அப்பூதி அடிகள் – அப்பரை குருவாகக் கொண்டு சிவபதம் பெற்றவர்

அப்பூதி அடிகள் அப்பரை மனதால் குருவாகக் கொண்டு சிவபதத்தைப் பெற்றவர்.

இறைவனின் அன்பரும் இறையடியாரின் அன்பரும் சமமே என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர்.

அறுபத்து மூன்று நாயன்மார்களுள் அப்பூதி அடிகள் இருபத்தைந்தாவது நாயன்மாராகப் போற்றப்படுகிறார். அப்பரும் அப்பூதி அடிகளும் சம காலத்தவர்கள்.

(அப்பர் என்பது திருநாவுக்கரசு நாயனாரின் இன்னொரு பெயராகும்.)

அப்பூதி அடிகள் சோழ நாட்டில் திங்களுரில் வாழ்ந்து வந்தார். திங்களுர் நவகிரக தலங்களில் சந்திரனின் தலமாகப் போற்றப்படுகிறது.

இவ்விடத்தில் இருக்கும் சிவனாரை வேண்டியே, நாவுக்கரசர் பாம்பு கடித்து உயிர் துறந்த சிறுவனை உயிர்ப்பித்து எழச் செய்தார்.

அப்பூதி அடிகள் தொண்டு

அந்தணரான அப்பூதி அடிகள் சிவனாரின் மீதும், அவர் தம் அடியவர்களின் மீதும் பேரன்பு கொண்டிருந்தார். ஆதலால் சிவனடியார்களை வரவேற்று உபசரித்து அவர்கள் வேண்டுபவைகளை முகம் கோணாது செய்து வந்தார்.

அப்போது ஒரு சமயம் சமணத்தின் பால் பற்று கொண்டு, அச்சமயத்திற்கு மாறிய திருநாவுக்கரசருக்கு ஏற்பட்ட சூலை நோயைப் போக்கிய சிவனாரின் திருவருளையும், அப்பர் அவர் மீண்டும் சைவராகியதையும் கேட்டறிந்தார்.

மேலும் சமணர்களும் அந்நாட்டு மன்னனும் சைவராக மாறியதால், அப்பருக்கு இழைந்த தீமைகளையும் அத்தீமைகளை அவர் சிவனருளால் வென்றதையும் கேட்டு மெய்சிலிர்த்தார்.

இறையருள் கிட்டடியபோதும் திருநாவுக்கரசர் மிகவும் எளிமையாக, உழவாரப்பணி செய்து கொண்டு திருத்தலயாத்திரை மேற்கொண்டு வருவதையும் அறிந்து கொண்டார்.

ஆதலால் அப்பூதியார் அப்பரை நேரில் காணாமலே, தன்னுடைய மனதால் மானசீகமாக குருவாக ஏற்றுக் கொண்டார்.

அதுமுதல் தன்னுடைய வீட்டில் உள்ள செல்வங்களான ஆடுகள், மாடுகள், நெற்களஞ்சியங்கள் ஆகியவற்றை அப்பரின் பெயராலேயே அழைத்தார். தன்னுடைய குழந்தைகளுக்கும் மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு எனப் பெயரிட்டார்.

தான் அமைத்த திருமடங்கள், தண்ணீர் பந்தல்கள், சோலைகள், சாலைகள், குளங்கள் ஆகியவற்றிற்கும் திருநாவுக்கரசு பெயரினையே வைத்தார்.

இவ்வாறு தான் குருவாகக் கருதிய திருநாவுக்கரசரின் பெயரிலேயே அடியர்களுக்கும் மக்களுக்கும் திருத்தொண்டுகள் பல புரிந்து வந்தார்.

அப்பூதி அடிகளைப் போலவே அவருடைய மனைவியாரும் பிள்ளைகளும் அப்பரின் மேல் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர்.

அப்பர் அப்பூதி அடிகள் சந்திப்பு

ஒருநாள் திருநாவுக்கரசு நாயனார் பல தலங்களையும் வழிபட்டுவிட்டு திருப்பழனத்தை தரிசிக்கச் சென்று கொண்டிருந்தார்.

செல்லும் வழியில் திங்களுரில் வழிப்போக்கர்கள் கூட்டமாக தண்ணீர்ப் பந்தலில் நின்று கொண்டிருந்தனர்.

நாவுக்கரசரும் தண்ணீர் குடிக்க வேண்டி அத்தண்ணீர்ப் பந்தலை அணுகினார். அப்பந்தலில் மணலை நிரப்பி தண்ணீரைத் தெளிந்து வைத்திருந்ததோடு அருந்துவதற்கு சுவையான குடிநீரும் இருந்தது.

வெயிலில் வருவோர் சுவையான குடிநீரினை அருந்தியதோடு அப்பந்தலின் குளிர்ச்சியால் சிறிது நேரம் இளைப்பாறியும் சென்றனர். ஆதலால்தான் அப்பந்தலில் கூட்டம் நிரம்பி வழிகிறது என்பதை அப்பர் அறிந்து கொண்டார்.

அப்பந்தலில் தண்ணீர் அருந்திய அப்பர் ‘திருநாவுக்கரசு தண்ணீர் பந்தல்’ என்று பெயரிட்டு இருப்பதைக் கண்டு ஆச்சர்யமுற்றார். அங்கிருந்தோர்களிடம் இப்பந்தலை யார் நடத்தி வருகிறார்கள்? என்று கேட்டார்.

அவர்கள் அதற்கு “இவ்வூரில் உள்ள அப்பூதி அடிகள் என்பவர் சிவனடியார்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் பயன்படும்படி திருநாவுக்கரசர் தண்ணீர் பந்தலை அமைத்திருக்கிறார். இதுமட்டுமின்றி தான் அமைத்த சாலைகள், சோலைகள், குளங்கள், திருமடங்கள் ஆகியவற்றிற்கும் திருநாவுக்கரசு பெயரினையே வைத்திருக்கிறார்.” என்றனர்.

இறையடியார்களுக்கு தொண்டு செய்யும் அப்பூதி அடிகள் ஏன் திருநாவுக்கரசர் என்ற பெயரில் செய்து கொண்டிருக்கிறார்? என்று எண்ணிய அப்பருக்கு அப்பூதி அடிகளைக் காணும் ஆர்வம் உண்டானது.

அதனை அங்கிருந்தோரிடம் தெரிவிக்கவே அவர்கள் அப்பரை அப்பூதி அடிகளின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

தம் இல்லத்திற்கு சிவனடியார் ஒருவர் வந்திருக்கிறார் என்பதை அறிந்ததும் அப்பூதி அடியகள் விரைந்து வந்து அப்பரை வரவேற்றார்.

“தாங்கள் என் இல்லத்துக்கு எழுந்தருளியதற்கு நான் என்ன தவம் செய்தேனோ? இச்சிறியேனால் தங்களுக்கு ஆவது ஏதேனும் உண்டோ?” என்று கேட்டார் அப்பூதியார்.

அப்பர் பெருமான் “நான் திருப்பழனத்தில் இருக்கும் இறைவனாரைத் தரிசிக்க செல்லும் வழியில் தாங்கள் அமைத்திருந்த தண்ணீர்ப் பந்தலைக் கண்டேன். வேறு பல தர்மங்களையும் தாங்கள் செய்து வருவதாகக் கேள்விப்பட்டு தங்களைக் காண வந்தேன். ஒரு சந்தேகம்?” என்றார்.

“என்ன?” என்றார் அப்பூதியார்.

“தாங்கள் சிவனடியார்களுக்கு பயன்படும்படி அமைத்திருக்கும் தண்ணீர்ப்பந்தலுக்கு தங்களின் பெயரினை வைக்காமல் வேறு யாரோ ஒருவர் பெயரினை வைத்துள்ளீர்களே. என்ன காரணம்?” என்றார் அப்பர்.

இதனைக் கேட்டதும் “அப்பர் சுவாமிகளின் பெருமையை அறியாமல் இச்சிவனடியார் யாரோ என்று பேசுகிறாரே?” என்று எண்ணியபொழுது அப்பூதியாருக்கு பெரும் கோபம் உண்டாயிற்று.

“நீங்கள் சொல்வது நன்றாக இல்லையே! சமணர்களின் பேச்சுக்களைக் கேட்டு இன்னல் செய்த மன்னரின் சூழ்ச்சிகளை, திருத்தொண்டின் வலிமையால் இறையருள் பெற்று வென்ற திருநாவுக்கரசரின் திருநாமத்தையா வேறு யார் பெயரோ என்று சொல்வது?

இறைவனின் திருநாமத்தின் வலிமையால் மறுமையில் இன்பம் கிடைப்பது மட்டுமல்லாமல், இம்மையிலும் தீங்கு நீக்கி நலம் பெறலாம் என்பதை எல்லோருக்கும் உணர்த்திய திருநாவுக்கரசரின் பெயரினை எழுதியிருக்க, நீங்கள் என்ன வார்த்தைகள் சொன்னீர்கள்?

கல்லைக் கட்டி கடலில் இட்டபோதும் இறையருளால் கல்லையே தெப்பமாகக் கொண்டு கரையேறிய அந்தப் பெருமானாரின் பெருமையை உலகமே அறியும். சிவனடியாராக இருக்கும் தாங்கள் இவ்வாறு கேட்பது ஆச்சர்யமாக உள்ளதே! தாங்கள் யார்?” என்று படபடப்புடன் கேட்டார் அப்பூதியார்.

அப்பரடிகள் அப்பூதியாரின் உள்ளக் குறிப்பையும், அவருள்ள பக்தியையும் அறிந்து கொண்டார்.

“வேறு சமயத்திலிருந்து மீண்டு வருவதற்காக இறைவன் அருளிய சூலை நோயால் ஆட்கொள்ளப்பட்டு, மீண்டும் அவனை அடைந்து உய்ந்த அறிவிலாச் சிறியேன் அடியேன்” என்று பணிவாகச் சொன்னார் அப்பர்.

அதனைக் கேட்டு வந்திருப்பது திருநாவுக்கரசர் என்பதை உணர்ந்ததும் அப்பூதி அடிகள் மெய் மறந்தார். கைகளை தலைமேல் குவித்து, கண்களில் நீர் பெருக, உடல் சிலிர்க்க அப்பரின் திருவடிகளில் வீழ்ந்தார்.

அப்பரும் அப்பூதியாரை வாரி எடுத்து வணங்கினார். அதனைக் கண்டதும் அப்பூதியடிகள் ஆடினார் பாடினார் ஓடினார்.

தம் மனைவி, மக்கள், சுற்றத்தார்கள் எல்லோரையும் அழைத்து வந்து திருநாவுக்கரசரின் வருகையை அறிவித்து அவர்களை வணங்கச் செய்தார்.

அப்பரை வீட்டிற்குள் அழைத்துச் சென்று தகுந்த ஆசனத்தில் அமர்த்தி திருவடிகளைக் கழுவி தெளித்துக் கொண்டார். தங்களுடைய வீட்டில் திருவமுது செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தனர் அப்பூதி குடும்பத்தினர்.

அரவம் தீண்டி மாண்டவன்

நாவுக்கரசரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். திருவமுது தயராவதற்குள் திங்களுர் இறைவனை வழிபட்டு வருகிறேன் என்று கூறி ஆலயம் நோக்கிச் சென்றார் அப்பர்.

அப்பூதியாரின் துணைவியார் பல்வேறு சுவைகளில் திருவமுதினைத் தயார் செய்தார். அப்பரடிகள் திருவமுது செய்வதற்காக தகுந்த வாழையிலையினை அரிந்து வருமாறு தன்னுடைய மகன் மூத்த திருநாவுக்கரசை அனுப்பினார்.

தோட்டத்திற்குச் சென்ற சிறுவனான மூத்த திருநாவுக்கரசு இளம் வாழைக்குருத்தினை அரியும் போது, பாம்பு ஒன்று அவன் கையைத் தீண்டியது.

தன்னால் அப்பரடிகள் திருவமுது செய்யும் நேரம் தாமதிக்கப்படக்கூடாது என்று எண்ணி, அச்சிறுவன் அரிந்த வாழைக்குருத்தினை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு ஓடினான்.

தன் அன்னையிடம் சென்று வாழைக்குருத்தினைக் கொடுத்துவிட்டு கீழே சுருண்டு விழுந்து இறந்தான்.

சிறுவனின் உடலின் நீலத்தன்மை மற்றும் கையிலிருந்த கடிவாயினைக் கொண்டு, பாம்பால் மூத்த திருநாவுக்கரசு மாண்டதை உணர்ந்த அப்பூதி அடிகள் மற்றும் அவர் தம் துணைவியார் செய்வது அறியாது திகைத்தனர்.

தங்களின் மகனின் மரணத்தைவிட அடியாரின் விருந்தோம்பல் முக்கியம் எனக் கருதி, அவனது உடலை பாயில் சுருட்டி ஓரிடத்தில் வைத்து விட்டு அப்பருக்கு திருவமுது செய்துவிக்கத் தயாராகினர்.

அப்பரால் மீண்டான்

அப்பரடிகள் ஆலயத்தில் இருந்து திரும்பியதும் ஆசனத்தில் அமர்ந்து எல்லோருக்கும் திருநீறு அளிக்கத் தொடங்கினார்.

அப்போது அப்பரடிகள் அப்பூதியாரிடம் அவரின் மூத்த மகனை அழைக்குமாறு கூறினார். அப்பூதியாருக்கு துக்கம் தொண்டையை அடைந்தது. எனினும் அடியாருக்கு திருவமுது செய்வித்தல் முக்கியம் எனக் கருதி “அவன் இப்போது உதவான்.” என்றார்.

அதனைக் கேட்டதும் அப்பருக்கு மனதில் கலக்கம் உண்டானது. மீண்டும் அச்சிறுவனை அழைக்குமாறு அப்பூதியாரிடம் அப்பரடிகள் தெரிவிக்க, இனிமேலும் மறைக்க இயலாது என்பதை உணர்ந்த அப்பூதியார் சிறுவன் மாண்ட விசயத்தை அப்பருக்குத் தெரிவித்தார்.

அதனைக் கேட்ட அப்பரடிகள் மாண்ட சிறுவனின் உடலினை திருக்கோவிலுக்கு கொண்டுவருமாறு கட்டளையிட்டு ஆலயத்திற்கு விரைந்தார்.

திங்களுர் பெருமானாரிடம் ‘ஒன்று கொலாம்’ என்ற திருப்பதிகத்தைப் பாடி உருகி வேண்டினார். இறையருளால் மாண்ட அச்சிறுவன் உறங்கி எழுவது போல் எழுந்தான். அப்பரை வணங்கிய அவனுக்கு திருநீறு அளித்தார் திருநாவுக்கரசர்.

“இவனால் அடியாருக்கு திருவமுது உண்பிக்க நேரமானாது” என்று அப்பூதி தம்பதியர் வருத்தத்துடன் கூறினர்.

அதனைக் கேட்டதும் அப்பரடிகள் விரைந்து சென்று அப்பூதியாரின் இல்லத்தில் அங்கிருந்தாரோடு திருவமுது செய்தார்.

சில காலம் அப்பூதியாரின் இல்லத்தில் தங்கியிருந்த அப்பரடிகள் பின்னர் திருப்பழனம் என்னும் திருத்தலத்திற்குச் சென்றார்.

அத்தலத்தில் திருப்பதிகம் பாடும்போது இறுதி பாடலில் ‘அஞ்சிபோய் கலிமெலிய அழலோம்பும் அப்பூதி, குஞ்சிப்பூ வாய்நின்ற சேவடியாய்’ என்று பாடி அப்பூதியாரைச் சிறப்பித்துள்ளார்.

அதன் பின்னர் அப்பூதியடிகள் திருநாவுக்கரசரைப் போற்றி அறச்செயல்களில் வழுவாமல் நெடுங்காலம் வாழ்ந்து இறுதியில் வீடுபேறாகிய சிவபதம் பெற்றார்.

இறையடியாரகிய அப்பரும், இறையடியாரின் அன்பராகிய அப்பூதியாரும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுகின்றனர்.

அரன் அன்பரும், அடியார் அன்பரும் வேறில்லை என்பது இதன் மூலம் புலனாகிறது.

அப்பூதி அடிகள் நாயனார் குருபூஜை தை மாதம் சதயம் நட்சத்திரத்தில் வணங்கப்படுகிறது.

இறையடியாரை வணங்கினாலும் இறைப்பதம் பெறலாம் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டிய அப்பூதி அடிகளாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்’ என்று கொண்டாடுகிறார்.