. அவர் செல்வாக்கு கூடியது. பாலன் சட்ட சபை தேர்தலில் நின்று வென்றார்.

இங்கு தங்க வேல் அய்யா கட்சி பதவியில் கூட நீடிக்க முடியவில்லை. அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகியது. இரண்டாவது மனைவியும் இறந்து போனார். மகன் மருமகளுடன் அய்யா வசிக்க ஆரம்பித்தார்.

எதற்கும் திலகா வரவேயில்லை. அய்யாவும் கூப்பிட வில்லை. திலகா அக்காவின் பெண் ஜனனி மட்டும் அவ்வப்போது வந்து அய்யாவை பார்த்து விட்டு போகிறாள்,

ஒருநாள் நானும் என் மனைவியும் அய்யாவை நலம் விசாரிக்க போனபோது ஜனனியை சந்திக்க நேர்ந்தது. படு ஸ்டைலாக இருந்தாள். பேச்சில் அமெரிக்க வாசம் அடித்தது.

அவளிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் சின்ன வயதில் நடந்த மயிலிறகு கதையை சொன்னேன். அவள் அதை ரசிக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் ஏளனம் வேறு செய்து விட்டாள்.

மனைவிக்கு கோபம் வந்துவிட்டது. வீட்டிற்கு வந்து டோஸ் விட்டாள்.

“சரியான ராங்கியா இருப்பா போலருக்கு.

அமெரிக்கால படிச்சா என்ன கொம்பா முளைச்சு இருக்கு?

அம்மா மாதிரிதானே பொண்ணும் இருப்பா.

ஓரிரு மாதம் கழித்து திலகா மகள் ஜனனிக்கு முதலமைச்சர் தலைமையில் திருமணம் நடந்தது. திருச்சி மாநகரமே அதிர்ந்தது. ஜனனிக்கு பெண் குழந்தை பிறந்து. அய்யாவின் கொள்ளு பேத்தியும் வளர்ந்து பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தாள்..

எதற்கும் அய்யா போகவில்லை. திலகாவும் கூப்பிடவில்லை. இந்த முறை ஊருக்கு போனபோது அய்யாவை பார்க்க போனேன். ஜனனியும் கொள்ளுபேத்தியும் வந்திருந்தார்கள். ஜனனியை பார்த்து ஒரு புன்னகையோடு நிறுத்திக் கொண்டேன்.

இப்போது அய்யாவுக்கு 87 வயதாகி விட்டது. மீசை மட்டும்தான் இருக்கிறது; பஞ்சு போல் கிடக்கிறார்; வாத நோய் வந்து படுத்துகிறது.

என் கையை இறுக பிடித்துக்கொண்டு, “கடவுள் என்னை கொண்டு போக மாட்டேங்கிறான்” என்று குழந்தை போல அழுகிறார். எனக்கும் கண்ணீர் பொங்குகிறது. ஊரே பார்த்து மிரண்ட சிங்கம் இன்று இப்படி சிதைந்து கிடக்கிறது.

“அய்யா திலகா அக்காவை கூபிடுங்கய்யா! வந்து பாத்திட்டு போகட்டும்” என்று சொன்னேன்.

“வேண்டவே வேண்டாம். நான்தான் தலையில் தண்ணீரை ஊற்றி அவளை தீர்த்து விட்டேனே” என சைகை காட்டினார். “நான் சீக்கிரம் செத்துடுவேன்” கண்ணீர் மூக்கில் வாயிலெல்லாம் பெருக்கெடுத்து ஓடியது. அவரை ஆசுவாசப்படுத்தி துடைத்து கட்டிலில் படுக்க வைத்தேன் .

கிளம்ப எத்தனிக்கும்போது ஜனனி காபி கப்பை நீட்டினாள். அவள் மகள் வந்து என்னிடம் உரசிக்கொண்டு நின்றாள். அப்படியே திலகா அக்கா முகச்சாடை , கையில் ஏதோ ஒரு புத்தகத்தை வைத்திருந்தாள்.

“என்ன புக் வச்சிருக்கே?” என்று கேட்டேன்.

படாரென திறந்து காட்டினாள். அதில் இரண்டு பெரிய மயிலிறகுகள்.

“இது எங்க பாட்டிமா குடுத்தாங்க. இது குட்டியெல்லாம் போடாது. இது ஒரு வில்லேஜ் கேம் தாத்தா” என்று மழலை மொழியில் பேசிக் கொண்டே போனாள்.

நான் ஜனனி முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“நீங்க ஒரு ரைட்டரா? என் அம்மா சொன்னார்கள்” என்றாள்.

“அய்யா ரொம்ப நாள் தாங்க மாட்டார். எப்படியாவது உங்கள் அம்மாவை இங்கு அழைத்து வர முயற்சி செய்தால் என்ன?” என்று கேட்டேன்.

“நானும் என் அப்பாவும் எத்தனையோ முயற்சிகள் எடுத்தோம் அங்கிள். இருவரும் விடாப்பிடியாக இருக்கிறார்கள். நீங்கள் வேண்டுமானால் என் அம்மாவிடம் பேசுங்கள்” என்றாள்.

நான் விடை பெற்று வீட்டுக்கு வந்தேன்.

“என்ன திலகா பொண்ணும் பேத்தியும் அய்யாவை பார்க்க வந்திருக்காங்க போல. இன்னைக்கு ஏதும் மயிலிறகு குட்டி போட்டதா ?” மனைவி நகையாடினாள்

“மயிலிறகு குட்டி போட்டு, அதற்கு ஒரு பேத்தியும் இருக்கிறது. ஆனால் அந்த மயிலிறகு தன் பிறந்த வீட்டுக்கு வராமல் அடம் பிடிக்கிறது” என்றேன்.

அய்யா அழுதது கண் முன் திரும்ப திரும்ப வந்து கொண்டேயிருந்தது. மொட்டை மாடிக்கு போய் திலகா அக்காவிற்கு போன் செய்தேன். அய்யாவை வந்து கட்டாயம் பார்க்க சொன்னேன்.

“முடியாது மணி! நானும் பலமுறை முயற்சி செய்தேன். ஊர் எல்லை வரை வந்ததெல்லாம் திரும்பி போயிருக்கிறேன். எதோ ஒன்று தடுக்கிறது.

அவர் ரொம்பவும் நேசித்த அரசியல் வாழ்வு அஸ்தமனமாக நானும் என் காதலும் தான் காரணம் என்ற குற்ற உணர்வு என்னை வாட்டி வதைக்கிறது.

என் கணவரும் அவரை ரொம்ப மதிக்கிறார். அவர் ஜாதி கட்சியிலிருந்து விலகி அப்பா கட்சிக்கு வர நினைத்தார். என் கணவர் முதல் முறையாக சட்ட சபைக்கு போகும் போது அய்யாவிடம் ஆசி வாங்க எவ்வளவோ முயற்சி செய்தார். எதுவும் முடியவில்லை.

என் உயிர் உலகமே அப்பா, அப்பா தான் என்று துள்ளி திரிந்து கொண்டிருந்தேன் அம்மா செத்த போது கூட, நான் பெரிதாய் கவலைப்படவில்லை.

அப்பா என் தலையில் குடம் குடமாய் தண்ணீர் ஊற்றி என்னை தீர்த்து விட்ட தருணம் எனக்கு உலகமே இருண்டது.

உன்னிடம் சொல்வதில் என்ன இருக்கிறது , அன்று அப்பா கோயில் வாசலில் என்னை தீர்த்து விட்ட போது., அம்மாவும் இல்லை, அப்பாவும் இல்லையா! என்ற பயத்தில் எனக்கு உத்திர போக்கே வந்துவிட்டது மணி.

வாழ்க்கையில் எனக்கு நிறைய வெற்றி கிடைத்தது.

எதையும் ரசிக்க, ருசிக்க முடியவில்லை. அப்பா! அப்பா! என்று அரற்றி கொண்டே இருக்கிறேன். ஆனால் அவரை பார்க்க மனம் துணியவில்லை. எல்லாம் இருந்தும் நான் அநாதை போல் வாழ்கிறேன்

என் மகளையும் பேத்தியையும் அங்கு அனுப்பி வைத்து ஆறுதல் அடைகிறேன். ஊரார்கள் சொல்வது போல் சொத்துக்காக அல்ல.

யாருக்கு வேண்டும் அந்த சொத்து ?

அப்பா பிடிவாதம் எனக்குத் தெரியும். பெட்டி நிறைய பணத்தை குடுத்து கட்சி மாறச் சொன்னவர்களை வெளியில் துரத்தியவர் அவர்.

அவர் சொன்னால் சொன்னது தான்; கொள்கை, கொள்கை, கொள்கை.

அந்த கொள்கைக்காக தாயில்லாத, தன்னையே தெய்வமாய் நம்பிக் கொண்டிருந்த ஒற்றை மகளை, தலையில் தண்ணீர் ஊற்றிக் கதற கதற தீர்த்து விட்டவர் அவர்.

அவர் என்னை ஒரு நாளும் ஏற்று கொள்ள மாட்டார். நானும் வர மாட்டேன் மணி.

அப்பா சாகும் முன் நான் செத்து விட வேண்டும் என்று நினைக்கிறன். எனக்கும் 62 வயதாகி விட்டது. மாரடைப்பு போன்ற ஏதேனும் வியாதி வந்து நொடியில் நான் இறந்துவிட வேண்டும் மணி.

நீதான் அடிக்கடி சொல்வாயே, அய்யா உன் தந்தையின் மிச்சம் என. கொஞ்சம் அவரை பார்த்துக் கொள் மணி. நான் செத்துவிடுவேன் மணி. நான் சீக்கிரம் செத்து விடுகிறேன் மணி…”

ஒரே அழகையும் தேம்பலும் அவளால் பேசவே முடியவில்லை , தொடர்பை துணிடித்து விட்டாள்.

பாசத்தில் குழைந்து உருகுகிறார்கள்; சாகவும் துணிந்து விட்டார்கள். இவர்களால் இறங்கி வர முடியவில்லை,

நொடியில் தடம் மாறும் உலகில் இவர்கள் தண்ணீர் சத்தியத்தில் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.

பெரிய பெரிய மனிதர்களாய் வளர்ந்து, பொருள் ஈட்டி, பிள்ளை குட்டி பெற்று, ஏதேதோ மன உளைச்சல்களை சுமந்து கொண்டு, அப்பப்பா என்ன உலகமடா இது? ஒரே வெறுப்பாய் இருந்தது.

ஜனனி சொன்னது போல், அது முட்டாள் தனமாகவே இருந்தாலும் பரவயில்லை; அந்த மயிலிறகு உலகத்திலியே இருந்திருக்கலாம்.

முனைவர் க.வீரமணி
சென்னை
கைபேசி: 9080420849

5 Replies to “மயிலிறகு உலகம்!”

  1. மயில் இறகு மென்மையானது. அதைப்போல் மனித மனமும் மென்மையானது.

    ஆனால் மயிலிறகை வைத்திருக்கும் புத்தகமும் மனதை வைத்திருக்கும் மனிதனும் பற்பல வலிகளுடனும் எதிர்பாராத திருப்பங்களுடனும் பிறர்களின் தலையீடுகளுடனும் அல்லோல கல்லோலப்பட வேண்டியுள்ளது.

    மனித உலகம் விண்ணையே தொட்டாலும் சாதி கொள்கை, சத்தியம் மற்றும் வஞ்சம் நம்மை பாதாளத்தில் தான் தள்ளுகிறது.

    ஆசிரியர் தன் விரக்தியை கதையாக எழுதி ஆசுவாசம் அடைந்து கொண்டார்.

    இக்கதையில் மயில் இறகினை கதைக்கேற்ப மிக நேர்த்தியாக ஆசிரியர் உபயோகித்துள்ளார்.

    நம் குழந்தைப் பருவம் தற்போது நாம் இருக்கும் மனிதப் பருவத்தை விட மேன்மையானது.

    மீண்டும் பிற்போக்குத்தனத்தை சாட்டையால் அடிக்கும் கதைக்களம்…

    வியப்பூட்டும் கதாப்பாத்திரங்களுக்கு மத்தியில் எனக்கு பரிச்சயமான ஒரு உன்னதமான கதாபாத்திரத்திரம்.

    கதை படித்ததில் மகிழ்ச்சியும் வருத்தமும் படும் ஒரே ஆள் நான் தான்!

  2. பிரன்ஸ் காப்கா தரும் விசாரணைக்குள் உள்ள இருத்தலை, தவிப்பை, இனம் கண்டேன் மயிலிறகில்.

    பல வாயில், கதவுகள், ஜன்னல்கள், பூட்டப்படாத தாழ்கள்!

  3. மூன்று தலைமுறை கதை.

    ரத்தின சுருக்கம், சிரிப்பு, பாசம், அழுகை, பிரிவு, மரணம் மற்றும் வைராக்கியம் என எத்தனை உணர்ச்சிகள்.

    இந்தக் கதை எனக்குத் தெரிந்த கதை தான். ஆனால் படிக்கும் போது கண்ணீர் பெருகுகிறது.

    தங்கவேல் ஐயா போல் வீரமணி ஐயாவும் அவ்வப்போது முரண்டு பிடிக்கிறார்.

    இதுபோல் மயிலிறகு உலகத்தை படைக்கும் போது தான் நிம்மதியாக இருக்கிறது.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.