2016-ல் உலகின் பிரபலமான டாப் 10 விளையாட்டுகள்

2016-ல் உலகின் பிரபலமான டாப் 10 விளையாட்டுகள் எவை என்று பார்ப்போம்.
விளையாட்டுகளைப் பார்ப்பது சிறந்த பொழுதுபோக்கு ஆகும். சில விளையாட்டுகள் பொழுதுபோக்கினையும் மீறி ரசிகர்களை மிகுந்தளவு ஆவர்வத்துடனும, உத்வேகத்துடனும் கவர்ந்திழுகின்றன.

அவ்வாறே 2016-ஆம் ஆண்டில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட உலகின் பிரபலமான டாப் 10 விளையாட்டுகள் பற்றிப் பார்ப்போம்.

 

கால்பந்து

கால்பந்து

கால்பந்து சுமார் 3.5 பில்லியன் மக்களைக் கவர்ந்து கால்பந்து விளையாட்டு உலகின் பிரபலமான விளையாட்டுகளுள் முதல் இடத்தில் உள்ளது.

இவ்விளையாட்டு ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்கா கண்டங்களில் புகழ் பெற்றது. இவ்விளையாட்டு கிமு 200-ஆம் ஆண்டில் சீனாவில் ஹான் வம்சத்தினரால் சுஜூ என்ற பெயரில் விளையாடப்பட்டது.

பின் இங்கிலாந்தில் பிரபலமடைந்த இவ்விளையாட்டிற்கான விதிமுறைகள் 1883-ல் பிரிட்டன் கால்பந்து கழகத்தால் ஏற்படுத்தப்பட்டது.

பின் உலகெங்கும் பிரபலமடைந்த இவ்விளையாட்டிற்கு பாரிசீல் 1904-ல் உலக கால்பந்து சங்கமான பிபா ஏற்படுத்தப்பட்டது.

இன்றைக்கு உலகெங்கிலும் தொழில் ரீதியாகவும், 250 மில்லியன் மக்களால் தொழில்நிலை சாராத நிலையிலும் விளையாடப்படுகிறது.

1930-ல் உலக கால்பந்து கோப்பை பிபாவால் அறிமுகப்படுத்தப்பட்டு ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 1942, 1946 ஆகிய வருடங்களில் உலக கால்பந்து கோப்பை நடைபெறவில்லை.

இவ்விளையாட்டின் ஆடுகளம் செவ்வக வடிவில் அமைக்கப்பட்டு கோல் போடும் இடம் இருவிளிம்புகளிலும் வைக்கப்பட்டிருக்கும்.

இவ்விளையாட்டின் நோக்கம் கைகளைத் தவிர உடலின் எந்தப் பாகத்தைப் பயன்படுத்தியும் எதிர் அணியின் கோல்போடும் இடத்தில் கோலினை போடுவது ஆகும்.

கோல் கீப்பர் மட்டுமே பந்தினை கைகளால் இவ்விளையாட்டு விளையாடும் போது தொட வேண்டும். இவ்விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள் அதிகஅளவு வருமானத்தை ஈடுகின்றனர்.

மேலும் இவ்வீரர்கள் உணர்ச்சி நிறைந்த ரசிகர்களால் கடவுளாக வர்ணிக்கப்படுகிறார்கள். இதுவரை நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் பிரேசில் அணி ஐந்து முறை கோப்பையைப் பெற்றுள்ளது.

 

கிரிக்கெட்

கிரிக்கெட்

கிரிக்கெட் சுமார் 2.5 பில்லியன் ரசிகர்களைக் கொண்டு உலகின் பிரபலமான விளையாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆசியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற இடங்களில் இவ்விளையாட்டு புகழ்பெற்றது.

1550-களில் இங்கிலாந்தில் சிறுவர்களால் விளையாடப்பட்டு 1610-ல் பெரியவர்களிடம் இவ்விளையாட்டு பிரபலமடைந்து பெரியவர்களால் விளையாடப்பட்டது.

ஆங்கில ஏகாதிபத்தியத்தால் இந்திய துணைக்கண்டம் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிரபலமடைந்தது. 19 நூற்றாண்டுவாக்கில் கிரிக்கெட் கிளப்புகள் நாடுகளில் தொடங்கப்பட்டன.

முதல் சர்வதேப் போட்டியானது 1884-ல் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கிடையே நடைபெற்றது. இப்போட்டியானது 20,000 பார்வையாளர்களைக் கவர்ந்திழுத்து 1,20,000 டாலர்கள் வசூலைத் தந்தது. இத்தொகை அன்றைய நாட்களில் மாபெரும் தொகையாகும்.

இன்றைய நாட்களில் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, கரீபியன் தீவுகள், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பங்களாதேஷ், ஜிம்பாவே போன்ற நாடுகளில் மிகவும் பிரபலமடைந்துள்ளது.

இவ்விளையாட்டு 22 யார்டு நீள் செவ்வக வடிவ ஆடுகளத்தில் 11 நபர்களைக் கொண்டு இரு குழுவினரால் விளையாடப்படுகிறது.

விளையாட்டின் முதல்பாதியில் ஒரு அணி பந்து வீசும். எதிரணி அதனைச் சமாளித்து ஓட்டங்களை எடுக்கும். அடுத்த பாதியில் பந்து வீசிய அணி மட்டை பிடித்து ஓட்டங்களை எடுக்கும்.

இவ்விளையாட்டு டெஸ்ட் போட்டி, ஒரு நாள் போட்டி, 20 ஓவர்கள் போட்டி என்ற மூன்று பிரிவுகளில் விளையாடப்படுகிறது. 20 ஓவர் போட்டி அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு இவ்விளையாட்டு மிகவும் பிரபலமடைந்துள்ளது.

 

ஹாக்கி

ஹாக்கி

ஹாக்கி சுமார் 2.5 பில்லியன் ரசிகர்களைக் கொண்டு உலகின் பிரபலமான விளையாட்டில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பப, ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் இவ்விளையாட்டு புகழ்பெற்றது.

இவ்விளையாட்டு நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இளவயதினரால் விளையாடப்பட்டு பின் 19 நூற்றாண்டில் இங்கிலாந்தில் பிரபலமடைந்தது.

1886-ல் இவ்விளையாட்டிற்கு ஹாக்கி சங்கம் தொடங்கப்பட்டு 1895-ல் முதல் சர்வதேசப் போட்டி அயர்லாந்து மற்றும் வேல்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. 1908-ல் ஒலிம்பிக்கில் இப்போட்டி இடம்பெற்றது.

1968 வரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வலிமையான அணிகளாக விளங்கின. 1970-ல் செயற்கை ஆடுகளங்கள் ஏற்படுத்தப்பட்டபின் வளரும் நாடுகளான இவற்றில் செயற்கை ஆடுகளங்கள் அமைக்க முடியாமல் போனதினால் இவற்றின் வலிமை குறையத் தொடங்கியது.

நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், நியூசிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. இருந்த போதிலும் பாகிஸ்தான் அணி இதுவரையிலும் அதிகபட்சமாக நான்கு முறை உலகக் கோப்பையைக் கைபற்றியுள்ளது.

கால்பந்தைப் போலவே இவ்விளையாட்டிலும் கோலானது அடிக்கப்படிகிறது. ஆனால் இவ்விளையாட்டில் பந்தை வளைந்த மட்டையால் தள்ளிச் சென்று கோலடிக்க வேண்டும்.

 

டென்னிஸ்

டென்னிஸ்

டென்னிஸ் சுமார் 1 பில்லியன் ரசிகர்களைக் கொண்டு உலகின் பிரபலமான விளையாட்டில் நான்காவது இடத்தில் உள்ளது. ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் இவ்விளையாட்டு புகழ்பெற்றது.

இவ்விளையாட்டு 12 நூற்றாண்டில் வடக்கு பிரான்சில் ஜெய் டி பாவ்மி என்ற பெயரில் 10-ம் லூயிஸ் என்ற மன்னரால் விளையாடப்பட்டது. பின் ஐரோப்பாவின் மேல்தட்டு மக்களிடம் பிரபலமானது.

1859-ல் இங்கிலாந்தில் உள்ள பக்கிங்காமில் தற்போது விளையாடும் இவ்விளையாட்டு வரையறை செய்யப்பட்டது. 1872-ல் இவ்விளையாட்டிற்கான கிளப் ஆரம்பிக்கப்பட்டது. 1874-ல் பிரபலமான மற்றும் பழழையான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடத்தப்பட்டது.

பின் அமெரிக்காவில் பிரபலமடைந்த இவ்விளையாட்டிற்கு 1880-ல் அமெரிக்க தேசிய விளையாட்டுப் போட்டி என்ற பெயரில் போட்டி நியூயார்க்கில் நடத்தப்பட்டது. தற்போது யூஎஸ் ஓப்பன், பிரெஞ்சு ஓப்பன், ஆஸ்திரேலிய ஓப்பன், விம்பிள்டன் ஆகிய டென்னிஸ் போட்டிகள் உலகளவில் ரசிகர்களை கவர்ந்திழுக்கிறது.

இவ்விளையாட்டில் வெற்றி பெறும் முதல் தரவரிசை வீரர்கள் அதிக அளவு பரிசுத் தொகையினைப் பெறுகின்றனர். இவ்விளையாட்டு தனிநபர் மற்றும் இரட்டையர்கள் என இருபிரிவுகளில் விளையாடப்படுகிறது.

 

வாலிபால்

வாலிபால்

வாலிபால் சுமார் 900 மில்லியன் ரசிகர்களைக் கொண்டு உலகின் பிரபலமான விளையாட்டில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற இடங்களில் இவ்விளையாட்டு புகழ்பெற்றது.

1895-ல் வில்லியம் ஜி.மோர்கன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. பேஸ்கட்பால் விளையாட முடியாத வயதான அதே நேரத்தில் உடற்தகுதியான பழைய பேஸ்கட்பால் வீரர்களுக்காகனது என்பதே இவ்விளையாட்டின் நோக்கமாகும்.

1900 இவ்விளையாட்டு கனடாவில் பிரபலமடைந்தது. 1964-ல் ஆண்கள் வாலிபாலானது ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது. பின் 1996-ல் பீச் வாலிபால் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது. கடந்த பத்து வருடங்களில் இவ்விளையாட்டு ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் பிரபலமடைந்துள்ளது.

இவ்விளையாட்டு தலா ஆறு வீரர்களைக் கொண்ட இரு அணியினரால் விளையாடப்படுகிறது.

 

டேபிள் டென்னிஸ்

டேபிள் டென்னிஸ்

டேபிள் டென்னிஸ் சுமார் 850 மில்லியன் ரசிகர்களைக் கொண்டு உலகின் பிரபலமான விளையாட்டில் ஆறாவது இடத்தில் உள்ளது. ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற இடங்களில் இவ்விளையாட்டு புகழ்பெற்றது.

இவ்விளையாட்டு இங்கிலாந்தில் விக்டோரிய மாறிலத்தில் இரவு உணவிற்குப் பின் விளையாடும் விளையாட்டாக ஆரம்பிக்கப்பட்டது.

இங்கிலாந்தில் பிரபலாமான இவ்விளையாட்டு 1890-களில் பிரிட்டிஷ் காலனி நாடுகளுக்குப் பரவியது. பிங்பாங் என்றும் இவ்விளையாட்டு அழைக்கப்படுகிறது.

1926-ல் சர்வதேச டேபிள் டென்னிஸ் பெடரேசன் தொடங்கப்பட்டு அதே ஆண்டு லண்டனில் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட்டன.

1930-ல் சீனா உட்பட ஆசிய நாடுகளில் இவ்விளையாட்டு பிரபலமடைந்தது. தற்போது சீனாவே இவ்விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

 

பேஸ்பால்

பேஸ்பால்

பேஸ்பால் சுமார் 500 மில்லியன் ரசிகர்களைக் கொண்டு உலகின் பிரபலமான விளையாட்டில் ஏழாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, ஜப்பான் போன்ற இடங்களில் இவ்விளையாட்டு புகழ்பெற்றது.

இவ்விளையாட்டு அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்களால் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விளையாட்டைப் போன்ற விளையாட்டு பிரான்சில் 14-ம் நூற்றாண்டு முதல் விளையாடப்பட்டு வந்தது.

பேஸ்பால் ஐக்கிய அமெரிக்க நாடுகள், வெனிசுலா மற்றும் தென்னமரிக்க நாடுகள் பலவற்றுக்கும் தேசிய விளையாட்டாகும். 1971 முதல் அமெரிக்காவில் விளையாடப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக ஐரோப்பாவிலும் இவ்விளையாட்டு பிரபலமடைந்து வருகிறது.

 

கோல்ப்

கோல்ப்

கோல்ப் சுமார் 450 மில்லியன் ரசிகர்களைக் கொண்டு உலகின் பிரபலமான விளையாட்டில் எட்டாவது இடத்தில் உள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் கனடா போன்ற இடங்களில் இவ்விளையாட்டு புகழ்பெற்றது. இவ்விளையாட்டு ரோமின் பாகானிக்கா என்ற விளையாட்டிலிருந்து தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தற்போது உள்ள விளையாட்டு 15-ம் நூற்றாண்டில் ஸ்காட்லாந்தில் பிரபலமாக விளையாடப்பட்டது. பின் இரண்டாம் ஜேம்ஸ் என்ற மன்னரால் தடை செய்யப்பட்டது. பின் 1502-ல் அவரது பேரனான நான்காம் ஜேம்ஸ் என்ற மன்னரால் இவ்விளையாட்டிற்கான தடை நீக்கப்பட்டது.

1860-ல் அயர்லாந்தில் இவ்விளையாட்டிற்கான சர்வதேசப் போட்டி நடத்தப்பட்டது. பின் அங்கிருந்து அமெரிக்காவில் பிரபலமடைந்த இவ்விளையாட்டிற்கான கிளப் அமெரிக்காவில் 1888-ல் ஆரம்பிக்கப்பட்டது. பின் அங்கிருந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு பரவி பிரபலமானது.

 

பேஸ்கட்பால்

பேஸ்கட்பால்

பேஸ்கட்பால் சுமார் 400 மில்லியன் ரசிகர்களைக் கொண்டு உலகின் பிரபலமான விளையாட்டில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இவ்விளையாட்டு புகழ்பெற்றது.

கனடாவில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டாக இருந்த இவ்விளையாட்டு 1895-ல் அமெரிக்காவின் பள்ளிகளில் விளையாடப்பட்டு பிரபலமடைந்தது. 1920-ல் அமெரிக்கா முழுவதும் இவ்விளையாட்டு பிரபலமடைந்தது.

1946-ல் இவ்விளையாட்டிற்கான சங்கம் அமெரிக்காவில் தோற்றுவிக்கப்பட்டது. நாளடைவில் உலகம் எங்கும் ரசிகர்களை இவ்விளையாட்டு பெற்றது.

 

அமெரிக்கன் கால்பந்து

அமெரிக்கன் கால்பந்து

அமெரிக்கன் கால்பந்து சுமார் 390 மில்லியன் ரசிகர்களைக் கொண்டு உலகின் பிரபலமான விளையாட்டில் பத்தாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் இவ்விளையாட்டு புகழ்பெற்றது.

இவ்விளையாட்டு ரக்பி மற்றும் கால்பந்து ஆகிய விளையாட்டுகளைக் கலந்து அமெரிக்காவில் கல்லூரி மாணவர்களால் விளையாடப்பட்டது. முதன்முதலில் இவ்விளையாட்டு 1869-ல் இருகல்லூரி குழுக்களுக்கிடையில் விளையாடப்பட்டு 1873-ல் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கிடையே பிரபலமானது.

இன்றைக்கும் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், தொழில் ரீதியாக விளையாடுவோர்கள் ஆகிய பல மில்லியன் பேர்கள் அமெரிக்கன் கால்பந்து விளையாட்டினை விளையாடுகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.