அனுபவச் சுவடுகள்
ஆயிரமாய் அப்பாவின்
மனதில்…
அந்தச் சுவடுகளை
அவர் அசைவுகளின் நிழல்கள் கூட
வெளிப்படுத்தியதில்லை
எப்போதும்…
காயங்கள் கசிவுகள் வலிகளென
நிரம்பி எழுப்பும் அலைகளை
விழிகளின் கரைகளிலும்
ஈரம் காட்டாத அப்பா
அதிசயக் குளம்…
புனைவுகளில்லா புன்னகையால் பின்னி நெய்துவிட்ட
அன்பின் சால்வையைப் போர்த்தி
அணைத்துக் கொள்வதில் ஆண் தாய்…
ஓய்வெடுக்க
சாய்வு நாற்காலில் அமர்ந்து
பொழுதுகளின் கண்கள் பார்த்ததாகத் தெரியவில்லை…
அப்பா
கடைசியாக அமர்ந்து
எழாமல் சாய்ந்தது அன்றுதான்…
பின் எழவே இல்லை
அன்றுமுதல் அப்பா சாய்ந்த நாற்காலி
பூசை அறையில்…
நாளும் கிழமையும்
அப்பா படத்தில் கீழிருக்கும் நாற்காலியை ஆட்டிவிட்டு
வணங்கி போவது வழக்கமாகிவிட்டது
நாற்காலியில் அப்பா அமர்ந்திருப்பதாகக் கருதிய
மனம்….
கா.அமீர்ஜான்
திருநின்றவூர்
7904072432
நினைவுகளை மீட்டும் நாதம். மின்னலெனப் பழமை ஊடாடுகிறது.