அம்பர் குறும்படம் விமர்சனம்

அம்பர் குறும்படம் ஒரு வசனம் கூட இல்லாத படம்; ஓராயிரம் உணர்வுகளை வெளிக்காட்டி நிற்கும் படம்.

ஒர் இலக்கியம் படிப்பவரிடமோ, பார்ப்பவரிடமோ இனம் காட்ட முடியாத கன‌த்தை நெஞ்சில் ஏற்றி விட்டுச் செல்லுமானால், அந்த இலக்கியம் காலத்தால் நிலைத்து நிற்கும். தலைமுறை தலைமுறையாகக் கவனிக்கப்பட்டுப் போற்றப்படும்.

இவ்வகையில் அம்பர் குறும்படத்தைப் பார்த்து முடிக்கையில், ஏக்கம், தவிப்பு, இரக்கம் என உணர்வு மேலிட மனம் கனத்துப் போய் விடுகிறது.

மாறி மாறிப் போகும் எண்ண ஓட்டங்களின் நிறங்களை அப்படியே காணமுடிகிற சாத்தியம், திரைக்கதை மற்றும் ஒளிப்பதிவாளரால் நிகழ்த்திக் காட்டப்படுகிறது.

முழு நீளத் திரைப்படத்தின் உள்ளே வைக்கப்படும் திரில்லர் காட்சிகள், 9.48 நிமிடங்களிலேயே நம்மை மிரட்டி விடுகின்றன.

உண்மைக்கும் பொய்க்கும் இடையில் நடக்கும் யுத்தம்,  ஆபத்சகாயனாக யார் வேண்டுமானாலும் வரலாம்  என்கிற  நியதி,  எதைச்  செய்தாலும் குற்றம் தடுத்து விடும்  என்கிற  நீதி,  இவையெல்லாம்  இக்குறும்படம்  தரும் செய்திகள்  ஆகும்.

குறுகிய நேரத்தில், பெரிய திரைப்படத்திற்கான கதைக் கருவினைக் கொண்டு மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட குறும்படம் இது.

பின்னணி இசை, கதையின் ஓட்டத்தைத் துல்லியமாக மனதிற்குள்  இறக்குகிறது. 

மண்டையில் அடிக்கும் காட்சிகளில் திணறடிக்கும் இசை நம்மைக் கலங்கடிக்கிறது. பல காட்சிகளில் இசை திகிலூட்டுகிறது.

குறும்படக் கதை

ஆள் அரவமற்ற நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சலூன் கடையைக் காலையில் திறந்து சுத்தம் செய்து கொண்டிருக்கிறார் சலூன் கடைக்காரர்.

முதல் கஸ்டமராக ஒருவர் காரில் இருந்து இறங்கி உள்ளே வருகிறார். திடகாத்திரமான அந்த நபருக்கு முடிவெட்டி விடுகிறார்.

சேவிங் செய்யும் பொழுது எதார்த்தமாக அன்றைய செய்தித்தாள் கண்ணில் படுகிறது. 

அதில் அந்தத் திடகாத்திரமான ஆள் படமும், அவரால் கடத்தப்பட்ட பெண் குழந்தைப் படமும் செய்தியாக வந்துள்ளது.

திகிலடைந்த சலூன் கடைக்காரர், அவரைக் கொலை செய்துவிடத் துணிகிறார். ஆனால் பயத்தால்  முடியவில்லை.

தன்னை யார் என்று தெரிந்து கொண்டு விட்டான் என்பதைப் புரிந்துகொண்ட அந்தத் திடகாத்திரமான ஆள், இவனைக் கொன்றுவிட அருகே கிடந்த ஒயரைக் கழுத்தில் சுற்றி இறுக்குகிறான்.

தப்பித்துவிடச் சலூன் கடைக்காரர் கத்திரிக்கோலால் அவனின் கழுத்தில் குத்த, மாறி மாறிப் பலமாக இருவரும் அடித்துக் கொள்கின்றனர். எழுந்திருக்க முடியாமல் இருவரும் அடிபட்டுக் கீழே சரிகின்றனர்.

வெளியே காரில் கடத்தப்பட்ட குழந்தை டிக்கிக்குள் கிடந்து அழுது புரண்டுக்  கத்திக் கொண்டிருக்கிறது.

யாருமற்ற நெடுஞ்சாலை வெறிச்சோடிக் கிடக்கிறது.

அம்பர் குறும்படம் சிறப்புகள்

இரு கதாபாத்திரங்கள் மட்டுமே குறும்படத்தில் உள்ளன. அந்த இரு கதாபாத்திரங்களிலும் நடித்த ஜோக் விக் மற்றும் ரிக் ஏபி இருவரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்.

ஜோக்விக் பயத்துடனும், ரிக் ஏபி கொலை வெறியுடனும் அசால்டாக நடிப்பை  வெளிப்படுத்தியுள்ளனர்.

சேவிங் செய்யும் பொழுது, முகத்தில் தண்ணீர் அடித்து, அதைத் துடைக்கும் பொழுது அந்த சுகத்தை அனுபவிக்கும் முக பாவனையில் ரிக் ஏபி அருமையாகச் செய்திருப்பார்.

குழந்தையைக் கடத்தியவன் எனத் தெரிந்துக் கத்தியைக் கழுவும் இடத்தில், சலூன் கடைக்காரராக நடித்த ஜோக் விக்கின் கைகள் உதறல் எடுப்பதும், பயந்த முகபாவம் காட்டுவதும் மிக அற்புதம்.

ஒளிப்பதிவு புகுந்து விளையாடி இருக்கிறது. எதிரெதிர் திசையில் இரு கண்ணாடிகள்; அதில் பிம்பங்கள்  எதிரொலித்து  இந்த  இருவரின்  உருவமும்  பல நபர்களாகத் தெரியும் காட்சி ஒளிப்பதிவின் உச்சம்.

கழுத்தில் கத்தி வைக்கும் காட்சியில், வைத்திருக்கும் கேமராக் கோணங்கள் மற்றும் குளோசப் காட்சிகள் புதுமை.

சலூன் கடைக்காரரின் உள்ளம் நல்ல உள்ளம். கொலை செய்ய வாய்ப்பிருந்தும், முதலில் அதைச் செய்யாமல் விட்டு விடுகின்றான்.

குழந்தையைக் காப்பாற்ற முயற்சி எடுக்கின்றான். 

ஆனால், கடத்தல்காரன் தன்னைக் கொல்ல வாய்ப்பிருந்தும் கொல்லாமல் விட்ட சலூன் கடைக்காரரை கழுத்தை நெரித்துக் கொல்ல நினைப்பதும், அடித்துக் கொல்ல முயற்சிப்பதும் அவனின் கொடூரத் தன்மையை வெளிப்படுத்துகிறது.

இருவரும் கடுமையாகத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளுகின்றனர். இதில் குழந்தையைக் காப்பாற்றவே சலூன் கடைக்காரர் போராடுகிறார்.

நன்மை, தீமை இரண்டும் நீதிக்காக எப்பொழுதும் போராடக் கூடியவைகள் என்பதைப் படிமமாக உருவகித்து உள்ளார் இயக்குனர்.

தீயது நடக்கும் போது, ’நமக்கென்ன’ என ஒதுங்கி ஓடும் மக்களுக்கு இடையில்,  சிலர்தான் இப்படி உயிரை பணயம் வைத்துப் போராடுகின்றனர் என்பதையும் முன் வைக்கின்றார்.

வசனம் இல்லாமல் பார்வையாளனுக்கு இந்தக் கதையைச் சொன்னதற்கு,  இயக்குனருக்குப் பாராட்டுக்கள்  எவ்வளவு சொன்னாலும் தகும்.

படைப்பு, சிறந்த படைப்பாக மாறுவது சில நுணுக்கங்களில் தான். அந்த நுணுக்கம் படைப்பாளனின் கற்பனை வெளிப்பாட்டில்தான் உள்ளது. அதுவே அவனையும் அவனின் படைப்பையும் அடையாளப்படுத்துகிறது.

ரேடியோவிலிருந்து ஒரு பாடல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும். சில காட்சிகளில் மேலோங்கிய இசையால் பாடல்கள் ஒலிக்கவில்லை. 

இதைத் தவிர்த்திருக்கலாம். க்ளோசப் காட்சிகளையும் சிறிது குறைத்திருக்கலாம். எதார்த்த வாதத்தன்மை இவ்விடங்களில் குறைகிறது.

படக்குழு

இயக்குனர் : ஃபைசல் ஹஷ்மி

நடிப்பு: ஜோக்விம் கோன்சால்வ்ஸ், ரிக் ஏபி, அனிகா பாய்ல்

தயாரிப்பாளர்கள் : ஃபைசல் ஹஷ்மி, ஐவர் கிரேசியாஸ், கேன் ரோட்ரிஜஸ், கர்ட் பாரெட்டோ,

ஒளிப்பதிவு: ELIAS TRAD

ஒலிப்பதிவு, வடிவமைப்பு மற்றும் கலவை: கேன் ரோட்ரிக்ஸ்

ஒப்பனை மற்றும் சிறப்பு விளைவுகள்: ZERA AZMI

பெற்ற விருதுகள்

Winner BEST FILM – Al Ain Film Festival 2020 Winner

BEST SOUND DESIGN – Linz International Film Festival 2020

Semi Finalist BEST FILM – Buenos Aires International Film Festival 2020

Official Selection – Middle East Film and Comic Con 2020

Official Selection – Morbido Film Festival 2020

Official Selection – Hobnobben Film Festival 2020

Official Selection – Highland Film Festival 2020

Official Selection – Mint Film Festival 2020

Official Selection – 6th Festival Internacional De Cine De Guayaquil 2020

Official Selection – Lebanese Independent Film Festival 2020c

Official Selection – 9 Film Festival 2020

Official Selection – First Coast Film Festival 2020

விமர்சகரின் விமர்சனம் ஒன்று

”அருமையான படைப்பு பைசல் மற்றும் நடிகர்களும்!

எனக்குப் பிடித்த விஷயங்களில் ஒன்று ஒளிப்பதிவு.

ஒரு தடயவியல் விஞ்ஞானியாக, கத்தியால் குத்தப்பட்ட தருணத்தில் ஒரு யதார்த்தமாக‌ தமனி இரத்தம் சிதறியதைக் கண்டு நான் முற்றிலும் மகிழ்ச்சியடைந்தேன். அதைச் செய்ய உடலில் இரண்டு தமனிகள் மட்டுமே உள்ளன.

சூப்பர் சில்லிங் முற்றிலும் பிடித்தது !

அருமையான வேலை நண்பர்களே ! முற்றிலும். வாவ்…”

அம்பர் குறும்படம் பாருங்கள்

(குறும்படம் விரியும்)

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com

One Reply to “அம்பர் குறும்படம் விமர்சனம்”

 1. மாஸ்டர் பீஸ்!

  நச்சென்ற படம்…

  நறுக்கென்று திரை விமர்சனம்…

  படம் த்ரில்லர் மட்டுமல்ல; அதில் அறம் சார்ந்த செய்தியும் நிறையவே உண்டு.

  எப்போதும் சாதாரணமானவன் மட்டும் நேர்மைக்கு துணை போகிறான்; துன்பத்தில் சிக்குகிறான்…

  சந்திரன் அய்யாவுக்கு வாழ்த்துக்கள்

  சீக்கிரம் சிறந்த குறும்படங்கள் புத்தகம் போடுங்கள் சார்…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.