அறிவினை விரிவு செய் – சிறுவர் கதை

அறிவினை விரிவு செய் என்பது, பள்ளி கல்லூரி மாணவர்கள் அறிவினை வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கும் ஒரு நல்ல கதை.

அன்று ஞாயிற்று கிழமை.

பள்ளியின் மைதானத்தில் மாணவர்கள் ஒன்றுகூடி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த நேரம் அங்கே கதிரவன் வந்தான்.

“என்னடா கதிரவா, இப்போதெல்லாம் சனிக்கிழமையில விளையாட வரமாட்டுற? ஏன்டா பிஸியா?” என்றான் மோகன்.

“இல்லடா, நம்ம ஊர்ல நூலகம் இருக்குல்லடா, அங்க சனிக்கிழமைல போய் புத்தகம் படிக்கிறேன்டா, நிறைய புத்தகம் இருக்குடா. கதை புத்தகம், கவிதை புத்தகம், கட்டுரை புத்தகம், சிந்தனை புத்தகம், தலைவர்கள் வரலாற்று புத்தகம் எனப் பல புத்தகங்கள் இருக்குடா. செய்தித் தாளும் இருக்குடா.”

“ஆஹா, இவன் ஆரம்பிச்சிட்டான்டா” என்றான் மோகன்.

“இவனுக்கு இதே வேலைதான்” என அனைத்து பசங்களும் அவனைப் பார்த்துச் சிரித்து கேலி செய்தனர்.

 

அடுத்த நாள் பள்ளியில் காமராசர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடினர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக அவ்வூரின் நூலகர் செல்வநாயகம் கலந்து கொண்டார்.

காமராசரின் வரலாறு பற்றி மேடையில் கதிரவன் மிக அருமையாக பேசினான். அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், சிறப்பு விருந்தினர் என அனைவரும் கரவொலி எழுப்பி பாராட்டினர்.

மோகனுக்கும் மற்ற மாணவர்களுக்கும் கதிரவன் அவ்வாறு சிறப்பாக காமராசரைப் பற்றி உரையாற்றியது மிகவும் வியப்பாக இருந்தது. எப்படி இவனால் முடிந்தது என அனைவரும் சிந்தித்துக் கொண்டிருந்தனர்.

 

அப்போது சிறப்பு விருந்தினர் அவ்வூரின் நூலகர் செல்வநாயகம் சிறப்புரை ஆற்றினார்.

அப்போது “இங்கு சிறப்பாக காமராசரைப் பற்றி உரையாற்றிய மாணவன் கதிரவன், எங்கள் நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமையில் வந்து புத்தகங்களை படித்து செல்வது பலபேருக்கு தெரியாது.

அவர் சிறப்பாக பேசியதற்கு முக்கிய காரணம் நூலகம் சென்று புத்தகம் படிக்கும் பழக்கந்தான்.

எனவே மாணவச் செல்வங்களே, உங்களின் அறிவை விரிவு செய்ய நூலகம் காத்துக் கொண்டிருக்கிறது. அங்கு பல நூல்கள் உங்களின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கின்றன.

உங்களின் அறிவை விரிவு செய்யும் மிகப்பெரிய ஆயதம் புத்தகங்கள்தான். எனவே அனைத்து மாணவர்களும் வாரம் ஒருமுறையாவது நூலகம் நோக்கி வர வேண்டும். இலவசமாக அறிவை விரிவு செய்திட வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

அடுத்த சனிக்கிழகை பள்ளி மைதானத்தைப் பார்த்துக் கொண்டே நூலகம் சென்று கொண்டிருந்தான்.

மைதானத்தில் மாணவர்கள் யாருமில்லை. நூலகம் சென்றான். என்ன ஆச்சர்யம். மோகன் உட்பட பல மாணவர்கள் அமைதியாக ஆளுக்கொரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தனர். நூலகர் செல்வநாயகம் கதிரவனுக்கு கைகொடுத்து மகிழ்ச்சியோடு வரவேற்றார்.

 

மாணவனே!

நூலகம் செல்

அறிவினை விரிவு செய்

வாழ்க்கையில் முன்னேறு.

 

கி.அன்புமொழி

கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்

One Reply to “அறிவினை விரிவு செய் – சிறுவர் கதை”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.