வஞ்சனை கொல்லும் – வ.முனீஸ்வரன்

வஞ்சனை என்ற சொல்லுக்கு கபடம், பொய் அல்லது தந்திரம் செய்து ஏமாற்றுவது என்று பொருள் கொள்ளலாம். வஞ்சனை செய்பவர்கள் இறுதியில் வீழ்வர்.

வஞ்சனை மோசமான கொடிய குணங்களுள் ஒன்று. இக்கொடிய குணத்தைக் கொண்டவர்கள் ‘அரக்கர்கள்’ என்றே நம்முடைய இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இன்றைக்கு நம்மிடையே எத்தனையோ அரக்கர்கள் இருக்கின்றனர். எந்த ஒரு சூழ்நிலையையும் தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள எத்தனையோ வஞ்சனைகளை செய்கின்றனர்.

ஆனால் வஞ்சனைகளைச் செய்வோர் இறுதியில் மடிவர் என்பதை அவர்கள் அறிந்திலர். வஞ்சனையைச் செய்து முதலில் பலன் பெற்றாலும் இறுதியில் மோசமான முடிவுகளை எய்தியதாக நம்முடைய புராணங்களில் குறிப்பிடப்படுவோர் இருவர்.

வில்லவன், மாரீசன் என்போரே அவர்கள். வஞ்சனையால் பிறரை துன்பத்திற்கு உள்ளாக்கி தாமும் கெட்டனர். வஞ்சகர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் அவர்கள் இறுதியில் வீழ்த்தப்படுவர் என்பதற்குச் சான்றாகவே வில்லவன், மாரீசன் பற்றி சொல்லி வைக்கப்பட்டிருக்கின்றன.

வில்லவன் முனிவர்களை வஞ்சனையால் ஏமாற்றி அவர்களை புசிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்த வேளையில் அகத்தியரால் அவனுக்கும் அவனுடைய வஞ்சனைக்கும் முடிவு கட்டப்பட்டது.

மாரீசன் இராமயண இதிகாசத்தில் கூறப்படுபவன். பொன் மானாக மாறி சீதையை இராவணன் கவர்ந்து செல்லக் காரணமானவன்.

அவர்கள் பற்றித் தெரிந்து கொள்வோம்.

வில்லவன்

அகத்தியர் இறைவனான சிவபெருமானின் ஆணைப்படி தென்கோடி பொதிகை மலைக்கு பயணிக்கும் வேளையில் விந்திய மலையைத் தாண்டிய போது, ஒருவன் அவரை வரவேற்று, விருந்து உண்ண அழைத்தான்.

அவன் பார்ப்பதற்கு பக்திமானாகவும், அமைதியே உருவானவனாகவும் இன்முகத்துடனும் இருந்தான். ‘சரி, இவ்வளவு பண்பாக விருந்துண்ண அழைக்கும்போது நாம் ஏன் மறுப்புச் சொல்ல வேண்டும்?’ என்று எண்ணிய அகத்தியர் அவனுடன் விருந்துண்ண அவனுடைய குடிலுக்குச் சென்றார்.

ஆனால் உண்மையில் அகத்தியரை வரவேற்றவன் வில்லவன். கொடிய குணங்களைக் கொண்டவன். அவனும் அவனுடைய தம்பி வாதாபி என்பவனும் முனிவர்களை வஞ்சனையால் ஏமாற்றி விருந்துண்ண அழைத்து அவர்களை புசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

வில்லவனும் வாதாபியும் மாயாஜாலங்கள் கொண்டவர்கள். வாதாபி தன்னுடைய மாயாஜாலத்தால் உணவாக மாறி விடுவான். வில்லவன் நல்லவன் போல் வேடம் கொண்டு ஏதேனும் ஒரு முனிவரை விருந்துண்ண அழைப்பான்.

முனிவரும் வில்லவனின் இன்முகத்துடன் கூடிய அன்பொழுகப் பேச்சில் மயங்கி வில்லவனின் குடிலுக்கு வந்து விடுவார். அவருக்கு வில்லவன் உணவாக மாறிய வாதாபியை விருந்தளிப்பான்.

முனிவர் விருந்தினை உண்டபின், வில்லவன் ‘வாதாபி வெளியே வா’ என்றழைப்பான். வாதாபியும் மாயாஜாலத்தால் முனிவரின் வயிற்றினைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்துவிடுவான். பின்னர் இருவரும் சேர்த்து முனிவரைப் புசிப்பதை வழக்கமாகக் கொண்ருந்தனர்.

அகத்தியருக்கு ஏற்கனவே வில்லவன், வாதாபி பற்றியும் அவர்களின் வஞ்சனை பற்றியும் தெரிந்திருந்தது. எனினும் வில்லவனின் உபசரிப்புக்கு மகிழ்ந்தவர் போல் வில்லவனுடன் விருந்துண்ணச் சென்றார்.

வில்லவன் அகத்தியரை வரவேற்று வழக்கம்போல் உணவாக மாறிய வாதாபியை விருந்தளித்தான்.

அகத்தியரும் உணவினை உண்டபின் வயிற்றினைத் தடவி சீரணம் செய்து விட்டார்.

இதனை அறியாத வில்லவன் வழக்கம் போல் ‘வாதாபி வெளியே வா’ என்று அழைத்தான். வாதாபியோ சீரணம் ஆகிவிட்டதால் வெளியே வரவில்லை. இதனை அறியாத வில்லவன் மீண்டும் வாதாபியை வெளியே வருமாறு அழைத்தான்.

அகத்தியர் வில்லவனிடம் “உன்னைப் பற்றியும் வாதாபி பற்றியும் உங்களின் வஞ்சனை பற்றியும் எனக்குத் தெரியும். வாதாபியை நான் சீரணம் செய்து விட்டேன். உன்னையும் தண்டித்து உங்களுடைய வஞ்சனைக்கு முடிவு கட்டுகிறேன்” என்றார்.

இதனைக் கேட்டு கோபம் கொண்ட வில்லவன் அகத்தியரை தாக்க வந்தான். அதன் முன் அகத்தியர் அவனை வீழ்த்தி அழித்து விட்டார்.

அதன்பின் அப்பகுதியில் எல்லோரும் வில்லவன், வாதாபி தொந்தரவு இன்றி நிம்மதியாக வாழ்ந்தனர்.

மாரீசன்

மாரீசன் இராமாயண இதிகாசத்தில் பொன்மானாக உருமாறி சீதையை இராவணன் கடத்திச் செல்லக் கருவியாகச் செயல்பட்டவன்.

மாரீசன் இராவணனுக்கு மாமன் முறை உள்ளவன். தாடகை மற்றும் அவளுடைய புதல்வர்களான சுபாகு மற்றும் மாரீசன் ஆகியோர் முனிவர்களின் தவத்திற்கு இடையூறு செய்து வந்தனர்.

விஸ்வாமித்திரர் தன்னுடைய தவத்தினைக் காப்பதற்காக தசரதனிடம் அனுமதி பெற்று இராமர் மற்றும் இலக்குவனை தம்முடன் அழைத்துச் சென்றார்.

விஸ்வாமித்திரரின் தவத்திற்கு இடையூறு விளைவித்த வந்தபோது இராமர் தாடகை மற்றும் சுபாகுவை அழித்து விட்டார். மாரீசனை தம்முடைய விற்திறமையால் சமுத்திரத்தில் ஆழ்தினார்.

இராம பாணத்தால் தாயையும் சகோதரரும் அழிந்ததைக் கண்ட மாரீசன் தப்பி இலங்கைக்குச் சென்று தவத்தில் ஈடுபட்டான்.

இராமர் சிவதனுசுவை ஒடித்து சீதையைத் திருமணம் செய்து விஸ்வாமித்திரருடன் அயோத்தி மீண்டார். அதன்பின் தசரதன் இராமனுக்கு முடிசூட தீர்மானித்தபோது கைகேயிக் கொடுத்த வாக்குறுதியால் இராமனை 14 ஆண்டுகள் வனவாசம் செய்யச் சொல்லி மாண்டு போனார்.

இராமர் வனவாசத்தில் சீதை மற்றும் இலக்குவனுடன் பஞ்சவடியில் தங்கியிருந்த வேளையில் இராவணனின் தங்கை சூர்ப்பனகை இராமனின் மீது மையல் கொண்ட போது இலக்குவன் அவளின் மூக்கினை அரிந்து விரட்டினான்.

சூர்ப்பனகை இராமனை பழிவாங்கும் விதமாக சீதையை இலங்கைக்குத் தூக்கி வருமாறு இராவணனை உசுப்பேற்றினாள்.

இராவணனும் மாரீசனை அணுகி பொன்மான் வேடம் கொண்டு சீதையின் முன்பு சென்று மேய்ந்து இராமனை சீதையிடம் இருந்து வெகுதூரம் அழைத்துச் செல்லுமாறு கூறினான்.

இராவணனின் வார்த்தையை முதலில் மறுத்த மாரீசனை, “சூர்ப்பனகைக்கு நடந்த கொடுமைக்கு பழிவாங்க சீதையைக் கவர்ந்து செல்வதே சரி” என்று சமாதனப் பேச்சு பேசி சம்மதிக்க வைத்தான் இராவணன்.

மாரீசனும், பொன்னிற உடலில் வெண்புள்ளிகள் பளபளக்க, காதுகளை விரித்தபடி குட்டை வாலினை இங்கும் அங்கும் ஆட்டியபடி பொன்மானாக துள்ளிக் குதித்து சீதையின் முன் உலாவினான்.

பொன் மானின் அழகில் மயங்கிய சீதை இராமனிடம் மானைப் பிடித்துத் தருமாறு கூறினாள். அதற்கு இசைந்த இராமன் இலக்குவனை சீதைக்கு காவலிட்டு மானின் அருகில் சென்றபோது மாரீசன் முதலில் லேசாகவும், பின்னர் சற்று வேகமாகவும் போக்குக்காட்டி சீதையிருந்த இடத்திலிருந்து இராமனை வெகுதூரத்திற்கு அழைத்துச் சென்றான்.

இறுதியில் மானைப் பிடிக்க அம்பினை எய்தார் இராமன்.

இராமனின் அம்பால் சுயஉருவம் பெற்ற மாரீசன், “இலக்குவா, சீதா காப்பாற்றுங்கள்” என இராமனின் குரலில் கத்தியபடி கீழே சாய்ந்து உயிரை விட்டான்.

மாரீசனின் குரலை இராமனின் குரலாகக் கருதிய சீதை இராமனை ஆபத்தில் இருக்கும் காப்பாற்ற இலக்குவனை அனுப்பினாள்.

மாரீசனின் வஞ்சனை இராமனுக்குப் புரிந்ததும் சீதைக்கும், இலக்குவனுக்கும் ஏதேனும் தீங்கு நேர்ந்து விடக்கூடாது என்று குடிலுக்கு விரைந்து திரும்பினார்.

இராமன் எண்ணியபடி சீதைக்கு தீங்கு நேர்ந்தது. குடிலில் சீதையைக் காணவில்லை.

இராமாயணம் உருவாக முக்கிய காரண கர்த்தா இராமனின் குரலில் கத்திய மாரீசனின் வஞ்சனை.

முடிந்த வரை அடுத்தவர்களுக்கு வஞ்சனை செய்யாமல் வாழ்வோம் என உறுதி கொள்வோம்.

வ.முனீஸ்வரன்

வ.முனீஸ்வரன் அவர்களின் படைப்புகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.