ஆதுர சாலை – ஒரு மருத்துவ ஊழியனின் கதை

ஒரு மருத்துவ ஊழியனின் கதை என்ற வகையில் உமர் பாரூக் அவர்கள் எழுதிய ஆதுர சாலை என்னும் நூல், மருத்துவத் துறையில் உள்ள அனைவரும் படிக்க வேண்டிய முக்கிய நூலாக நான் கருதுகிறேன்.

(ஆதுர சாலை என்றால் மருத்துவமனை என்று பொருள்)

அலோபதி மருத்துவ ஆய்வுக் கூடங்களில் நடக்கும் டெஸ்டிங் மோசடி தில்லுமுல்லுகளையும், சித்த மருத்துவத்தின் முக்கியத்துவத்தையும் பேசும் நாவல் ஆதுர சாலை.

கதையின் ஆரம்பத்திலேயே ‘இந்த நாவல் யார் மனதையும் புண் படுத்தி இருந்தால் உரிய சிகிச்சை எடுத்து கொள்ளவும்’ என ஆசிரியர் அறிவிக்கிறார்.

கதையின் ஆரம்பம் முதல் ஒவ்வொரு வரியும் அதிர வைக்கும் உண்மையை வெளிப்படுத்தியுள்ளது.

கனவு வேலை

வறுமையின் நிழல் படியாமல் தன்னை வளர்த்த தன் தந்தையின் குடும்ப பாரத்தை சுமக்க, தான் படித்த மருத்துவ துறையில் வேலை செய்ய, பல கனவுகளுடனும் உற்சாகத்துடனும் வரும் ஒரு மருத்துவ ஊழியனின் கதை.

அலோபதி சிகிச்சைகளுக்கு அடிநாதமாக விளங்கும் மருத்துவ ஆய்வுக்கூட துறையில், மிகுந்த உற்சாகத்துடன் வேலையில் சேருகிறான் அவன்.

அத்துறையில் இருக்கும் மோசடிகளை கண்டு மனம் வெதும்பி, மன ஊசலாட்டத்துடன் அவன் எடுக்கும் அடுத்ததடுத்த முடிவுகள் கதையாக நகர்கிறது.

அலோபதி மருத்துவத்தின் நோயறிதல் முறையில் பெரும் பங்கு வகிப்பது, இயந்திரங்களை கொண்டு நோயறியும் மருத்துவ ஆய்வுக்கூட முடிவுகளே.

நோயாளிகளின் ரிசல்ட்டை மாற்றுவது, ஆய்வுக்கூட முடிவுகள் எவ்வாறு கணக்கின் வழியாக பிறக்கின்றது, ரத்த வங்கிகளில் மருத்துவ ஊழியர்களின் அலட்சியம் போன்று பல மோசடிகளை வெட்டவெளிச்சம் ஆக்கியுள்ளார் ஆசிரியர்.

வாசிக்கும் பொழுது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது.

சில மருத்துவமனைகளில், ஒரு நோயாளி மருத்துவமனைக்கு சென்றாலே, ஒவ்வொரு நடவடிக்கையிலும், நோய் குணமாவதை விட பணமே நோக்கமாக மாறிவிடுகிறது.

அறிவியல் மருத்துவமாக கருதப்படும் அலோபதி மருத்துவத்தின் கோர முகத்தை எந்த சமரசமும் தயக்கமுமின்றி வெட்ட வெளிச்சமாக்கி இருக்கும் ஆசிரியருக்கு பாராட்டுகள்.

அன்பு டாக்டர்

இந்த அலோபதி கோர பிடியில் இருந்து தன்னை விடுவித்து கொள்ள அவன் காத்துக் கொண்டிருக்கும் போது, அன்பு டாக்டரின் அறிமுகம் கிடைக்கிறது. ஒரு இக்கட்டான சூழலில் ஆய்வுகூட வேலையை விடும் நிர்பந்தத்திற்கு அவன் தள்ளப்படுகிறான்.

ஆய்வுக்கூடத்தில் இருந்து விலகி, அன்பு டாக்டரிடம் வேலையில் சேர்வது, அவனுடன் சேர்ந்து நமக்கும் ஒரு ஆசுவாசத்தை தருகிறது.

அன்பு டாக்டர்… கதையின் பிரதான கதாபாத்திரம். அலோபதி மருத்துவராக அறிமுகமாகி, சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை புரிந்து அதன்பால் ஈர்க்கப்பட்டு முழு சித்த மருத்துவராகவே மாறி விடும் கதாபாத்திரம்.

கதை சொல்லி நாயகனுக்கும், அன்பு டாக்டருக்கும் இடையில் நடக்கும் உரையாடல்களே, கதையின் பெரும்பகுதியை வியாபித்துள்ளது.

பெரும் புதையல்

உடல், மனம், ஆழமான தத்துவங்கள், நீளமான வரலாற்று பதிவுகள், அக மனம், புற மனம் பற்றிய புரிதல், கடவுளின் கதை, இறப்புக்கும் மரணத்திற்கும் உள்ள வித்தியாசம் என பெரும் புதையலுக்குள் தலை விட்டது போன்ற உணர்வு.

அள்ள அள்ள கிடைக்கும் புதையலை தலையில் ஏற்றிக் கொள்ளத்தான் கொஞ்சம் சிரமமாக இருந்தது.

பென்சிலால் குறித்து வைத்து கொண்டே படித்த முதல் நாவல்.

சித்த மருத்துவத்தை பற்றி அன்பு டாக்டரின் விளக்கங்கள் எனக்கு புதிய விஷயங்களாக பட்டது.

நாடி பரிசோதனை மூலம் நோயறிதலை பற்றிய புரிதல் இருந்தாலும், சிறுநீரில் ஏற்படும் உருவத்தை வைத்து நோயறிதல் ஆச்சர்யம் வரவழைத்தது.

ஆதி பட்டர்கள் எப்படி மக்கள் மருத்துவர்களாக இருந்தார்கள், அலோபதியின் வரவு எவ்வாறு மரபு வழி மருத்துவத்தை அழித்தது, எவ்வாறு அவர்கள் தனித்து விடப்பட்டனர் என மரபு வழி மருத்துவத்தின் வரலாற்று பக்கங்களை இரு அத்தியாயம் முழுதும் விளக்கியுள்ளது அசாத்தியம்.

இதற்கிடையில் முன்கதையாக வரும் சார்பு மருத்துவ கல்லூரியில் நடக்கும் நிர்வாக குளறுபடிகள் சற்று அதிர்ச்சியை தருகிறது.

பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் வாழ்பவர்கள், தங்கள் பிள்ளைகள் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள, பாடுபட்டு சேர்த்து, கடன் வாங்கி படிக்க அனுப்புகிறார்கள்.

அதை உதாசினப்படுத்தி, தங்கள் சுய லாபத்திற்காக மாணவர்களின் அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்யாமல், மிரட்டலுடன் அவர்களை வழிநடத்தும் கோபால் சார் போன்றவர்களை தோலுரித்து காட்டியுள்ளார் ஆசிரியர்.

கதையின் இறுதி பகுதி மிகுந்த வலியுடன் நிறைவடைகிறது. அன்பு டாக்டருக்கும், அவனுக்கும் உள்ள பிணைப்பு, இறுதி முடிவில் நமக்கு கண்ணீரை வரவழைக்கிறது.

மருத்துவ நாவல்

கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை சிறு சலிப்பைக்கூட ஏற்படுத்தாத, மிக எளிய நடையில் கதையோட்டம் இருந்தது.

அதோடு நான் வசிக்கும் தேனி மாவட்ட பகுதிகளில் கதை நகர்வதால், ஒவ்வொரு அத்தியாயமும் காட்சிகளாக என் கண் முன் விரிகிறது.

பரிசோதனை கூடங்களில் நடக்கும் அத்தனை பரிசோதனைகளையும் நேரில் காண்பது போல் விளக்கி இருப்பது அருமை.

அறிவியல் படிக்காதவர்களுக்கும் புரியும் வண்ணம் அதன் கலை சொற்களை மிக எளிமையாக தந்திருக்கிறார்.

கதையை வெப்பம், குளிர்ச்சி என இரண்டாக பிரித்திருந்தார் ஆசிரியர். குளிர்ச்சி பகுதி மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது.

அதோடு கதையில் எண்ணிலடங்கா தகவல்களை அளித்துள்ளார்.இத்தனை விவரங்களை எழுத ஆசிரியர் எத்தனை புத்தகங்கள் படித்திருப்பார் என்பது மலைப்பை ஏற்படுத்துகிறது.

தோழர் உமர் பாரூக் அவர்களை அறிந்த வகையில், இக்கதையில் வரும் கதை சொல்லி நாயகன், அன்பு டாக்டர், பாஸ்கர் என மூன்று கதாபாத்திரங்களில் அவரின் பிம்பம் எனக்கு தோன்றியது.

மரபுவழி மருத்துவத்தின் சிறப்புகளை பேசும் ‘மருத்துவ நாவல்’. அன்பு டாக்டர் எழுத நினைத்த ‘ஆதுர சாலை’ நாவல் தோழர் உமர் பாரூக் வழி எங்கள் கையில் கிடைத்தது மகிழ்ச்சி. நன்றி.

-ஹேமலதா. கு
தேனி

நூல் விபரம்

நூல் பெயர்: ஆதுர சாலை

ஆசிரியர் : அ.உமர் பாரூக்

விலை : 400 ரூபாய்

பக்கங்கள் : 375

பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை.

 

4 Replies to “ஆதுர சாலை – ஒரு மருத்துவ ஊழியனின் கதை”

  1. அருமையான ஆழமான புத்தக அறிமுகம்.படிக்கத் தூண்டும் படியான விமர்சனம்.எளிமையான நடையில் கருத்துக்களை முன்வைத்துள்ளார் தோழர் ஹேமா.வாழ்த்துகள் தோழர்.💐💐👏👏👌👌👍👍🤝😍

  2. மிகவும் அருமையான,விரிவான,தெளிவான,புத்தகத்தையே சுருங்கிய விமர்சனம் வாழ்த்துகள் தோழர் ஹேமலதா அவர்களுக்கு 🌹🌺🌹👏👏👏👌👌👌🌺🌹🌺

  3. ஆதுர சாலை கையில் எடுத்து பின்னர் முழுவதும் படிக்காமல் வைக்கும் நிலையில் நான் இல்லை. இன்நாள்வரை நான் ஒரு புத்தகத்தை இவ்வளவு சீக்கிரம் படித்து முடித்தது இல்லை. சிலசமயம் கனவுகளில் அன்பு வந்து எழுப்பி விடுகின்றார். மருத்துவம் என்றால் என்ன மரணம் என்றால் என்ன என்று மிகவும் ஆழமான புரிதல் தந்துள்ளார்.

    வாழ்த்துக்கள் தோழர்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.