இன்றைய நாளில் அன்பு என்றால் கிலோ என்ன விலை? என கேட்கும் அளவிற்கு நிலைமை மோசாக உள்ளது. அன்பாக நடந்து கொள்வது எல்லாம் கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டது.
கிண்டலாக பேசுவது, பொடி வைத்து பேசுவது, குத்தலாக குதர்க்கமாக பேசுவது, எடுத்தெறிந்து பேசுவது, எகத்தாளமாக பேசுவது, ஏளனமாக பேசுவது, ஏட்டிக்கு போட்டியாக பேசுவது என பல்வேறு விதங்களில் இன்று மக்கள் பேசுகிறார்கள்.
அன்பு என்கிற வார்த்தையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே முற்றிலுமாக மறந்து விட்டார்கள்.
அன்பாக இருக்கத் தடை என்ன?
கடைசி மூச்சு இருக்கும் வரை மற்றவர்களிடத்தில் அன்பாக இருக்க முயன்றும், தற்போதைய சூழ்நிலையில் அது இயலாத ஒன்றாக இருக்கக் காரணம் என்ன?
அதிநவீனமாக சென்று கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டில், தற்பொழுது அனைவரும் ஆயிரமாயிரம் உணர்ச்சி கொந்தளிப்புடனும் மனஅழுத்தத்துடனும் வாழ வேண்டிய ஓர் கட்டாய சூழ்நிலை உருவாகி உள்ளது.
பிறர் நடந்து கொள்ளும் விதத்தை முறையாக புரிந்து கொள்ள முடியாத தன்மையும் அவற்றை அங்கீகரிக்க முடியாத தன்மையும் ஏற்படுகிறது.
மற்றவர்களிடம் அன்பை காட்ட முடியாத பொழுது மனித நேயம் குறைகிறது. தவறாகப் புரிந்து கொண்டு அவர் மேல் அன்பு செலுத்த முடியாமல் தடைகள் உண்டாகிறது.
அது போல ஒருவருக்கு செய்யும் உதவிக்கு பிரதிபலன் எதிர்பார்ப்பதில் அர்த்தம் இல்லை.
மனித பிறவிக்கு ஆறாவது அறிவான பகுத்தறிவை இறைவன் கொடுத்திருக்கிறான். ஆகவே மனித பிறவி மற்றவர்களின் மீது அன்பையும் கருணையையும் நேசத்தையும் பாசத்தையும் செலுத்துவது தானே நியாயம்.
அப்பேற்பட்ட ஒரு நிலையிலிருந்து தவறுகிற பொழுது அன்பிற்கு தடைகள் ஏற்படுகின்றன. ஆகவே அன்பாக இருக்க பழகிக் கொள்வது நல்லது.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998