ஆசை அழிவைத் தரும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.
மனிதனின் அளவிற்கு மீறிய ஆசை, அதிக எதிர்பார்ப்பு இவைகளே ஊழலுக்கும் மன அழுத்தத்திற்கும் காரணம்; மற்றும் அழிவிற்கும் காரணம்.
ஆசையாற் சந்திரன் அங்கந் தேய்ந்தனன்
ஆசையாற் சவுபறி அறிவை நீங்கினான்
ஆசையா னராசுரன் ஆவி போக்கினான்
ஆசையால் வாலியும் அழிந்து போயினான்.
இப்படி தகாத அசையினால் அழிந்தோரை நமக்குப் பெரியோர்கள் காட்டியுள்ளனர்.
வாழ வேண்டும்; வாழ உண்ண வேண்டும், இதுதான் உயிர் உள்ளவைகளின் வாழ்க்கை முறை. ஆனால் மனிதன் முற்றிலும் வேறுபட்டவன்.
உணவு, உடை, உறைவிடம் என இம்மூன்றும் மனிதருக்கு அவசியம். இதற்கு மட்டும் தான் தேடல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தவரையில் உலகில் அமைதி இருந்தது.
இன்றைய உழைப்பு செல்போனுக்கும் மதுவிற்கும் தொண்ணூறு சதவீதம் போகின்றது.
உணவைத் தேடிப் போகாமல் கிடைப்பதை கொண்டு உண்பது – அஜகர விருத்தி
நாள்தோறும் தேவைக்குக் கேட்டுப் பெறுவது – உஞ்ச விருத்தி
சேமிக்காமல் அந்த வேளைக்கு இரை தேடிக் கொள்வது – கபோத விருத்தி
இப்படி இருந்த முறை சேர்த்து வைப்பது என்ற நிலை வந்தது .
பின்னர் அதிகம் சேர்ப்பது, மிக அதிகம் சேர்ப்பது என்ற நிலைக்கு சென்றுவிட்டோம்.
தனக்கு, என்பது போய் தன் பிள்ளைக்கு, அவன் பிள்ளைக்கு என்ற நிலை வந்து விட்டது.
சேமிப்பு என்பது அவசியமானதே! அது சரியான வழியில் இருக்க வேண்டியதுதான் முக்கியம். உதாரணமாக மழைக்காலத்திற்கு வேண்டியவற்றை கோடை காலத்தில் சேமிப்பது போல். ஆனால் பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கை என்று கருதினால் அது அழிவைத் தரும்.
ஆசையின் காரணமாக தன் எண்ணங்களின்படி ஆடம்பரம், ஆணவம், ஆக்கிரமிப்பு இவைகளினால் உலகின் போக்கு மாற்றப்பட்டது. இது இன்றோ நேற்றோ வந்ததல்ல. யுக யுகங்களாக வருகின்றது.
ஒருபுறம் பெரியோர்கள் இது சரி, இது தவறு என்று சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனாலும் மனிதன் மாறவில்லை.
வேதங்கள், நீதி நூல்கள், நெறிமுறைகள், பக்தி நூல்கள் என இலக்கியங்கள் வாயிலாகப் பெரியோர்கள் மக்களை நெறிமுறைப்படுத்த முற்பட்டனர். அரசு இன்றைக்கு சட்டங்கள் வாயிலாக மக்களை முறைப்படுத்த முற்படுகின்றது.
இத்தனைக்கும் காரணம் தனிப்பட்ட மனிதன் தான் கொண்ட ஆசையினால் வரும் எண்ணங்களே. இதை திருவள்ளுவர்
இன்பம் இடையறாது ஈண்டும் அவா என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்
என்ற குறள் மூலம் துன்பங்களில் எல்லாம் கொடியது ஆசைதான் என்று கூறுகின்றார்; மேலும் ஆசை அழியும்போது இன்பம் நிலைத்து நிற்கிறது என்றும் கூறுகிறார்.
ஆசைப்பட வேண்டும் அது தேவைக்கு மட்டும் இருக்க வேண்டும். மீறும்போது பேராசையாக மாறிவிடுகின்றது.
ஆசை பேராசையாக மாறியதால் பேரரசுகள் எல்லாம் அழிந்து விட்டன.
ஆள வாய்ப்பு கிடைத்தோர் பேராசையினால் அமைதியிழந்து அழிந்தனர்.
வாழ்க்கை நிலையற்றது எனத் தெரிந்தும் தன்னிலை மறந்தனர்.
விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை நம்மை விட்டுப்போனது. இவற்றை வலியுறுத்தவே நம் பிள்ளைகளுக்கு சிறுவயதில், இராமாயணம் கதையாகச் சொல்லப்பட்டது.
கைகேயியின் விட்டுக் கொடுக்கா நிலையில் இராமன், இலக்குவன், பரதன் மற்றும் சத்ருக்கணன் போன்றோர் விட்டுக் கொடுத்து அமைதியாய் இருந்ததால் அழியாப் புகழ் பெற்றனர் என்று உணர்த்தப்பட்டது.
விட்டுக் கொடுக்காத மனநிலையில் அனைவரும் இருந்ததால் மகாபாரதப் போர் நிகழ்ந்து பேரழிவு ஏற்பட்டதை விளக்கிச் சொல்லி வந்தனர்.
விட்டுக் கொடுக்கும் எண்ணம் இருந்ததால் இராமாயணத்தில் அயோத்தியில் அனைவரும் நலமுற்றனர்.
விட்டுக் கொடுக்கும் எண்ணம் இல்லாததால் மகாபாரதத்தில் ஒரு சாரார் முற்றும் அழிந்தனர்; மற்றவர்களும் சொல்ல முடியாத துன்பம் அடைந்தனர்.
இராமமூர்த்தி இராமாநுஜதாசன்
திருநின்றவூர் 602024
கைபேசி: 9444410450
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!