அன்புக்குரியவளுக்கு – கதை

விடலைப் பருவத்தில் இருந்த இரண்டு அபலை மனங்களை ஒன்றிணைத்து மணம் முடித்தது காலம்.

இரண்டு இளம் உள்ளங்கள் பரிமாறிக் கொள்ளும் பாசைக்கு மொழிகள் தேவைப்படவில்லை.

ஊர் கூடி ஒன்றிணைத்து வைத்த இரு உள்ளங்கள் பரிமாறிக் கொண்ட பாசையில் கரு உருமாற்றம் பெற, உட்கொள்ளும் ஆகாரம் ஒவ்வாமையை தர, வாயில் உமிழ்நீர் சுரக்க, வயிற்றில் தவறி சென்ற பருக்ககைகள் வெளியே வர காத்திருக்க, குமட்டிய வாயை துடைத்துக் கொண்டு வந்தவளின் கண்ணில் பட்டது உரியில் இருந்த அடகாய் மாங்காய்.

ஒரு கடி கடித்து வாயில் அடக்கிக் கொண்டு வந்து கட்டிலில் சுருண்டு படுத்துக் கொண்டவளின் வயிற்றில் கருக்களின் பரிமாற்றத்தினால் நான் உருப் பெற்று
அவளின் இதயத் துடிப்பை தாலாட்டாய் உணர்ந்த வேளையில் என் அருகில் இருந்த தங்கை அழகு குரலில் சினுங்கினாள்.

“அண்ணா, உனக்கு வாழ்நாள் ஆரம்பித்து விட்டது. நானும் வரேன்னா என்னையும் கையைப் பிடித்து அழைத்துச் செல்லண்ணா..”

“கொஞ்சம் பொறு தங்கமே, நான் செல்லும் பாதை கடினமானது.
செல்லமே, இது ஒரு வழி பாதை. இந்த உலகம் ஆபத்துக்கள் நிறைந்தது தங்கச்சிமிழே”

“ம். ம்.ம் அண்ணா… எனக்கு எந்த ஒரு ஆபத்தும் நேராமல்
என்னை பாதுகாத்துக் கொண்டிருந்த அண்ணனா இப்படி சொல்வது? உன் அரவணைப்பில் உன் நிழலில் என்னை காத்தருள் புரிந்த நீ புது உலகிற்கு தனியாக பயணிக்க நினைத்து விட்டாயோ?”

“என் செப்பு சிலையே, தங்க மணியே, ரத்த உறவே என் தங்கை அடம் பிடிப்பவள் தான். ஆனால் அமைதிக்கு பெயர் போனவள் அல்லவா?

என் தாயின் வடிவை உன் முகத்தில் தானே கண்டேன். உன்னை விட்டு பிரிவது என்பது ஒருபோதும் இயலாது. கொஞ்சம் பொறு. நான் முன்னே சென்று இந்த உலகில் ஏற்படும் இடர்பாடுகளை களைந்து சமாளிக்கும் யுத்திகளை கைகொண்டு உன்னை வரவேற்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பேன்.

உனக்கு அடுத்தாற்போல் தம்பி காத்திருக்கிறான். அவன் சாண் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை. அவன் இருக்கும் நம்பிக்கையில் தான் உன்னை அவன் பொறுப்பில் விட்டுச் செல்கிறேன்.

நீ அவனிடத்தில் அன்பாக பழகு. என் மேல் உள்ள பாசத்தினால் அவனை கடிந்து கொள்ளாதே. தம்பி உடையான் தலைக்கு அஞ்சான் என்பார்கள். அந்த தைரியத்தில் நான் செல்கிறேன்

இப்பொழுது உன்னை விட்டு பிரியும் நான், வரும் உலகில் உன் கையை ஒருபோதும் விட்டு பிரிய மாட்டேன். உறவே, இந்த பத்து மாத பிரிவு ஒரு தற்கால பிரிவுதான்.

இதை நாம் மன தைரியத்துடன் வரும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வாழ பழகிக் கொள். இந்த இடைப்பட்ட பத்து மாத காலமும் பயிற்சி காலமாக நினைத்துக் கொள். நான் புறப்படுகிறேன். தம்பி நான் வரட்டுமா?” என்று நீந்த,
பொன் சிரிப்புடன் வழி அனுப்பி வைத்தான்.

நீந்திய நான் கருவறையை விட்டு வெளியே வர குளிர்ந்த காற்று என் சருமத்தில் பட்டு ஒரு வித எரிச்சலை தர, கண்மூடி இருந்த நான் கண்ணை மெல்ல திறக்க என் தாயின் முகத்தைப் பார்த்தேன். அவள் மடியில் தவழ்ந்தேன்.

என் தாய் நான் வளர தவம் இருந்தாள். அன்று அவளுக்கு பிடித்த மாங்காய் இன்று எனக்கு மாந்தமாகி போனது. பத்தியம் இருந்தவளின் பால் சுவைத்து நான் வளர என் குரலை கேட்டு களிப்பில் ஆழ்ந்திருப்பாள் என் தங்கை.

நான் என் தங்கையின் வரவை நோக்கி காத்திருந்தேன். காலத்தின் இந்த கட்டாய ரசாயன மாற்றத்தினால் உட்கொண்ட உணவிலும் மாற்றம் இயற்கையின் மாற்றத்தில் நாம் மட்டும் என்ன விதிவிலக்கா?

கருவில் என் தங்கைக்கு முன் என் தம்பியே வலுப்பெற்றான்.
ஆவலுடன் காத்திருந்த என் தங்கைக்கு தான் எத்தனை இழப்புகள்.

இழப்புகளை தான் தாங்கிக் கொள்ளும் அவள் மனம் அடுத்த பத்து மாதத்தில் தம்பியின் வரவை கண்டு அவனிடம் தங்கையின் நலம் விசாரிக்க, அவள் உன்னை பார்க்கும் ஆர்வத்தில் எப்போதும் உன் நினைவுகளோடும் தவிப்போடும் இருக்கிறாள் என்றான்.

இந்நிலையில் யாரோ ஒருவர் சொன்னார்.

“போதும் இத்துடன் நிறுத்திக் கொள். அவள் உடம்பு இனி ஒரு குழந்தையை தாங்காது.’

என் தந்தை ஒத்துக்கொள்ள தாயும் அரை மனதுடன் சம்மதித்தாள்.

அதிர்ச்சியில் உறைந்த என்னால் என்ன செய்து விட முடியும்? என் தங்கையின் வாழ்க்கை கனவு கனவாகவே மாறிவிட்டதே!

கருவில் ஒரே கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த எங்களை காலம் இப்படி பிரித்து விட எண்ணியதும் ஏனோ? என் ரத்தத்தின் ரத்தம் தங்கத்தின் தங்கம் வைரத்தின் ஒளி, கருவில் கரைந்து விட்ட உன்னை இனி நான் காண்பது எப்போதோ?

மறுபிறவி என்று ஏதேனும் இருந்தால் அதில் முன்னே உன்னை வழி அனுப்பி வைத்து உன் நிழலென நான் பின் தொடர்வேன் உன் பாதுகாப்பாய்.

இப்படிக்கு
உன் அண்ணன்

திட்டச்சேரி மாஸ்டர் பாபு