A FRAME குறும்படம் விமர்சனம்

A FRAME குறும்படம் நம் வாழ்வை சட்டகங்களுக்குள் அடக்கிக் கொள்வதைப் பற்றி எடுத்துக் காட்டுகிறது.

வாழ்க்கையின் பக்கங்களில் உள்ள சட்டகங்களின் அடுக்குகள் தேவையா? தேவையில்லையா? என விளக்குகிறது இந்த மராத்தியக் குறும்படம்.

ஒவ்வொருவரும் குறைந்தது 1000 சட்டகங்களையாவது தனக்குள் வைத்துக் கொண்டு, அதை மீறி விடாது வாழ்வைக் கட்டமைத்துக் கொண்டு, மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்து விடுகின்றனர். அதுதான் வாழ்வா?

”பாவனையால் வாழ்ந்து விடும் சாத்தியம் உண்டு” என்பார் கவிஞர் அபி.

”எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஒருவரைச் செதுக்குவதற்கு உளிகள் வருகின்றன” என்பது முன்னோர் வாக்கு.

“பிறர்க்கென முயலுநர் உண்மையானே” என்பது கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியின் புறநானூற்று வரியாகும்.

அப்பாவிற்காகப் படித்த படிப்பும், கணவனுக்காக இழந்த  வேலையும், பிள்ளைகளுக்காக விட்டுக் கொடுத்த பலவும், ஆசிரியருக்காகப் படித்த பாடமும் என வேறொருவருக்காகவே வாழ்வை வாழ்ந்து விட்டுச் செல்லும் எத்தனையோ மனிதக் கதாபாத்திரங்கள்.

அவரவருக்கான வாழ்வை வாழ்வது யார்?

சட்டகம் (FRAME) இல்லா வாழ்வின் ஊடே பயணிப்பது யார்?

முறைகளின் பின்னணிகளை உணர்பவர் யார்?

இது போன்ற பல கேள்விகளைச் சரமாரியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறது இக்குறும்படம்.

உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே, வழி முறைகளை உருவாக்கிச் சட்டமாக்கி அந்தக் கட்டுக்குள் பூட்டி வைத்தனர். ஆனால், அதையே தான் எல்லா நிலைகளிலும் வாழ வேண்டும் என்று சொல்லவில்லை.

இதனைப் புரிந்து கொள்ளாமல் எல்லாச் சூழ்நிலைகளிலும் சட்டத்தை முன் வைத்து அதற்குள் வாழ்ந்து விடவே எல்லோரும் முனைகிறோம்.

ஏதோ ஒன்று அப்பொழுது தவறில்லை என்றால், பிறருக்கு எந்த விதத்திலும் அதனால் பாதிப்பு இல்லை என்றால், நமக்கு அதுவே பலன் அளிக்கும் என்றால், கட்டி வைத்திருக்கும் சட்டத்தை மீறினால் தவறில்லை தானே?

எத்தனை பேர் அவ்வாறு வாழுகின்றோம்? மாறுகின்றோம்!

”இன்று அசைவம் சாப்பிட்டு உள்ளேன். எனவே இன்று முழுவதும் கோயிலுக்கு வர மாட்டேன் என்கிறார் ஒருவர். நாளை குளித்துவிட்டு கோயிலுக்குச் செல்லும் பொழுது சாப்பிட்டு உள்ள அசைவ உணவு அவர் வயிற்றில் முழுவதும் செரித்துப் போய் இருக்குமா என்ன?”

பசியோடு இருப்பவரைக் கவனிக்காமல், கடவுளுக்குக் குடம் குடமாகப் பால் அபிசேகம், பஞ்சாமிர்த அபிசேகம் செய்வதை யோசியுங்கள்!

சட்டகத்தின் பின்னணி வேறு. இதைப் புரிந்து கொள்வதில் தான் முரண் பெரும் பங்கு வகிக்கிறது.

இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாக விளக்க முனைகிற இக்குறும்படம் நாத்திகம் பேசவில்லை. ஆத்திகம் கூறும் மனிதமேம்பாட்டை விளக்குகிறது.

குறும்பட கதை

வயதான பெரியவர் ஒருவர் ஒரு இல்லத்திற்கு முன் நின்று ’பசிக்கிறது ஏதாவது உணவு இருந்தால் தாருங்கள்’ என்கிறார்.

“இன்று கடவுளுக்குச் சிறப்பான நாள். சமையலுக்குத் தயார் செய்து கொண்டு இருக்கிறேன். இப்பொழுது உணவு எதுவும் தரமுடியாது. போய்விடு” என்கிறார் இல்லத்தரசி.

சொல்லிவிட்டு அவள் மிகுந்த இறையுணர்வோடுக் கடவுளுக்குப் படைக்கப் பதார்த்தங்கள் செய்கிறாள். கடவுள் சிலைகளை ஆனந்தமாக, அபிஷேகம் செய்து பூக்களால் அலங்கரித்துக் கொண்டிருக்கிறாள்.

எதார்த்தமாக, ஜன்னல் ஓரம் போகும் பொழுது, அந்தப் பெரியவர் வீட்டு வாசலிலேயே இருப்பதைப் பார்க்கிறாள்.

மீண்டும் ஒருமுறை பார்க்கும்பொழுது, இல்லத்தின் முன்பிருந்த குப்பைகளைப் பெரியவர் பெருக்குவதைப் பார்த்துக் கோபத்துடன் அவரை அழைத்து, சிறிது உணவை அளித்துச் சாப்பிடச் சொல்லிவிட்டு மறுபடியும் பூஜைக்குச் செல்லுகிறார்.

பூஜைகளைச் சிறப்பாக முடித்து வீட்டு, வாசலில் உள்ள துளசி மாடத்தை வணங்குகிறாள். வீட்டின் முன்பு அளவுக்கு அதிகமாக இருந்த எல்லாக் குப்பைகளும் அந்தப் பெரியவரால் சுத்தமாகப் பெருக்கப்பட்டிருந்தன. அதைப் பார்க்கிறாள்.

பெருக்கி முடித்து முதுகுவலி தாங்க முடியாது நிமிரும் அந்தப் பெரியவரைப் பார்த்துக் கூனி கூசுகிறாள் அவள்.

‘சிறிது உணவு கொடுத்தமைக்கு இவ்வளவு நன்றிக் கடனா?’ என மனம் தள்ளாடி, உணர்வு மேலிடக் கடவுளுக்குப் படைத்த உணவைப் பார்க்கிறாள்.

மனம் பல விச‌யங்களை யோசிக்கிறது. ‘கொடுக்கலாமா? வேண்டாமா? தவறா? சரியா?’ எனப் பல குழப்பங்கள்.

கடைசியாக நன்றிக்கடனாக அந்தப் பெரியவருக்கு இதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் உணவை எடுத்துக் கொண்டு உதவி செய்த அந்தப் பெரியவரை நோக்கிச் செல்கிறாள்.

ஆனால், பெரியவரோ தூரத்தில் சென்று கொண்டிருக்கிறார்.

”பெரியவரே நில்லுங்கள்” என்று கத்திக்கொண்டே மனித கடவுளுக்குப் படைக்க ஓடுகிறாள்.

கடவுள் சிலை வடிவிலோ, படங்களிலோ இல்லை. மனித வடிவில் தான் உலா வருகிறார் என்பதை இந்த இடத்தில் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.

இதைப் புரியாதவர்கள் தான் சட்டகத்தின் உள்ளேயே வாழ்ந்து விடுகிறார்கள். சட்டகத்தின் வெளியேயும் அந்தந்த நிகழ்வின் சிறப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன.

குறும்பட நுணுக்கம்

பெரியவரோடு பேசும்பொழுது, வீட்டின் கதவு ஒன்று, நன்கு இறுகிப்போய் திறக்க முடியாமல் இருக்கும். அதைத் திறக்க நிறைய முறை முயற்சி செய்வாள். ஆனால் முடியாது.

பெரியவருக்குப் படையல் உணவைக் கொடுக்கலாம் என்று ஓடி வரும் பொழுது, ஒரே ஒரு முறைதான் அந்தக் கதவைத் திறப்பாள்; சட்டென்று  திறந்துவிடும்.

அதிகமாகத் தத்துவம் கூறும் ஒளி வடிவ வெளிப்பாடு இது. படைப்பாற்றல் மிக்க இயக்குனரே இதுபோல் விளக்க முடியும். ஆழம் மிக்கதான காட்சி அமைப்பு இது.

தெளிவு வரும் வரை இருள் சூழ்ந்த வீடாகவே அது இருப்பதாகவும், அதற்குள்ளேயே இறைவனைத் தேடுவதாகவும், தெளிவு வந்த பின் பிரகாசமான தூய்மையான வெளியைக் காண்பதையும் காட்சியமைப்பில் வைத்திருக்கிறார் இயக்குனர். அற்புதமான கதை சொல்லும் உத்தி இவை.

உள்மனம் காட்டும் வெளிப்பாடுகளை முகத்தில் இருவருக்கும் வரவைத்து பாதி வசனங்களை முழுங்கி இருக்கிறார் இயக்குனர். தேர்ந்தெடுத்த நடிகர்கள் இருவரும். முதியவர் அசால்ட்டாக நடித்து விட்டிருக்கிறார்.

ஒளிப்பதிவு அட்டகாசம். இருளும் ஒளியும் கேமராவில் தத்துவம் பேசுகிறன. ஜன்னலுக்கு உள்ளே உள்ள இல்லத்தரசியைக் காட்டுவது, இறைவழிபாட்டுக் காட்சிகள் இவை எல்லாம் முத்திரை பதித்த ஒளிப்பதிவுக்கு சான்றாகும். இசையும் மிக நேர்த்தியாகக் கோர்க்கப்பட்டு உள்ளது.

தத்துவார்த்தமான கதை அமைப்பில் ஒன்றை கூறிப் பிறவற்றை உணரச் செய்த பாங்கு பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

கதை தரும் பாடம்

”பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தைப் பார்க்காதே” எனும் பாடலின் ஒரு சரணத்தில்,

‘படுக்கை தூக்கத்துக்குப் படைத்தது என்று எண்ணாதே
போடாதே போடாதே புதிய சட்டம் போடாதே
காஷ்மீர் இருக்கையிலே காசியை தான் எண்ணாதே’

என்று ஒரு செய்தியைக் கவிஞர் வைரமுத்து கூறியிருப்பார். அது தான் கதை தரும் பாடம்.

பிறருக்காக வாழ்கிறேன் என்று நிம்மதி இல்லாமல் வாழாதே. பிறருக்குத் துன்பம் இல்லா வகையில் நீ வாழ்ந்து விடு.

சட்டகத்திற்குள் இருக்கலாம். ஆனால் அதுவே வாழ்க்கையாகி விடாது.

மராட்டியக் குறும்படம்

பிறமொழிக் குறும்படங்களை விட மராட்டிய மொழிக் குறும்படங்கள் தத்துவார்த்தங்கள், உளச்சிக்கல் மிக்க விஷயங்கள், மன ஓட்டங்கள் என உணர்வுகளைப் படம் பிடிப்பதில் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன.

மனம் சார்ந்த ஊடாட்டங்களைத் துல்லியமாகக் கணக்கிட்டுக் காட்சிப்படுத்துகின்றன இவை. தேசிய அளவில் அதிகக் குறும்பட விருதுகளை வென்ற மொழிப் படங்களாகவும் மராத்திய மொழிக் குறும்படங்கள் உள்ளன என்பது கவனிக்கத்தக்கதாகும்.

படக்குழு

இயக்குனர்: உமேஷ் பகடே

இசை / ஒலி: ஐஸ்வரி மால்கவே

ஆசிரியர்: சாப்ரப் பிரபுதேசாய்

ஒளிப்பதிவாளர்: அபிஷேக் ஷேட்

நடிகர்கள்: விஜய் பவார், கோமல் அபகே

A FRAME குறும்படம் குறித்துப் படக்குழு :

”இந்தப் படம் நாங்கள் உங்களுக்காகத் தீர்மானிக்கும் எல்லைகளின் தோற்றம். பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளைப் பாதுகாப்பதற்காக நாம் சட்ட எல்லைகளில் நம்மைக் கட்டுப்படுத்துகிறோம், மேலும் அந்தச் சட்டகத்தில் மட்டுமே காணப்படும் உலகத்தை நாம் பார்க்க முனைகிறோம். இது ஒரு பெண் தனக்காகக் கட்டப்பட்டச் சட்டத்தைக் காட்டும் எங்கள் முயற்சி.”

A FRAME குறும்படம் பாருங்கள்

குறும்படத்தைக் காண கீழே உள்ள காணொளியை சொடுக்கவும்.

(குறும்படம் விரியும்)

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@admin

2 Replies to “A FRAME குறும்படம் விமர்சனம்”

  1. நாட்டில் அதிக பேர், உயிரோடு இருக்கும் சக மனிதனை நேசிக்காமல், கண்ணுக்குத் தெரியாத கடவுளை தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
    நமக்கு முன்னாடி எத்தனையோ பெரிய மனிதர்கள் சொல்லி விட்டு போய்விட்டார்கள்; இன்னும் திருந்தவில்லை இந்த சமூகம்.
    சிறப்பான விமர்சனம் ஐயா!
    வாழ்த்துக்கள்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.