அவல் பாயசம் பண்டிகை நாட்களிலும், விருந்தினர்களின் வருகையின் போதும் செய்யக் கூடிய அருமையான இனிப்பு வகை.
இதனுடைய சுவையும் மணமும் மிகவும் எல்லோருக்கும் பிடித்ததாக இருக்கும்.
நான் பாலில் அவலை வேக வைத்து பாயசம் தயார் செய்துள்ளேன். விருப்பமுள்ளவர்கள் தண்ணீரில் அவலை வேக வைத்து காய்ச்சி ஆறிய பாலை கடைசியாக சேர்த்து இறக்கிக் கொள்ளலாம்.
இனி சுவையான அவல் பாயசம் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சிவப்பு அவல் – 1 கப்
பால் – 4 கப்
நாட்டுச் சர்க்கரை – 1 கப்
தண்ணீர் – 1 கப்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு – 8 எண்ணம்
ஏலக்காய் – 1 எண்ணம்
உப்பு – மிகவும் சிறிதளவு
அவல் பாயசம் செய்முறை
ஒரு பாத்திரத்தில் நாட்டுச் சர்க்கரை சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
சர்க்கரை முழுவதும் கரைந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, ஓரளவு ஆறியதும் வடிகட்டிக் கொள்ளவும்.
ஏலக்காயை நசுக்கிக் கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி உருகியதும், முந்திரிப் பருப்பினைச் சேர்த்து பொன்னிறமானதும் எடுத்து விடவும்.
அதில் அவலைச் சேர்த்து அடுப்பினை சிம்மில் வைத்து அவல் மொறுமொறுப்பாகும் வரை வறுத்து எடுக்கவும்.
அதே பாத்திரத்தில் பாலை ஊற்றி காய வைக்கவும்.
பால் பொங்கியதும் வறுத்த அவலைச் சேர்த்து மூடி இடவும்.
அடுப்பினை மிதமான தீயில் வைத்து நான்கு முதல் ஐந்து நிமிடங்கள் அடுப்பில் வைக்கவும்.
அடிப்பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறி விடவும்.
அவல் வெந்து மென்மையாதும் ஒருசேரக் கிளறி விடவும்.
அவலை எடுத்து கையில் விரல்களுக்கிடையே வைத்து நசுக்கினால் அவல் வெந்ததை உறுதிபடுத்திக் கொள்ளலாம்.
அவல் வெந்ததும் வடிகட்டிய நாட்டு சர்க்கரை கரைசலை சேர்த்து ஒருசேரக் கிளறவும்.
ஒரு நிமிடம் கழித்து வறுத்த முந்திரி பருப்பு, நசுக்கிய ஏலக்காய் சேர்த்து கிளறி இறக்கி விடவும்.
சுவையான அவல் பாயசம் தயார்.
குறிப்பு
சர்க்கரை கரைசல் சேர்த்தபின் அதிக நேரம் அடுப்பில் வைத்தால் பாகு முறுகிவிடும்.
விருப்பமுள்ளவர்கள் நாட்டு சர்க்கரைக்குப் பதில் மண்டை வெல்லம் அல்லது வெள்ளைச் சர்க்கரை சேர்த்து பாயசம் தயார் செய்யலாம்.
பாயசத்திற்கு அவலைத் தேர்வு செய்யும்போது கெட்டியான அவலைத் தேர்வு செய்யவும்.
விருப்பமுள்ளவர்கள் கிஸ்மிஸை நெய்யில் வதக்கி பாயசம் தயார் செய்யலாம்.