உண்ணும் உணவை வணிகமாக்கி
உழவைத் தொழிலாய் மாற்றுதற்குப்
பண்ணும் செயலே செறிவூட்டம்
பன்னாட் டரசின் சதித்திட்டம்
எண்ணும் எழுத்தும் எப்பொழுதும்
ஏமாற் றுதற்கே துடிதுடிக்கும்
மண்ணும் உயிரும் இவர்களுக்கு
மாபெரு சந்தை தவிர வேறிலையே!
அரிசியை யரைத்துக் கூழாக்கி
யதனுடன் வேதிப் பொருட்கலந்தே
அரிசியாய் மாற்றி யலங்கரித்தே
அரசுகள் தருவார் பொதுவிடத்தே
வரிசையாய் நின்று வாங்கிவந்து
வாய்வழி உள்ளே தள்ளிவிட்டால்
முரசொலி வயிற்றில் தொடங்காதோ?
முடமென வுடலும் ஆகாதோ?
இரும்புச் சத்துக் குறைபாட்டால்
இதுபோல் அரிசி தருகின்றோம்
விரும்பி வாங்கி யுண்ணுங்கள்
விளையாட் டரசின் விளக்கமிஃதே
இரும்புச் சத்துக் குறைநீங்க
இரும்பைக் கடித்துத் தின்னுவதே
இருக்கும் அறிவின் வழியென்றால்
என்னே மடமை! இழிவிலையோ?
உப்பைக் காய்ச்சும் தொழிற்பிடுங்கி
யுலகோர் கையில் திணித்துவிட்டுத்
தப்பைச் சரியாய் செய்துவிட்டால்
தடுப்பார் எவரோ என்பதுபோல்
வெப்பு மூளை நோயுடையோர்
விரைந்தார் அரிசி விற்பதற்கு
முப்பால் குடித்த முதல்குடியே
முடக்கம் ஏனோ? வெகுண்டெழுவீர்!
பேரினப் பாவலன் (எ) சாமி.சுரேஷ்
ஆவடி, திருவள்ளூர்
கைபேசி: 8667043574
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!