ஒரு ஜோடி ஷூக்கள் – சிறுகதை

காரிருளைக் கிழித்துக் கொண்டு ஹெளரா பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ஒரே சீராக சென்று கொண்டிருந்தது.

சோம்பல் முறித்து தலைநிமிர்ந்த போதுதான் அம்முதியவரைப் பார்த்தேன். எங்கள் இருவரைத் தவிர வேறு எவரும் அப்பெட்டியில் இல்லை.

அந்த முதியவருக்கு எழுவது வயது இருக்கும். பார்ப்பவர்கள் முகத்தைச் சுளிக்கும் அளவுக்கு அழுக்கு படிந்த சட்டையும், ‘தொள தொள’ பாண்ட் கசங்கிய நிலையிலும் அணிந்திருந்தார்.

சவரம் செய்யப்படாத முகத்தில் வெளியே துருத்திக் கொண்டிருந்த காவிநிறப் பற்கள் ‘முதல் வகுப்புப் பெட்டியில் இப்படி ஒரு மனிதரா?’ ஆச்சரியம் மேலிட்டாலும் எதுவும் பேசாமல் மௌனத்தைக் கடைப்பிடித்தேன்.

அம்முதியவர் தான் மௌனத்தைக் கலைத்தார்.

“எங்கே போய்க்கிட்டிருக்கீங்க?”

“பிலாஸ்பூர்” – இது நான்.

“அடடே! நான்கூட அங்கேதான் போறேன். என்ன வேலை செய்யறீங்க?”

“பிலாஸ்பூரின் தலைமை மருத்துவ அதிகாரி. அதாவது டி.எம்.ஓ.”
ஒருவித வெறுப்புடனேயே பதிலளித்தேன்.

“சந்தேகமில்லை. இது டிக்கெட் இல்லாத கேஸ்தான்.” மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

நான் எவ்வளவுக்கெவ்வளவு அந்த மனிதரைத் தவிர்க்க முயன்றேனோ அவ்வளவுக்கவ்வளவு அவர் என்னிடம் நெருங்கி வந்தார்.

“என் கதையைக் கொஞ்சம் கேளுங்கள் சார். நான் அந்தக் காலத்து கோர்ட் குமாஸ்தா.

என்னுடைய சம்பளத்தில் தான் எல்லாமே. நிறைய சம்பாதிச்சேன். என் பிள்ளைங்களை ஆசை ஆசையாய் வளர்த்தேன். தாராளமாய் பணத்தைச் செலவு செஞ்சேன்.

என் பிள்ளைங்களுக்கு அவங்க விருப்பப்படி வேண்டியதை யெல்லாம் வாங்கிக் கொடுத்தேன். இப்படி ஊதாரித்தனமாய் செலவு செஞ்சு இந்த நிலைக்கு ஆளாயிட்டேன்.

என் பிள்ளைங்க என்னைக் காப்பாத்துவாங்கன்னு நினைச்சது தப்பாப் போச்சு.”

“இப்ப என்ன ஆச்சு? உங்க பிள்ளைங்க என்னதான் சொல்றாங்க?”

“அப்படி கேளுங்க. இப்பக்கூட என் பையனைப் பார்க்கத்தான் போய்க்கிட்டிருக்கேன். பசங்க ஒருபைசாக்கூட அனுப்பாம இருந்தா எப்படிங்க?” பெருமூச்செறிந்தார்.

“உங்க பையன் என்ன செய்யறான்?”

“ரயில்வே சர்வீஸூங்க. கட்சிக்காரர் ஒருவர் சிபாரிசுல ரயில்வேயில் நுழைச்சிட்டேன்.”

“அப்புறம் ஏன் உங்க பையன் பணம் அனுப்பறதில்லை?”

“அனுப்பறான் சார். நினைச்சா அனுப்புவான் நூறு, இருநூறுன்னு. எப்படி சார் போதும்?”

“உங்களுக்கு வேறு பசங்க இல்லையா?”

“இருக்காங்க. அவங்கவங்க குடும்பத்தைத்தான் பாத்துக்கிறாங்க. வயசான காலத்துல அப்பா கஷ்டப்படறாரே, பணம் அனுப்பனுமேங்கிற அக்கறை எவனுக்குமே இல்லை.

இப்போ அவனைப் பார்த்து நேருக்கு நேரா நாலு வார்த்தைக் கேட்கத்தான் சார் போய்க்கிட்டிருக்கேன்.

அவனைச் சின்ன குழந்தையிலிருந்து சோறு போட்டு டிரஸ் எடுத்துக் கொடுத்து ஆளாக்கினதுக்கெல்லாம் நீ செய்யற கைமாறு இதுதானாடான்னு கேட்கத்தான் போய்க்கிட்டிக்கேன் சார்”

“இவ்வளவு தூரம் போறீங்களே? டிரெயின் டிக்கெட் சார்ஜ்…?”

“நான் டிக்கெட் வாங்கிக்கிட்டுப் போறேன்னா நினைச்சுக்கிட்டீங்க. என்னோட லைஃப்ல டிக்கெட் வாங்கிக்கிட்டு டிரெயின்ல போறேன்ங்கிற வழக்கமே கிடையாது. நான் ஒருத்தன் ஏறிட்டதுனால டீஸல் என்ன எக்ஸ்ட்ராவா போடறாங்களா என்ன?” என்று கூறி பலமாகச் சிரித்தார்.

அவரின் சிரிப்பு எனக்குள் வெறுப்பை ஏற்படுத்தியது.

‘இந்த வயசுல ஏமாற்றுப் புத்தி வேறயா? அடுத்த ஸ்டேஷனில் டிடி-யிடம் விவரத்தைச் சொல்லி இந்த கிழத்தை ஒப்படைத்துவிடவேண்டும்.’ என் மனம் சொல்லிக் கொண்டது.

மறுவிநானடியே மீண்டும் இரக்கம் ஏற்பட்டது.

‘பாவம்! பிள்ளைகளை அருமை பெருமையாக வளர்த்து ஆளாக்கியும் வயசுக் காலத்தில் அவர்களால் எவ்வித உபயோகமும் இல்லை. ரொம்பவும் தான் அலட்சியப்படுத்துகிறார்கள். கேவலம் ஓர் அம்பது ரூபாயை அவர்களால் பெற்றவனுக்குச் சேர்த்து அனுப்ப முடியவில்லை.’

“திடீர்னு டிடிஇ வந்துட்டார்னா உங்க பாடு திண்டாட்டமா ஆயிடுமே டிக்கெட் வாங்கவில்லைன்னு தெரிஞ்சா கீழே இறக்கி விட்டுடுவாங்களே?” என்றேன்.

“இறக்கி விட்டால் என்ன? அடுத்த டிரெயின்ல ஏறிப்போவேன்”

“டிரெயினிலிருந்து இறக்கிவிடாமல் உங்ககிட்ட இருக்கிற பணத்தை டிக்கெட்டுக்காகப் பிடிடுங்கிட்டா என்ன செய்வீங்க?”

“பணமா? என்னிடமா? எங்கிட்ட ஏது சார் பணம்? நான் பணமெல்லாம் கையில வச்சுக்கிற பழக்கமில்லே. என் உடம்பில் இருக்கிற டிரெஸ்ல எங்கே தேடினாலும் ஒருபைசாகூட கிடைக்காது.”

“சாப்பாட்டுக்கு என்ன செய்யப் போறீங்க?”

“எங்கிட்ட இருக்கு சார். இங்கே பாருங்க கையிலயே கொண்டாந்துருக்கேன்.”

என்னுடைய உடைமைகளை அப்பெரியவரைப் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு டின்னரை முடிக்க டைனிங் கார் சென்றேன்.

நான் சாப்பாட்டை முடித்துக் கொண்டு என் இருக்கைக்குத் திரும்பியபோது அப்பெரியவர் உணவை வாயில் வைத்துக் கொண்டே,

“சாப்பிட்டாச்சா?” என்றார்.

“ம்…”

“சாப்பாடு என்ன விலை?”

“இருபது ரூபாய்”

“இருபது ரூபாயா?” மலைத்தவாறே மேற்கொண்டு ஏதோ சொல்ல வாயெடுத்தவரிடம்,

“சரி நேரமாச்சு படுக்கலாம்” என்றதும் அந்த மனிதர் மேல் பர்த்துக்குத் தாவினார்.

அவரிடம் படுக்கையோ, சூட்கேஸோ எதுவுமில்லை. கையிலிருந்த ஒருதுணிப்பை மூட்டையைத் தலைக்கு வைத்து ஷூவைக்கூட கழற்றாமல் அப்படியே பர்த்தில் படுத்துக் கொண்டார்.

“ஷூவைக் கழற்றலையே?”

“நோ நோ நான் எப்போதும் ஷூவைக் கழற்றுவதில்லை. தவிரவும் போன வாரம்தான் கஷ்டப்பட்டு சேர்த்து வச்சிருந்த பணத்துல இந்த ஷூக்களை வாங்கினேன்.”

அப்போதுதான் அவரது ஷூக்களைக் கவனித்தேன். டிரெயின் டிக்கட் வாங்கப் பணமில்லை. இந்த ஆளின் கால்களை புத்தம்புது ஷூக்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. அவரை நோக்கி வியப்புடன்,

“ஷூக்கள் அணிவது ரொம்பப் பிடிக்குமா?”

“ஆமாம் சார். சாப்பிட வழியில்லாட்டாலும் எனக்கு ஷூக்கள் அவசியம் வேண்டும். அதுவும் நல்ல ஷூக்களாக அணிய வேண்டும்.”

மேற்கொண்டும் பேச்சை வளர்த்தாமல் விளக்குகளை அணைத்துவிட்டு இருவருமே உறங்க ஆயத்தமானோம்.

திடீரென வண்டி குலுங்கலுடன் நின்றதும் விழிப்பு வந்து லைட்டைப் போட்டேன். அந்த ஆள் தூங்காமல் ‘கொட்ட கொட்ட’ விழித்துக் கொண்டு பர்த்தில் உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து

“என்ன தூங்கலையா?” என்றேன்.

என் கேள்வியைச் சிறிதும் லட்சியம் செய்யாமல், “அடுத்த ஸ்டேஷன் பிலாஸ்பூர் தானே?” என்று கேட்டார்.

பிலாஸ்பூர் நெருங்கிவிட்டதை உணர்ந்த நான் பெட்டி படுக்கைகளை சரி செய்து இறங்க ஆயத்தமானேன்.

இப்போது அந்த ஆள் முகத்தில் ஒருவித கலவரமும் கவலையும் படர ஆரம்பித்தது.

“பிலாஸ்பூர்ல டிடிஇ-ங்க இருப்பாங்களா?” எனக் கேட்டார்.

“கண்டிப்பா இருப்பாங்க. நீங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்” என்றேன்.

“வண்டி ஸ்டேஷனில் நுழைந்து நிற்பதற்கு முன்பே இறங்கிக் கொள்கிறேன்” என்று கூறிக்கொண்டே கதவுகளைத் திறந்து வைத்து குதிக்க ஆயத்தமானார்.

வண்டி ஸ்டேஷனுக்குள் நுழைந்து மெதுவாக நிற்கும் சமயம் அப்பெரியவர் கீழே குதித்துவிட்டார்.

குதித்தது தான் தாமதம் பலத்த சப்தத்துடன் கூடிய அலறல் அவரிடமிருந்து வெளிப்பட்டது.

மனிதரின் கால்கள் பிளாட்பாரத்திற்கும், தண்டவாளத்திற்கும் இடையே எசகுபிசகாகச் சிக்கிக் கொள்ள கீழே விழுந்து வலி பொறுக்க முடியாமல் கத்தினார்.

நிமிஷத்திற்குள் பிளாட்பாரத்தில் அவரைச் சுற்றி ஒரே கும்பல். டிரெயின் நின்றது.

எல்லோருமாகச் சேர்ந்து கீழே விழுந்திருந்த அவரை மிகவும் கஷ்டப்பட்டு வெளியே இழுத்து பிளாட்பாரம் மேலே கொண்டு வந்தோம்.

எல்லோருமாகச் சேர்ந்து இழுத்ததில் தண்டவாளத்தில் சிக்கியிருந்த அவரது கால்கள் இரண்டும் வெட்டப்பட்ட நிலையில் ரத்தம் சொட்ட சொட்ட தொங்கிக் கொண்டிருந்தன.

“என் கால்கள் என் கால்கள்” எனப் பெரியவர் அலறினார்.

எங்கள் பேச்சுக்கிடையே அவரது மகனைப் பற்றிய விவரங்களை அவர் சொல்லியிருந்ததால், அவனுக்கு தகவல் தெரிவித்துவிட்டுப் பெரியவரை மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தேன்.

அடுத்த நாள் பெரியவர் கண் விழித்தார்.

கால்கள் அகற்றப்பட்டு, பாண்டேஜ் போடப்பட்டிருந்ததைப் பார்த்ததும், “என் கால்கள் எங்கே டாக்டர்?” எனக் கதற ஆரம்பித்து விட்டார்.

“கவலைப்படாதீங்க, நீங்கள் பிழைத்ததே அபூர்வம்” என்றேன்.

பெரியவர் மீண்டும் பிடிவாதமாக “என் கால்கள் எங்கே?” எனக் கத்த ஆரம்பித்ததும்,

“அகற்றப்பட்டக் கால்களை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்? நல்ல மரக்கால்கள் பொருத்த ஏற்பாடு செய்திருக்கிறேன்.”

“கால்கள் போகட்டும். என் ஷூக்கள் என்னவாயிற்று டாக்டர்?”

கால்களுடன் ஷூக்களையும் எரித்து விட்டதைக் கூறினேன். அவ்வளவுதான்.

“என்ன டாக்டர் சொல்றீங்க? ஷூக்களை எரிச்சுட்டாங்களா? அதுல பணம் வச்சிருந்தேனே” என்றார் அதிர்ச்சியுடன்.

“என்னது? ஷூக்கள் உள்ளே பணமா?”

“ஆமாம் டாக்டர்! உள்ளே பணம் வைக்கிறாற் போல் ஸ்பெஷலாக ஆர்டர் செய்து அந்த ஷூக்களைச் செய்திருந்தேன்.”

“எவ்வளவு பணம் வச்சிருந்தீங்க?”

“இரண்டு லட்சம் டாக்டர்” என்று சொல்லிக் கொண்டே மயங்கிச் சாய்ந்தார் பெரியவர்.

மயக்கம் தெளிய ஊசி மருந்து செலுத்தினேன். பலன் இல்லை.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.