அட்ட வீரட்டம் – சிவனின் வீரத் திருவிளையாடல்கள்

அட்ட வீரட்டம் தலங்கள் என்பவை சிவபெருமானின் வீரத்திருவிளையாடல்கள் நடைபெற்ற எட்டு இடங்களாகும். இவை அட்ட வீரட்டான கோயில்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை ஈசன் தனது வீரச்செயல்களை நிகழ்த்தி மக்களுக்கு அருள் புரிந்த இடங்களாகும்.

அட்ட வீரட்டம் தலங்களில் பிரம்மன், அந்தகாசுரன், திரிபுர அரக்கர்கள், தட்சன், ஜலந்தரன், கஜமுகாசுரன், மன்மதன், காலன் எனப்படும் எமதர்ம ராஜன் ஆகியோர்களின் செருக்கை அழித்து அவர்களை இறைவன் ஆட்கொண்டதாகக் கருதப்படுகிறது.

அட்ட வீரத் தலங்களாவன

1. பிரமசிரக்கண்டீஸ்வரர் ஆலயம், திருகண்டியூர் – பிரம்மன் தலையைக் கொய்த இடம்

2. வீராட்டேஸ்வரர் ஆலயம், திருக்கோவிலூர் – அந்தகாசுரனை வதைத்த இடம்

3. வீராட்டானேசுவரர் ஆலயம், திருவதிகை – திரிபுரத்தை அழித்த இடம்

4. கீழப்பரசலூர் வீராட்டேஸ்வரர் ஆலயம், திருப்பறியலூர் – தட்சனின் தலையை துண்டித்த இடம்

5. வீராட்டானேசுவரர் ஆலயம், திருவிற்குடி – ஜலந்தரனை வதம் செய்த இடம்

6. வழுவூர் வீராட்டானேசுவரர் ஆலயம், திருவழுவூர் – கஜமுகாசுரனை அழித்த இடம்

7. கொருக்கை வீராட்டேஸ்வரர் ஆலயம், திருக்குறுக்கை – மன்மதனை எரித்த இடம்

8. அமிர்தக்கடேஸ்வரர் ஆலயம், திருக்கடையூர் – காலனை உதைத்த இடம்

 

பிரமசிரக்கண்டீஸ்வரர் ஆலயம், திருகண்டியூர்

இவ்விடம் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டத்தில் தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் வழியில் திருவையாற்றிற்கு இரண்டு கிமீ தொலைவிற்கு முன்னதாக உள்ளது. இத்தலம் காவிரியின் தென் கரையில் அமைந்துள்ளது.

ஐந்து தலை கொண்டு படைப்புத் தொழிலைச் செய்து வரும் நானே உயர்ந்தவன் என்ற கர்வதால் செருக்கு கொண்டிருந்த பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்து பிரம்மாவின் செருக்கினை இறைவன் இத்தலத்தில் அடக்கி பிரம்மாவை நான்முகனாக்கி அருள்புரிந்தார்.

இங்கு மங்கள நாயகி என்ற திருப்பெயரில் அம்மை அருள்பாலிக்கிறாள். இவ்விறைவனை வழிபட பிரம்மஹத்தி தோசம் நீங்குவதாக்கக் கருதப்படுகிறது.

 

வீராட்டேஸ்வரர் ஆலயம், திருக்கோவிலூர்

இவ்விடம் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

இறைவனிடமிருந்து பெற்ற வரத்தால் ஆணவம் மிகுந்து உலக உயிர்களை துன்புறுத்தி வந்த அந்தகாசுரன் என்னும் அசுரனை இறைவன் இவ்விடத்தில் வதைத்து அவனுக்கு அருள் புரிந்தாதக் கருதப்படுகிறது.

அந்தாசுரனை இறைவன் வதைத்த வடிவம் உடல் எங்கும் திருநீறு பூசிய கங்காளர் என்பதாகும். அப்பர், சம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற சிவதலம். இவ்விடத்தில் அம்மை சிவானந்த வல்லி என்னும் பெயரில் அருள்புரிகிறாள்.

 

வீராட்டானேசுவரர் ஆலயம், திருவதிகை

இவ்விடம் கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டியிலிருந்து இரண்டு கிமீ தொலைவில் அமைந்தள்ளது. இத்தலம் கெடிலை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் அரக்க சகோரர்கள் இறைவனிடமிருந்து தங்கம், வெள்ளி, இரும்பு கோட்டைகளை பெற்ற ஆணவத்தால் உலக உயிர்களை துன்புறுத்தி வந்தனர்.

அவர்களை இறைவன் கடவுளர்களை தேர் மற்றும் வில்அம்புகளாக்கி அழிக்க எண்ணும்போது மற்ற கடவுள்கள் தங்களால்தான் முப்புரங்கள் எரியப் போகின்றன என்ற கர்வம் கொள்ளும்போது இறைவன் சிரித்தே அந்நகரங்களை அழித்து தேவர் மற்றும் அசுரர்களின் ஆணவத்தை அடங்கி அருள் புரிந்த இடம்.

இறைவன் அப்பரின் சூலைநோயை நீக்கி சிவனடியாராக்கியதும், சம்பந்தருக்கு தனது திருநடனத்தை இறைவன் காட்டியதும் இத்தலத்தில்தான். இங்கு அம்மை பெரிய நாயகி அல்லது திரிபுரசுந்தரி என்ற பெயரில் அருள்புரிகிறாள்.

 

கீழப்பரசலூர் வீராட்டேஸ்வரர் ஆலயம், திருப்பறியலூர்

இவ்விடம் நாகபட்டிணம் மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து திருகடுவூர் செல்லும்வழியில் செம்பனார் கோவிலிருந்து இரண்டு கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இத்தலம் காவிரியின் தென்கரையில் அமைந்து தற்போது பரசலூர் என்றழைக்கப்படுகிறது.

முழுமுதற்கடவுளான சிவனை மாப்பிளையாக பெற்றதால் தானே பெரியவன் என்ற மமதையில் சிவனை அழையாது செய்த யாகத்திற்கு தட்டிக் கேட்டச் சென்ற தாட்சாயிணியை அவமதித்து அவளின் அழிவுக்கு காரணமான தட்சனின் தலையைக் கொய்து அருள் புரிந்த இடம். இவ்விடம் தட்சபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

இத்தலத்தில் அம்மை இளங்கொம்பனையாள் அல்லது இளங்கொடியம்மை என்றழைக்கப்படுகிறாள்.

 

வீராட்டானேசுவரர் ஆலயம், திருவிற்குடி

இவ்விடம் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் நன்னிலத்திற்கு அடுத்த ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ளது. இத்தலம் காவிரியின் தென்கரையில் அமைந்தள்ளது.

உலக மக்களுக்கு கொடுமை செய்து வந்த சலந்தரன் என்னும் அரக்கனை வதம் செய்து ஆணவத்தை அடக்கிய இடம். சிவன் தன் திருவடியால் நிலத்தில் ஒரு வட்டத்தை வரைந்து அதனை பிளந்து எடுக்குமாறு அரக்கனிடம்கூற அவன் அதனை எடுத்து தலையில் வைத்து இருகூறுகளானான். இவ்விடத்தில் அம்மை ஏலவார்குழலி என்னும் பெயரில் அருளுகிறாள்.

 

வழுவூர் வீராட்டானேசுவரர் ஆலயம், திருவழுவூர்

இவ்விடம் நாகபட்டிணம் மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் வழுவூரில் அமைந்தள்ளது. பிரளயகாலத்தில் அழியாதிருந்து இவ்வூர் வழுவூர் என்ற பெயர் பெற்றது.

தாருகாவனத்து முனிவர்கள் நடத்திய யாகத்திலிருந்து உருவான கஜமுகாசுரன் என்ற அரக்கனின் ஆணவத்தை அடக்கி தோலை உரித்து போர்வையாக அணிந்த தலம்.

மாசி மகத்தில் நடைபெறும் கஜசம்கார நடனம் விசேசமானது. இவ்விடத்தில் அம்மை பாலகுஜாம்பாள் என்ற திருநாமத்தில் அருளுகிறாள்.

 

கொருக்கை வீராட்டேஸ்வரர் ஆலயம், திருக்குறுக்கை

இவ்விடம் நாகபட்டிணம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு செல்லும் வழியில் நீடுரை அடுத்த கொண்டால் என்ற இடத்திலிருந்து மூன்று கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இத்தலம் காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது.

தவத்தலிருந்த சிவன்மீது மலர்கணை எய்த காமனை எரித்த தலம். திருமால், பிரம்மா, திருமகள் வழிபட்ட இடம். அம்மை இவ்விடத்தில் ஞானாம்பிகை என்ற பெயரில் அருள்புரிகிறாள்.

 

அமிர்தக்கடேஸ்வரர் ஆலயம், திருக்கடையூர்

இவ்விடம் மயிலாடுதுறையிலிருந்த தரங்கம்பாடி செல்லும்வழியில் அமைந்துள்ளது. இவ்விடம் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ளது.

சிவனின்மீது அதீத பக்தி கொண்ட மார்க்கண்டேயன் எமதர்மனிடமிருந்து தன்னைக் காத்தருளும்படி சிவலிங்கத்தை கட்டி அணைத்து இறைவனை அழைத்தபோது, ஆணவம் கொண்ட எமதர்மன் பாசகயிற்றை சிறுவனுடன் சிவலிங்கத்தின்மீதும் சேர்த்துவீசி இழுக்கும்போது தன் பக்தனைக் காக்கும்பொருட்டும், எமனின் ஆணவத்தை அடக்கும் பொருட்டும் எமனை காலால் இறைவன் உதைத்த தலம். அம்மை அபிராமி என்ற திருநாமத்துடன் அருளுகிறாள்.
அட்ட வீரட்டம் புரிந்து ஆணவம் அழித்த ஆண்டவனைப் போற்றி வணங்குவோம்.

– வ.முனீஸ்வரன்

 

2 Replies to “அட்ட வீரட்டம் – சிவனின் வீரத் திருவிளையாடல்கள்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: